Sunday 28 January 2018

ஆறு காரணங்கள்

நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !!
கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
நம் துன்பத்துக்கு யார் கரணம் ..?
நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம்.
உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..?
இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...
கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────●●●────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.
ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.
அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.
────●●●────
இரண்டாவதாக ஒரு முனிவர்...
முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.
────●●●────
மூன்றாவதாக இந்திரன்...
கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.
────●●●────
நான்காவதாகக் குந்தி...
கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.
────●●●────
ஐந்தாவதாகச் சல்லியன்...
கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.
────●●●────
ஆறாவதாகக் கண்ணன்...
கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.
────●●●────
ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment