Sunday 28 January 2018

காலத்தை வென்றவர்கள் சித்தர்கள். காய சித்தி கண்ட இத்தகைய சித்தர்களில் ஒருவர் ஓர் வீட்டு வாசலில் பிட்சை கேட்டு நின்றிருந்தார். வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த பெண் ‘ மன்னியுங்கள் சுவாமி கீரை மசியல் தயாராகிறது.  சிறிது  நேரத்தில் சமையல் வேலை முடிந்துவிடும். தாங்கள் எங்கள் இல்லத்தில் உண்டு எங்களுக்கு ஆசி கூறி அருள வேண்டும்….’ என வேண்டினாள்.
ஒப்புதலாக தலையாட்டினார். சுற்றும் முற்றும் பார்த்தார். அருகில் வினாயகர் கோவில் ஒன்று தெரியவே அங்கே போனார். அங்கு சுரங்கப்பாதை ஒன்று இருந்தது. அதற்குள் புகுந்தவர் அப்படியே நிஷ்டையில் ஆழ்ந்தார். நாட்கள் மாதங்களாயின  ஆனாலும் நிஷ்டையில் இருந்து எழவில்லை. சித்தர். அவரைச் சுற்றி கரையான் புற்று கட்டி மூடியது. காலங்கள் கடந்தன.  சுரங்கமும் வினாயகர் ஆலயமும் பூமியில் புதைந்து போயின.
கோவில் புதைந்த இடத்தில் அரசரும் அவரை சார்ந்தவர்களும் பயணிக்கும் பகுதியான ராஜபாட்டை உருவானது.
ஒரு நாள் அந்த நாட்டு அரசர் ராஜபாட்டை வழியாக தேரில் வரும்போது ஒரு இடத்தில் குதிரைகள் மிரண்டு நின்றன. சேவகர்கள் எவ்வளவு விரட்டியும் குதிரைகள் நகரவில்லை. இதனால் அதிர்ந்து போன அரசர் ‘ வீரர்களே இங்கு ஏதோ விசேஷம் இருக்கிறது. இந்த இடத்தை தோண்டுங்கள்…….’ என உத்தரவிட்டார்.  அதன்படி சேவகர்கள் பூமியை தோண்ட கோவிலும் சுரங்கபாதையும் வெளிப்பட்டு கரையான் புற்றால் மூடப்பட்டிருந்த சித்தரின் வடிவமும் தெரிந்தது.
தகவலறிந்த அரசர் யாரோ சித்த புருஷர் போலிருக்கு மண்ணால் மூடப்பட்ட இவரை பூ போல எடுத்து தேரில் வைத்து அரண்மனைக்கு கொண்டு வாருங்கள்….’ என கட்டளை இட்டார்.  அரண்மனையில் சித்தரை மென்மையாக நீராட்டினர். மண்ணெல்லாம் கரைந்து சித்தரின் முழு வடிவம் வெளிப்பட்டது. பணிவிடைகளால் சமாதி கலைந்தார்  கண்களை திறந்ததும் கீரை மசியல் தயாராகி விட்டதா……………..’ எனக்கேட்டார் சித்தர்.p1010366
அங்கிருந்தோருக்கு எதுவும் புரியவில்லை. அரசர் சித்தரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறி சித்த புருஷரே………………. கீரை மசியல் என்று ஏதோ சொன்னீர்களே…………. எனக்கு ஒன்றும் புரியவில்லை…….’ என்றார்.  மன்னா……………….. பிட்சைக்காக ஒரு வீட்டு வாசலில் நின்றபோது கீரை மசியல் தயாரானதும் பிட்சை இடுவதாக  சொன்னாள் அவ்வீட்டு இல்லத்தரசி.  அதனால் அருகில் இருந்த ஆனைமுகன் ஆலயத்தில் நிஷ்டையில் அமர்ந்தேன்.  இப்போது நீ சொல்லித்தான் காலங்கள் பல கடந்ததை அறிகிறேன்………’ என்றார்.
அரசர் வியந்து சித்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அவருக்கு ஆசிகள் கூறிய சித்தர் அங்கிருந்து புறப்பட்டார். அந்த சித்தர்தான் திருமூலர்.  உமாபதி சிவம் சிதம்பரம் நடராஜர் பற்றி எழுதிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் என்னும் நூலில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment