Monday 29 January 2018

வாடிவாசல் - சி. சு. செல்லப்பா
"மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையை கண்டு விட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிவதை சாதகமாக செய்திருகின்றார்கள். அந்தக் கோதாவுக்குள் ஒத்தைக்கு ஒத்தையாக இறங்கும் மனுஷனுக்கும் மாட்டுக்கும் நடக்கிறப் பலப் போட்டியில் இந்த இரண்டிலொரு முடிவு காணும் - அந்த வாடிவாசலில்"
அந்த முடிவை காண வரும் இரண்டு இளைஞர்களை மையமாக கொண்டது இக்கதை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு. காளைகளுக்கு அது விளையாட்டல்ல, மாடு அணைபவர்களுக்கும் அது விளையாட்டல்ல.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை / தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் ஒரு ஜல்லிக்கட்டு கூட பார்த்ததில்லை. எங்கள் ஊர் அருகில் உள்ள பல்லவாரயன் பட்டி ஜல்லிக்கட்டு பிரபலமானது. எங்கள் ஊரிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது என்றும், ஜாதிக் கலவரத்தினால் அது மறைந்து போனது என்றும் கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்த ஜல்லிக்கட்டு எல்லாம் சினிமாவில்தான். ரஜினி தன் கராத்தே மூவுடன் மாட்டை அடக்குவதும், கிராமராஜன் பாட்டு பாடி அடக்குவதும் மட்டுமே நான் பார்த்த ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டை பார்த்ததில்லை என்ற குறையை இந்நாவல் போக்கி விட்டது. ஜல்லிக்கட்டு என்பது இன்று பல இடங்களில் முன்பகை தீர்க்கும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. இங்கும் அதுதான், ஆனால் பகை காரிக் காளை மீது. தன் அப்பனால் அடக்க முடியாத காளையை அடக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் வரும் பிச்சி அவனுக்கு துணையாக வரும் மருதன். இவர்களுடன் சாதரணமாக பேசி அவர்களுடன் நெருங்கும் கிழவன், காளையை தன் கவுரமாக நினைக்கும் ஜமீந்தார். இவர்கள்தான் இக்கதையின் முக்கிய மனிதர்கள்.
ஒரு மிருகத்தை அடக்குவதை பெருமையாகவும்,தான் வளர்க்கும் மிருகம் தோற்பது என்பது தனக்கான தோல்வியாக எண்ணுவதும், பார்வையாளனாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை தன் வாழ்வின் ஒரு பகுதியாக எண்ணுவதுமாக பல மனிதர்களின் குணங்களை அருமையான நடையில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
"ஏன் தாத்தா, சும்மா போகிற மாட்டுமேல மனுசன் விளறதே ஒரு விளையாட்டுத்தானே, இல்லீங்களா? சொல்லுங்க. ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாட்டாத்தான இருக்கு."
ஜமீந்தார் என்னதான் காரிக்காளையை தன் பெருமைக்கான அடையாளமாக கருதினாலும், களத்தில் காளையை அணைபவனுக்கு காளைதான் தெரியும், அதைப் பிடித்திருப்பவன் தெரியாது என்ற உண்மையை உணர்ந்து, அவரே தன் காளை பிடிபடுவதை பார்க்க ஆசைப்படும் உள்மனதை சட்டென்று வெளிக்காட்டுகின்றார்.
மாடு அணையும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக நம் கண் முன்னால் நடப்பதை போல காட்சிப்படுத்தியுள்ளார். அந்த பேச்சுவழக்கு எனக்கு எங்களூரைச் சேர்ந்த யாரோ பக்கத்தில் அமர்ந்து கதை சொல்வது போலவே இருந்தது. பலவிதமான காளைகள் அதன் குணங்கள், அணைபவர்களின் நினைவுகள், அவர்களின் நுட்பங்கள், பார்வையாளர்களின் மனத்நிலை என அனைதைப் பற்றியும் பல தகவலகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. இரவு பதினொன்று மணிக்கு அரைத்தூக்கத்தில் இது என்னதான் கதை என்று எடுத்தவன், முழுத்தூக்கமும் கலைந்து ஆழ்ந்துவிட்டேன்.
மொத்தத்தில் அருமையான நடையில் அமைந்த ஒரு அற்புதமான நாவல். தவறவிடக் கூடாத ஒரு புத்தகம்.

No comments:

Post a Comment