Friday 19 January 2018

மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.
ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித்தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. தன் இளம்பிராயத்தில் பிடித்த மாடு ஒன்றினைப் பற்றி பாலமேட்டில் ஒரு பெரியவர் சொல்லும் போது அவரது கண்களில் அந்த நாளின் வெளிச்சம் பீறிட்டது. அவர் தன் சட்டையை அவிழ்த்து தனது அடிவயிற்றை காட்டினார். அங்கே ஒரு விரல்நீள தழும்பு இருந்தது. மாடு கிழித்தது என்று சொல்லியபடியே. ரத்தம் ரொம்ப ஒழுகி எனக்கு கண்ணைக் கட்டிகிட்டு வந்துச்சி. ஆனாலும் நான் பிடியை விடவேயில்லை. கடைசியில் நான் தான் ஜெயிச்சேன் என்றார்.
அதற்கு பரிசாக என்ன கிடைத்தது என்று கேட்டேன். அவர் ஒரு ரூபா என்று பெருமையாக சொன்னார். ஒரு ரூபாய்க்காக உயிரோடு போராடியிருக்கிறீர்களே என்றேன். அப்பிடியில்லை தம்பி. நம்ம உடம்பு எம்புட்டுக் கெதியா இருக்குனு எப்படி தெரிஞ்சிகிடுறது. மாட்டை பிடிச்சி பார்த்தா நம்ம உடம்பு எப்படியிருக்குனு தானா தெரிஞ்சிகிடலாம். என்று சொல்லிச் சிரித்தார்.
அந்த நினைவுகளைத் தொடரும்படியாக சொன்னேன்.அவர் பெருமூச்சிட்டபடியே சொன்னார்
அந்த வருசம் மாடுபிடிச்ச ராமு ஆள் எப்படியிருப்பான் தெரியுமா. உலக்கை மாதிரி உறுதியான உடம்பு. மாட்டை பிடிச்சான்னா உடும்பு மாதிரி விடவே மாட்டான். அவனை பாத்தா மாடுகள் பயப்படும். எங்கே போனாலும் ஜெயம் தான். ரெண்டு பேரும் ஒண்ணா தான் சுத்துவோம்.
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ராமுவைப் பாத்தேன். பெத்தபிள்ளைகளே வேண்டாம்னு துரத்தி விட்டுட்டாங்களாம். குடல்புண்ணாகி சிகிட்சை பண்ணிகிட்டு இருந்தான். உடம்பு ஈர்க்குச்சி மாதிரி இருந்துச்சி. தலைமயிர் கொட்டி போய் சிரட்டை மாதிரி தலை துருத்திகிட்டு இருந்துச்சி. என் மனசு கேட்கலை. பக்கத்தில போயி என்னய்யா ராமு இப்படியிருக்கேனு கேட்டேன்.
அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை. அவன் வயிற்றில பதினெட்டு தையல் போட்டு இருக்கு. அதை காட்டி நாம ஒண்ணா மாடு பிடிச்சமே என்று சொன்னேன். அவன் பதிலே பேசவில்லை. பச்சைப்பிள்ளை போல பொலபொலனு அழ ஆரம்பிச்சிட்டான். எனக்கும் தாங்கமுடியவில்லை.
அன்னைக்கு பூரா அந்தக் காலத்தில நடந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொன்னா பேசிகிட்டு இருந்தோம். இப்போ அவன் செத்துப் போயிட்டான். ஆனா வருசம் வருசம் நானும் ஜல்லிகட்டு போய் பாக்குறேன். அப்படி ஒரு பய இன்னும் வரவேயில்லே. என்றார். அந்த நினைவுகள் வெறும் கடந்தகால சுவடுகள் மட்டுமில்லை. அது ஒரு தீராத வலி. மறக்கமுடியாத இழப்பு என்று உணர முடிந்தது.
சில தினங்களுக்கு முன்பு எதையோ தேடிக் கொண்டிருந்தபோது ஜல்லிகட்டு நிகழ்விற்காக அலைந்த நாட்களின் ஒரு பழைய புகைப்படம் கையில் கிடைத்தது. அதை வைத்து பார்த்தபடியே இருந்தேன். காலம் எவ்வளவு வேகமானது. எவ்வளவு கடந்து போயிருக்கிறது. இன்று அந்த புகைப்படத்தில் உள்ள நாங்கள் யாவரும் ஏதேதோ துறைகளில் இருக்கிறோம். அவரவர் அளவில் சாதித்திருக்கிறோம். நாங்கள் இப்போதும் சந்தித்துக் கொள்வதுண்டு. தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் அன்றிருந்த நெருக்கம் இன்றில்லை. அந்த ஆவணப்பட நிகழ்வு ஒவ்வொரு மனதிலும் ஒரு பிம்பமாக பதிந்து போயிருக்க கூடும்.
இந்த புகைப்படத்தை பார்த்த போது ஜல்லிக்கட்டு பற்றி எழுதாமல் விட்டதை மறுபடி தொடர வேண்டும் என்று மனது ஏக்கம் கொள்ளத் துவங்கியது. கணிப்பொறியில் சேகரித்து வைத்திருந்த செல்லப்பாவின் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டை தேடி எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் எழுத நினைப்பது தரும் வசீகரம் எழுதிய எந்த படைப்பிலும் இருப்பதேயில்லை.
காலத்தின் போக்கில் மனதில் உறங்கிகிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் பீறிடுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவு அடுக்குகளில் கேட்க துவங்கியுள்ளது. இசை, நடனம் நாடகம், வீரவிளையாட்டுகள், நுண்கலைகள் என தமிழின் மரபுக்கலைகள் சார்ந்த நவீன சிறுகதைகள், கட்டுரைகள், நினைவலைகள் என யாவையும் ஏன் தொகுத்து ஒரே தொகுதியாக கொண்டுவரக்கூடாது என்றும் எண்ணம் உருவாகி உள்ளது.
ஒற்றைக்கண் கொண்ட அந்தக் காளையின் மனஇயல்பு இன்றைக்கும் வியப்பூட்டிக் கொண்டேதானிருக்கிறது. ஜல்லிகட்டின் பின்னால் இது போன்ற புதிர்மைகள் நிறையவே இருக்கின்றன.

No comments:

Post a Comment