Friday 19 January 2018

ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.....
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.
மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊர்வாகும் சேர்ந்தேயிருக்கிறது.
சில ஊர் மாடுகள் இயல்பிலே சற்று முறைப்பு கொண்டேயிருக்கின்றன. சிறாவயல் ஜல்லிகட்டில் ஒரு மாட்டினைக் கண்டேன். அது ஒரு கண் இல்லாத மாடு. வயதும் அதிகமானது போலிருந்தது. அடங்கிய கொம்புகள், காய்ந்து உலர்ந்த குளம்புகள். குறைந்த மயிர் கொண்ட வால், நெற்றிமேடு துருத்திக் கொண்டிருந்தது. அந்த மாடு நின்றவாகு ஒரு சாமுராய் வீரன் நிற்பதை போல கம்பீரமாகவே இருந்தது. அதன் பார்வையில் சலனமேயில்லை. அது ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே நிற்கிறது. அதன் சீற்றம் பெருமூச்சென எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
விடைத்த காதுகள் எழும்பி நின்றன. மாட்டின் கால் நுனி பாயத் தயாராக நிற்கிறது. அதன் உடலில் யாரோ மஞ்சள் பூசியிருக்கிறார் என்பது போல லேசாக ஒரு திட்டு படிந்திருந்தது. அது தன்னை பின்னால் இருந்து யாரும் வந்து பிடித்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது. ஆகவே பின்னால் நடந்து வரும் அரவம் கேட்டாலே அது சட்டென சுழித்துத் திரும்பி விடுகிறது. அது போலவே மாட்டின் இருள் அடைந்து போன கண் பக்கம் ஆள் வரும் போது அது தன்னை அவமதிக்கிறான் என்பது போலத் தலையை சாய்ந்துக் கொண்டு பார்க்கிறது.
முப்பது வயதுள்ள ஒரு மனிதன் அதை லாவகமாகப் பிடிக்க பதுங்கிப் பதுங்கி போகிறான். அரங்கம் அவனை வேடிக்கை பார்க்கிறது.காக்கிடவுசரும் வெற்றுடம்புமாக அவன் ஒட்டப்பந்தய வீரன் துப்பாக்கி சப்தத்திற்கு காத்திருப்பது போல விறைப்பாக நிற்கிறான். அவன் தொடும் தூரத்தில் போய் நிற்கும் வரை மாடு சலனமற்று நின்றபடியே இருந்தது.
அவன் மாட்டின் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அது இன்னமும் களைத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதை ஒடவிட்டு களைத்துப் போக விட வேண்டும் என்பது போல சீண்டுகிறான். அது பாயத்தயாராகிறதே அன்றி ஒட மறுக்கிறது. அவன் விடவில்லை. அதன் வால்பக்கம் போய்ச் சீண்டுகிறான். அப்போதும் அது காலால் புழுதியை பறக்கவிடுகிறது. கொம்பை ஆட்டித் துள்ளுகிறது. ஆனால் ஒடவில்லை.
அவன் விடவில்லை. மாட்டின் மீது பாய்வது போல பொய்பாய்ச்சல் காட்டுகிறான். மாடு ஆவேசம் கொள்கிறது. ஆனால் அவன் தப்பிவிடுகிறான். இந்த நாடகம் அதன் உச்சத்தை அடைகிறது. மாடு இப்போது அவன் தன்னை ஏன் பாய்ந்து அடக்க மறுக்கிறான் என்பது போல குமுறுகிறது. அவன் அதன் கொம்புகளைப் பார்த்தபடியே நிற்கிறான். அதன் கண்களில் வெறுமை தென்படுகிறது.
அவன் மாட்டின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் பாய்கிறான். அவன் கைகளில் மாட்டின் கொம்பு சிக்கிக் கொள்கிறது. மாடு திமிறுகிறது. அவன் கால்கள் இழுபடுகிறது. மாடு ஒடத்துவங்குகிறது. அவன் அதை எதிர்பார்த்தவன் போல ஒலமிடுகிறான். அது அவனை இழுத்துக் கொண்டு ஒடி உதற எத்தனிக்கிறது. அவன் விடவேயில்லை. மாடு தரையில் அவனை போட்டு தேய்த்துவிட முயற்சிப்பது போல முயற்சிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மாடு ஆவேசம் அடங்காமல் இழுக்கிறது. அவன் மாட்டின் கொம்புகளைத் திருக்குகிறான்.
மாட்டின் கண்கள் மேலோங்குகின்றன. அவன் கால்கள் மாட்டின் அடிவயிற்றுள் போய் பிணைந்து கொண்டது போலிருக்கிறது. மாடு துள்ளுகிறது. அவன் கொம்பை விடவேயில்லை. மாடு தன் இயலாமையை உணர்ந்து கொண்டதைப் போல மெல்ல சீற்றம் அடங்குகிறது. மாட்டின் குதம் வெளியே தள்ளுகிறது. அவன் மாட்டின் கொம்பின் பிடியை மேலும் இறுக்குகிறான். அது தடுமாறுவது போல சுழல்கிறது.
மாட்டினை அவன் வீழ்த்திவிட்டதாக நினைக்கிறான். வெற்றி அவன் கண்களுக்கு தெரிகிறது. அவன் மெல்ல தன்பிடியைத் தளர்த்துகிறான். இதற்காகவே காத்திருந்தது போல அந்த மாடு ஆவேசமாக சீறித் துள்ளுகிறது. அவன் நிலைதடுமாறுகிறான். மறுபடி பிடி வலுவாக கிட்டவில்லை. அவன் தடுமாறி கிழே விழுகிறான். கூட்டம் கத்துகிறது. மாடு புழுதி எழும்ப அவனை தூக்கி மேலே வீசுகிறது. அவன் பறக்கிறான். தரையை அவன் தொடும்முன்பாக மாடு மறுபடியும் தாக்க கொம்பை முட்டுகிறது. அவன் புரள்கிறான். ஒரு குத்து விழுகிறது. அவன் எழுந்து கொள்ள முயன்று முடியாமல் புரள்கிறான். அதற்குள் தொலைவிலிருந்து நாலைந்து பேர் அவனைக் காப்பாற்ற ஒடிவருகிறார்கள்.
மாடு கிழே விழுந்துகிடந்தவன் அருகே போகிறது. அவன் பூமியில் விழுந்து கிடக்கிறான். அவனது அரைடவுசர் கிழிந்து புழுதியோடு விதைக்கொட்டைகள் வெளியே தெரிகின்றன. அவன் வயிற்றை மாடு குத்திகிழிக்கப் போகிறது குடல் சரிய அவன் சாகப்போகிறான் என்றே கூட்டம் நினைத்தது.
ஆனால் அந்த மாடு விழுந்துகிடந்தவனின் முன்பு வந்து ஒரு சுற்றுசுற்றிவிட்டு நின்று கொண்டது. அவன் விழுந்துகிடந்தபடியே மாட்டையேப் பார்த்து கொண்டிருந்தான். யாரும் மாட்டை நெருங்க முடியவில்லை. பிறகு மாடு தானாக விலகி சற்றுத் தள்ளிப்போய்நின்று கொண்டது. நாலைந்து பேர் பாய்ந்து அவனைத் தூக்கினார்கள். அவன் மைதானத்தில் இருந்துவெளியேறி போகும்வரை அந்த மாட்டையே பார்த்து கொண்டேயிருந்தான். அவனது குருதி வழிந்து மணலில் உறைந்து போயிருந்தது. அந்த மாட்டை மூன்று பேர் சேர்ந்து பிடித்து அடக்கினார்கள். அவ்வளவு ஆவேசமான பொருந்துதலை என் வாழ்வில் அன்று தான் கண்டேன்.
அவன் பல வருசமாக அந்த மாட்டைப் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்றும் இன்று ஒரு பழைய கணக்கு தீரக்கபட்டிருக்கிறது என்றும் உள்ளுர் பூசாரி சொன்னார். என்னால் நம்பவேமுடியவில்லை. தன்னை பலமுறை வென்ற மனிதனை ஏன் மாடு குடலை கிழிக்காமல் வெளியே விட்டது ? என்ன உறவு அது. அந்த மாட்டினை அந்த மனிதன் மிகவும் நேசித்தான் என்கிறார்கள். அவன் ஜல்லிகட்டில் பிற மாடுகளைப் பிடிப்பதை விட இதற்காகவே வருகிறான் என்றும் அவனது ஊர் சிங்கம்புணரி என்றும் சொன்னார்கள். அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டேன்.
ரிசர்வ் போலீஸில் வேலை செய்கிறான் என்றார்கள். ஜல்லிகட்டில் பெரும்பான்மை மாடுபிடிப்பவர்கள் காவல்துறையில் வேலை செய்யும் இளைஞர்களே. அந்த மாட்டின் ஒரு கண் போனபிறகும் அதை எப்படி ஜல்லிகட்டில் அனுமதிக்கிறார்கள் என்று கேட்டேன். அதை வளர்ப்பவர் ஒரு சாராயவியாபாரி என்றும், அந்த மாட்டினை அவரது வீட்டு பெண்கள் தான் தயார்படுத்தினார்கள் என்றும் சொன்னார்கள்.
ஜல்லிக்கட்டிற்கு மாடு கொண்டுவரும்போது மட்டுமே அதை லாரியில் ஏற்றிக் கொண்டுவருகிறார்கள். ஜல்லிகட்டு முடிந்தபிறகு அந்த மாடு தன் வீட்டினைத் தேடி தானே போய்விடுகிறது. எனக்கு அந்த மாட்டின் வீட்டிற்குப் போய் காண வேண்டும் போலிருந்தது. மறுநாள் சிங்கம்புணரியில் உள்ள அந்த மாட்டின் உரிமையாளர் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அதே மாடு தொழுவத்தில் நின்றிருந்தது. மாடு ஜல்லிகட்டில் இருந்து வந்தவுடன் அதற்கு மஞ்சள் பத்து போட்டு விசேசமாக அரைக்கபட்ட தானியங்கள், அரிசி அரைத்த கலவை கலந்த உணவை தந்திருக்கிறார்கள். நேற்று பார்த்த அந்த ஆவேசம் இன்று மாட்டிடம் இல்லை. அது தளர்ந்திருந்தது. அடுத்த வருசம் அதை அனுப்பமுடியுமா என்று தெரியவில்லை. இந்த வருசமே சண்டை போட்டு தான் அதை சேர்த்தேன் என்றார் உரிமையாளர்.
அந்த மாட்டினை ஜெயித்த ஆளைப் பற்றி கேட்டேன். அவன் பலமுறை இந்த மாட்டினை அடக்கியிருக்கிறான். தோற்றுபோய் திரும்பும் மாடுகள் சில நாட்களுக்கு ஒடுங்கியே இருக்கும். வீட்டுப் பெண்கள் அதை கடுமையாக திட்டுவார்கள். மாட்டிற்கு அது புரியவே செய்கிறது என்றார். மாட்டின் கண்களில் முந்திய நாளின் ரௌத்திரமில்லை. அது ஈரம் ததும்பியிருந்தது. அதை அடக்க முயன்று காயம்பட்டவன் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தான். அது ஒரு பந்தம். மாடுகளுக்கும் இது விளையாட்டு என்று தெரியும் என்றாள் வீட்டுப்பெண்மணி.

No comments:

Post a Comment