Tuesday 30 January 2018

பொழுது உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. புங்கமரத்து நிழலில் அமர்ந்திருந்த நாளிமுத்தன் மீண்டும் ஒருமுறை பாதையை எட்டிப் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. தூரத்தேயிருந்த மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊர்த்திருவிழாவில் பெருங்குரலெடுத்து ஊதும் சங்குச்சத்தம் காற்றில் கலந்து வந்தது.
அவனுக்கு முன்னால் கீறப்பட்டிருந்த பதினெட்டாங்கரத்தின் கோடுகளை வெறித்துப் பார்த்தான்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவனும் சேக்காளிகளும் அந்தப்புங்கமரத்துக்கு வந்துவிடுவார்கள். அந்திசாயும் வரை ஆடுபுலி ஆட்டம்தான். அதில் நாளிமுத்தன் மகா கெட்டிக்காரன். அவனுக்குச் சரியான போட்டி நஞ்சுமல்லன்தான். அவர்கள் இருவரும் ஆடாகவும், புலியாகவும் மாறிமாறித் தங்களது காய்களைக் கணக்குப் போட்டு நகர்த்தும் அசைவுகளை ஆரவாரத்துடன் கொண்டாடிக் களிப்பார்கள் சேக்காளிகள். அந்தி சாயும்வரை ஆட்டம் கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும். இன்றைக்கு எல்லாப்பயலுகளும் திருவிழாவுக்குப் போய்விட்டார்கள் போல..
உச்சிவெயில் புங்கமரக்கிளைகளின் இடுக்குகளில் புகுந்து அவனது கருத்த திரேகத்தில் சூடாய் இறங்கியது. சரி நாமும் இனி திருவிழாப்பக்கம் போக வேண்டியதுதான் என்ற நினைப்புடன் மெல்ல எழுந்தான்.
“என்ன முத்தனாரே எழுந்திட்டீங்க..?” என்று குரல் கொடுத்தவாறு எதிரில் வந்து கொண்டிருந்தார் வையப்ப பண்டிதர்.
பண்டிதர், அந்த ஊரின் பிரசித்திபெற்ற முடிஅலங்காரக் கலைஞர். அதுமட்டுமல்லாது கவிதைகள் பாடுவார், வெண்பாக்கள் புனைவார். யாருக்காவது காலில் முள்தைத்து விட்டால் அதை கவிதைகள் பாடியே சொக்கவைத்து வலிதெரியாது எடுத்து விடுவதில் வல்லவர்.
“வணக்கம் பண்டிதரே... என்ன இந்த வழியாக...?” என்று முகமன் கூறினான் முத்தன்.
“ஆமாம் அய்யா... நம் நாகசங்கனுக்கு முகவேலை செய்து வந்தேன்... நீங்கள்?”
“ஆடுபுலி ஆட்டம் விளையாட சேக்காளிகளுக்காய் காத்திருந்தேன் யாரையும் காணோம்...”
“ஓ... அப்படியா...” என்றவர் புங்கமர நிழலுக்குள் நுழைந்து ஆட்டத்தின் கோடுகளைக் கவனித்தார், அவர் முகம் சட்டென மலர்ந்தது.
“வாருமே நாம்தான் அதை விளையாடிப் பார்ப்போம்...” என்று தனது கக்கத்தில் வைத்திருந்த அடைப்பத்தைக் கீழே வைத்துவிட்டு ஆட்டக்கோடுகளின் முன் உட்கார்ந்தார் பண்டிதர்.
“நீங்கள் அங்கு அமரக்கூடாது. அது வலங்கைச்சாத்தர்கள் அமரும் இடம்...”
“ஆட்டத்தில் வலங்காரம் இடங்காரம் இல்லையென்று, பாண்டவ கதையின் கர்ணபர்வத்தில் பாடப்படுவதை நீங்கள் கேட்டதில்லையா...?” என்று கால்களைச் சம்மணமிட்டு உட்கார்ந்தவாறே ஏறிட்டு நோக்கினார் பண்டிதர்.
முத்தன் பதிலெதுவும் தோன்றாமல் மூன்று புலிக்காய்களை எடுத்துக்கொண்டு ஆடுகளுக்குரிய 18 காய்களை பண்டிதரிடம் ஒப்படைத்தான்.
“ம்... சரி, பந்தகத்தொகை வையுங்கள் பண்டிதரே...” என்றபடி ஒரு புலிக்காயை ஆட்டத்தின் கோபுரத்தில் வைத்தான் முத்தன்.
“பந்தகமா...? நாமாடுவது சூதல்லவே.. பொழுது கழிவதற்குத்தானே..” என்று சிரித்தார் பண்டிதர்.
“பண்டிதரே, ‘ஆட்டமென்று வந்துவிட்டால் சூதும்வாதும் வேண்டுமால் சிறிதே..’ என்று அதே கதையின் பகடையாட்டத்தில் சொல்கிறார்களே.. உங்களக்குத் தெரியாதா..?”
“ஆஹா ஆஹா ஈது யாருடைய செய்யுள்...?”
“அதுவொன்றும் அறியேன்... உங்களைப்போன்ற பண்டிதர்கள் உதிர்த்த சொற்களில் கொஞ்சம் என்னிடம் தங்கிவிட்டது...”
“ஆனாலும் உமக்கான சொற்களை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறீரய்யா...”
இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.
பண்டிதர் தனது கையிலிருந்த ஆடுகளுக்கான காய்களில் ஒன்றை ஆட்டக்கட்டத்தில் வைக்கக் கையை நகர்த்தினார்.
“முடியாது பண்டிதரே.. ஆட்டத்திற்கான பந்தகத்தொகையை வைத்துத்தான் துவங்கவேண்டும்...” என்று தடுத்தான் முத்தன்.
“கையில் ஓரணா கூட இல்லையே அய்யா...” என்றார் வெறுமையாய்.
“கதைவிடாதீர்.. இப்போதுதானே முகவேலை செய்து வருகிறீர்..?”
“அதுசரி.. பணி முடிந்ததும் கனி கொடுப்பவர்கள் எத்துணை பேர்...”
வரகுத் தண்டின் கோந்தாழையை மெல்லுவது போல சப்பென்றாகிவிட்டது முத்தனுக்கு. சரி ஆட்டத்தை நிறுத்தி விடலாமென்பதுபோல யோசித்தவனின் மனதைக் கண்டு கொண்டவர், மேற்கொண்டு பேசலானார்,
“முத்தனாரே உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில்... என்னிடம் ஒரு சொல் இருக்கிறது. அதைப் பணயமாக வைப்போம்...” என்றார் தயங்கியபடியே.
“சொல்லா...?”
“ஆம், நானே இயற்றிய வடிவான சொல்”
நாளிமுத்தனுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அப்படி ஒரு வினோதமான பந்தகத்தை அவன் வாழ்நாளிலும் கேள்விப்பட்டதேயில்லை. அதேசமயத்தில் அந்தப் பந்தகத்தினுள் இருக்கும் புதிர் அவனுக்குள் ஒரு ஆவலையும் சவாலையும் தூண்டிக் கொடுத்தது.
இனம்புரியாத உத்வேகத்தில் தலையை அசைத்தவாறு ஆட்டத்தில் இறங்கினான் முத்தன்.
கடகடவென்று 18 ஆடுகளையும் ஆட்டக்களத்தில் நிறுத்தினார் பண்டிதர். ஆனால் அந்தக்கட்டுக்குள் முத்தனின் புலிகள் அகப்படாமல் தறிகெட்டு ஓடின. தாவித்தாவிப் பண்டிதரின் ஆடுகளைத் தின்று தீர்த்தன. பண்டிதரும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு என்னென்னவோ செய்து பார்த்தார். இறுதியில், நாளிமுத்தனின் வெற்றியில் சிரித்தது ஆட்டம்.
பண்டிதர் தனது சொல்லைக் கொடுத்துவிட்டு ஆயாசத்துடன் எழுந்தார். முகம் முழுவதும் சாரமிழந்து நெற்றிச்சுருக்கங்கள் பிரிந்தோட, மெல்ல மேற்குப்பக்கமாக நடந்தார்.
முத்தன் அவர் எதையோ தொலைத்தபடி பேசாமல் போவதையே வியப்புடன் பார்த்தவனாய், அந்தச் சொல் பற்றிய உருவமற்ற உருவகத்தை வேடிக்கையாய் உணர்ந்தான். அந்த அங்கதத்தை மேலும் பரிசோதித்துப் பார்த்துவிடுவதென்று வாணிபத்தெருவை நோக்கி நடந்தான்.
வாணிபத்தெரு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பல்வேறுபட்ட அங்காடிகளில் சனங்கள் குழுமி நின்று செலவு செய்து கொண்டிருந்தனர். கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை போன்ற உணவுத் தானியங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்த அங்காடிக்குள் நுழைந்தான் முத்தன். உரிமையாளனிடம் மெதுவாகத் தயங்கியவாறே அருகில்சென்று ‘தன்னிடம் ஒரு சொல் இருப்பதாகவும் அதை வைத்துக் கொண்டு ஒரு ஆழாக்கு வரகு வேண்டுமென்றும்’ தெரிவித்தான். அவன் கேட்டது அங்காடிக்காரனுக்கு ஏதும் புரியவில்லை. ஒருவழியாய்ப் புரிந்தபோது, முத்தனை இகழ்ச்சியுடன் நோக்கினான். பைத்தியத்தை வெளியில் துரத்தியடிக்கும் வெறுப்புடன் பணியாளை அழைத்து அவனை வெளியேற்றச் சொன்னான். முத்தன் அவமானத்துடன் வேறொரு அங்காடிக்குள் நுழைந்தான்.
அளம், ஆபரணம், வளையல், மாடுகட்டும் தளைக்கயிறு, வரகு கிள்ளும் கம்பரகத்தி என்று பல்வேறு அங்காடிகளுக்குள் நுழைந்து பார்த்தான். அவனை அடிக்காத குறையாக கழுத்தை நெட்டி வெளியே தள்ளினர்.
ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் குன்றிப்போனவனாய் நிராதரவாக வாணிபத்தெருவில் திக்கில்லாமல் நடந்தான். தன்னிடம் உள்ள சொல் வாணிபத்திற்கு உகந்ததல்லவா என்று எண்ணமிட்டான். வேடிக்கையாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் பட்டது. சனங்களின் அங்காடி இரைச்சல்கள் செவிப்பறைகளில் மோதியறைந்தன.
அந்தத் தெருவின் ஓரத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஒரு கிளிக்காரன் பச்சைக்கிளிகளை இரண்டிரண்டாகப் பரப்பி வைத்து ‘ஒரு பணத்துக்கு ஒருகிளி’ என்று கூவிக்கொண்டிருந்தது கவனத்தைக் கவர்ந்தது. இறகு பிடுங்கப்பட்ட கிளிகள் கீக்கி என்று ரெக்கைகளை அடித்துக் கொண்டு எழும்பிக் கீழே விழுந்து நடைபயின்று கொண்டிருந்தன. அவனருகில் சென்று கிளிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த முத்தன், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
அந்தத் தருணத்தில் ‘ஹோயோ... ஹோயோ...’ என்று ராகமொலிக்கும் கூட்டுக்குரல்கள் கேட்டன. சட்டென வாணிபத்தெரு பரபரப்படைந்தது. சனங்கள் இங்குமங்கும் பதட்டத்துடன் ஓடினர். அங்காடிகளில் செலவு செய்து கொண்டிருந்தவர்கள் வீதியில் இறங்கி இருமருங்கிலும் குழுமி நின்று எதையோ எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த வீதியின் முனையில் ஒரு சிவிகை தோன்றியது. அது புகழ்பெற்ற கணிகையர் பெண்ணான மாணிக்கியின் வருகை. ராகம் பாடிக்கொண்டே சிவிகை நெருங்க நெருங்க அந்த வீதியே அல்லோல கல்லோலப்பட்டது. வீதியின் உப்பரிகையிலும் மேல்மாடத்திலும் பெண்கள் கூட்டம் அம்மியது. சிவிகை தூக்கிகள் ராகம் பாடிக்கொண்டு நடக்க நடக்க, அந்திக்காத்தின் அலையடிப்பில் சிவிகையின் திரைச்சீலை விலகி உள்ளே இருக்கும் முழுநிலவு முகம் தென்படாதா என்று படபடக்கும் இதயத்துடன் கண்ணிமை சிமிட்டாமல் பம்மிக் கிடந்தனர் சனங்கள்.
கீக்கி எனும் கிளிகளின் கிள்ளை அந்தச் சிவிகையை அடைந்து அவளை உசுப்பியது. மெல்லிய சல்லாவின் வழியே கிளிகளின் ரெக்கையடிப்பைப் பார்த்ததும், அவளது கரங்கள் அசைந்து சிவிகையின் வேகத்தை நிலைப்படுத்தின. சிவிகையின் பின்னே ஓடிவந்த தனது பெண்பணியாளை நோக்கி சமிக்ஞை செய்தாள்.
அந்தக் கணமே கிளிக்காரனிடம் ஓடினாள் பணியாள். நாளிமுத்தன் இந்தப் பரபரப்புகளில் எதிலும் தலைப்படாமல் எப்படியும் ஒரு கிளியையாவது வாங்கிச் சென்று விடவேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருக்க, அங்கு வந்த பணியாள் கிளியை வாங்க, இடையில் புகுந்து முத்தன் மன்றாட, வணிகத்திற்கு இடையூறாய் இருப்பவனைக் கிளிக்காரன் நெட்டித் தள்ள மல்லாந்து விழுந்தான் முத்தன்.
கிளிக்காரனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு புழுதியைத் துடைத்தபடி தள்ளி நிற்கும் முத்தனைப் பார்த்தபடி நான்கு கிளிகளை வாங்கிக் கொண்டு சிவிகையிடம் போனாள் பணியாள்.
கிளிகளைப் பெற்றுக் கொண்ட மாணிக்கி, ‘என்ன தகறாறு..?’ என்று விசாரித்தாள். பணியாள் நாளிமுத்தன் வியவகாரத்தைப் பற்றிச் சொன்னதும் ஆச்சரியமடைந்தவள், சிவிகையை இறக்கி வைக்க ஆணையிட்டாள். சிவிகை கீழே வைக்கப்பட்டதும் அந்த இடத்துக்கே உன்மத்தம் பிடித்தது போல சனங்கள் கட்டுக்கடங்காது குழுமினர். சிவிகை தூக்கிகள் சனங்களைக் கட்டுப்படுத்த திரைச்சீலையை விலக்கிக்கொண்டு வெளியே காலெடுத்து வைத்தாள் மாணிக்கி. தன் வாழ்நாளில் அப்படியொரு அழகைப் பார்த்ததில்லையென, தங்களது சென்மம் சாபல்யம் அடைந்து விட்டதாக மருகினர். பௌர்ணமி நிலவெடுத்துச்செய்த அவளது முகமும், கிறங்கடிக்கும் கண்களும், தலைவழியே இறங்கி நிலத்தைத் தொடும் அளகபாரமும், அவ்விடத்தை அலைபாய்த்தது. முகத்தைக் கப்பியபடி உடலெங்கும் இறங்கியிருந்த மெல்லிய சல்லாவின் வழி மறைபடாத திரண்ட கொங்கைகளின் கூர்வாளில் சிக்கிய சனங்கள் மாய்ந்து போயினர். வலதுபுறக்கொங்கையின் மேல்புறத்தில் சூலம் பொறிக்கப்பட்டிருந்தது. அவளது பால்வெண்மை மாறா உடலில் அந்த அச்சின் கருத்த கோடுகள் நீங்கமுடியாத தளையைப்போல அவளுக்குள் இறங்கியிருந்தது.
நாட்டிய அடவுகளின் நளினத்துடன் நாளிமுத்தனின் அருகில் சென்று, “இன்றிரவு என் இல்லத்திற்கு உங்களிடம் உள்ள அந்த சொல்லைக் கொண்டு வாருங்கள்... என்னுடன் ஓரிரவைக் கழித்து வரலாம்...” என்று ஒரு காந்தப் பார்வையை வீசிவிட்டுத் திரும்பி வந்து சிவிகையேறிக் கொண்டாள்.
‘ஹோயோ...ஹோயோ..’
சற்றைக்கெல்லாம் அங்கு குழுமியிருந்த சனங்கள் முத்தனைச் சூழ்ந்து கொண்டனர். கூட்டத்தை முட்டிப்பிளந்து கொண்டு அவனை வந்தடைந்த ஒரு பருத்த மனிதர், அவனிடம் நைச்சியமாகப் பேசினார். தான் பத்து வராகன் தருவதாகவும் அந்தச் சொல்லைத் தனக்குத் தந்து விடுமாறும் இறைஞ்சினார்.
பத்துவராகனா?
நாளிமுத்தனுக்குக் கண்கள் அகல விரிந்து கொண்டன. அப்போது அவனிடம் வந்து நின்ற மற்றொருவர், தான் இருபது வராகன் தருவதாகச் சொன்னார். சட்டென்று அவ்விடத்தில் ஒருபதற்றமான அலை தீயெனப் பற்றிக் கொண்டது. மாணிக்கி கணிகையின் உடலில் பற்றியிருந்த பெருநெருப்பு அது. 30, 40 என்று உயர்ந்து வந்த ஏற்றத்தை தடாலடியாய் ஒரு குரல் உடைத்தெறிந்தது:
“100 வராகன்”
அந்த இடம் விரல் நொடிப்பில் உறைந்துபோக முத்தனுக்குச் தலைசுற்றியாடியது. மறுபடியும் அந்த இடம் கொதித்துச் சூடேற 200, 300 என்று குரல்கள் உயர்ந்தன. முத்தனின் உடல் அந்தரத்தில் பறந்தது. இடிஇடிப்பது போல ஒருகுரல் முழங்கியது:
“1000 வராகன்”
நாளிமுத்தனை யாரும் பிடித்து வெளியில் தள்ளாமலேயே அந்தத் தெருவை விட்டு ஓடஆரம்பித்தான்.
அன்று இரவு நாளிமுத்தன் மாணிக்கியின் இல்லத்திற்குப் போனதும், அவள் அவனுக்காகவே வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து கைலாகு கொடுத்து அழைத்துப்போய் தனது சந்தனப் பொய்கையில் நீராட்டி, அவனது உடலின் அகில் புகை தூவி சப்பிரகூடமஞ்சத்தில் சீராட்டி, தனது உடலிலிருந்து கமழ்ந்த சுகந்த மணத்தைச் சுவாசிக்கக் கொடுத்து, தனது தேவஉடலில் அவனை உறவாடிக்களிக்க வைத்து ஏழேழு சென்மங்களுக்கும் போதுமென்று முத்தன் மாய்ந்து போனதும் நடந்தேகியது.
அதன்பிறகு முன்பு போல ஆட்டத்திலோ பணியிலோ நிலைகொள்ளாமல் ஒவ்வொரு நாளும் தான் கண்டது கனவா நனவா என்ற மயக்கத்திலும் கிறக்கத்திலும் காலவழுவமைதியில் கிடந்தான் நாளிமுத்தன். தனது உடலில் மிச்சமிருந்த மணத்தை அப்படியே தேக்கி வைத்திருக்க குளிக்காமலும் வெயிலுக்குக் காட்டாமலும் பொத்திப் பொத்திப் பேணினான். உடலையும் எண்ணங்களையும் முகர்ந்து கொண்டே காடு மலை வனந்திரங்களென்று கால்போன போக்கில் அலைந்து திரிந்தான். பௌர்ணமியின் முழுநிலவு தேய்பிறையாய் கழிவது போல அந்த மணம் தேய்ந்து கொண்டே போவதில் சூன்யத்தில் புகுந்து மனம் வெம்பிக் கிடந்தான் முத்தன்.
அப்படியான ஒருநாளில் வையப்ப பண்டிதர் வழியில் சந்தித்துக் குசலம் விசாரித்தார். நடந்தவைகளையெல்லாம் அவரிடம் சொல்வதா வேண்டாமா என்று ஒருகணம் பொங்கியவன் மறுகணம் அமைதியானான். பல்வேறு வியவகாரங்கள் குறித்துப்பேசிய பண்டிதர், “உங்களுக்குச் சேதி தெரியுமோ முத்தனாரே... மாணிக்கி என்னும் பொதுமகள் நனது நாட்டிய விருந்தில் கலந்து கொண்ட அரச காரியஸ்தர்கள் 18 பேரைக் கொன்றொழித்துவிட்டுத் தானும் தலைமறைவாகிப் போனாள்... அவளைப்பற்றித்தான் நாடுமுழுக்கச் சேதிபரவுகிறது...” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.
நாளிமுத்தனுக்கு ஒரேயடியாய் உடலும் உள்ளமும் குன்றிப் போனது. நாலாப்புறத்திருந்தும் பாலைக்காற்று வீசிச் சுழட்டியடித்தது. தலை மீது ஒரு பெரிய பாறாங்கால் அமுக்கியது. மேலும் ஓரடி எடுத்து வைப்பதற்குக்கூட முடியாது தடுமாறின கால்கள். அருகிருந்த சுமைதாங்கிக் கல்லின்மீது தனது சுமைகளை இறக்கி வைத்து அமர்ந்தான்.
அப்பொழுது செம்மண் புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்தப் பாதையில் புரவி ஒன்று விரைந்து வந்து அவனருகில் நின்றது. தலையில் உருமாலாய்க்கட்டியிருந்த சுங்குப்பகுதியில் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த குதிரையோட்டி, “அய்யா வேங்கை மங்களத்திற்குச் செல்லும் வழி எவ்வழி...?” என்று வினவ, அந்தக்கண்களின் வீச்சை தான் எங்கோ கண்டிருப்பதாக ஞாபகங்களில் தேடிக்கொண்டே, வழியைச் சுட்டிக் காண்பிக்க, இறுக்கியிருந்த கடிவாளக்கயிறு சுண்டியது.
அத்திசையில் கனைப்பொலியுடன் பாய்ந்தது பரி.
பாய்ச்சலின் எதிர்க்காற்றில் குதிரையோட்டியின் உடல் மீது கப்பியிருந்த கறுத்த அங்கி விலகிப்பறக்க பெண் உடலின் அம்சங்கள் எதிர்ப்பட்டன. வியப்புடன் நோக்கும் அவனது கண்களில் பட்டது, அவளது வலது மார்புப் பகுதியின் மேல் பொறித்திருந்த அச்சுக்குறியை தீயால் கருக்கி அழிக்கப்பட்டிருந்த தசைக்கோளம். காற்று வேகத்தில் கடுகியது புரவி.

No comments:

Post a Comment