Tuesday, 30 January 2018

ஆலிலை ஸ்ரீகிருஷ்ணரும் அவருடைய பக்தர்களும்
**********************************************************************
ஆலிலை மேல் துயிலும் ஸ்ரீகண்ணன்தான் இவ்வுலகத்தை ஆட்டுவிக்கிறார். நம் இதயம் போன்ற வடிவுடையதுதான் ஆலிலை. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களும் ஆலிலையில் நான்கு பகுதிகளாகும். ஆழ்வார்களின் ஆலிலை போன்ற இதயத்தில் ஸ்ரீ பரந்தாமன் எழுந்தருளியிருக்கிறார். ஆலிலை மேல் அமர்ந்துள்ள ஸ்ரீவாஸுதேவன் இல்லாமல் இப்பேருலகில் ஒரு அணுவும் அசையாது என்பது பேருண்மையாகும். ஆலிலைமேல் உறங்கும் ஸ்ரீகோபாலன் விரும்புவது ஆழ்வார்களின் அன்பையும் பக்தியையுமேயாகும். ஆலிலைக் கோவிந்தன் நடு உச்சியில் அடர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மர நிழலில் பசுக்களை இளைப்பாறச் செய்து, தன் புல்லாங்குழலில் இனிமையாக இசைத்து, பசுக்களை மகிழ்விப்பார். தானும் தன் களைப்பைப் போக்கிக் கொள்வார். ஸ்ரீ மாதவனான அந்தப் பரம்பொருளே ஏகப் பரப்பிரம்மம். மனிதர்கள் மற்றும் உயிருள்ள ஜீவராசிகளின் உறைவிடமாக உள்ளவனே ஸ்ரீகேசவன். ஆலிலையையே பரந்தாமனுக்கு, ஆதி சேஷ வாகனமாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் வாக்கே ஸ்ரீமத் பகவத் கீதையாகும். ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது தன் கால் கட்டை விரலைச் சூப்புவது வழக்கம். தேவர்கள், தவசிரேஷ்டர்கள், முனிவர்கள், தவசிகள் என்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் பாதார விந்தங்களில் பணிந்து வணங்குகிறார்கள். ஸ்ரீ விஷ்ணுவின் பாதக் கமலத்தைத் தரிசித்து மகிழ்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் போது, அவை ஸ்ரீ கண்ணனின் கால்களையும், பாதங்களையும் நக்கிச் சுவைத்து இன்புறும். அதனால், அப்படி தன் கால் கட்டை விரலில் என்ன அமிர்தம் போன்ற ருசி, தேன் போன்ற சுவை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே தான் ஆலிலையில் துயிலும் குழந்தையான ஸ்ரீ கண்ணனும், தன் கால் கட்டை விரலைச் சூப்புகிறாரோ என்று ஆழ்வார்களுக்கு நினைக்கத் தோன்றியிருக்கும் ஸ்ரீவாஸுதேவன் தன் பாதவிரலைச் சூப்புவது எதனால் என்றால், பூலோகவாசிகள் அதாவது அவருடைய பக்தர்களின் மனதைக் கவர்ந்து கொள்ளவும், அவர்களின் அன்பையும், பக்தியையும் பெறுவதற்கே என்று தத்துவ ஞானிகளான தவசிரேஷ்டர்கள் கூறுவார்கள்.
வாமனவதாரத்தில் ஸ்ரீதிருமாலின் புனிதமான திருவடிகள், அவர் மூவடி அளந்தபோது, சத்தியலோகம் வரை வளர்ந்தது. ஸ்ரீபிரம்மாவும் பெருமாளின் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்தார். ஸ்ரீ பரந்தாமனின் இடது பாதக் கட்டை விரலிலிருந்து அவருடைய மெய் பக்தர்களின் பாவங்களைப் போக்கும் ஸ்ரீபாத தீர்த்தமாக மிகப் புனிதமான கங்கை இப்பூமிக்கு வந்தது. இந்நிகழ்ச்சி பகவான் திருவருளேயாகும்.
இந்த பெருமாளின் கடலடித் தீர்த்தமே வைணவர் கோயில்களில் அமிர்தமாக பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமாக திருத்துழாய் சேர்த்து வழங்கப்படுகிறது. அதையடுத்து உடனே ஸ்ரீ விஷ்ணுவின் பாதார விந்தங்களின் அடியில், பெருமாளின் பாதுகையின் சம்பந்தத்தினால் என்றென்றும், ஒரு க்ஷண நேரங்கூடப் பிரியாமலிருக்கும் அற்புதத்தை பக்தர்களுக்கு எடுத்துரைக்கவே சடாரியும் சாத்தப்படுகிறது. பரதாழ்வாரால், அயோத்திக்குக் கொண்டு வரப்பட்ட, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு இராமப் பாதுகைகள் அயோத்தி நகரைப் பதினான்கு வருடங்கள் ஆட்சி செய்தன. ஆகையினால் ஸ்ரீதிருமாலின் பாதுகைகளும் பகவான் பாற்கடல்மேல் துயில் கொள்ளும் ஆதிசேஷனும், பன்னிரு ஆழ்வார்களும் ஒரே தத்துவமாகி ஆலிலையாக ஆதி காலந்தொட்டே என்றென்றும் நமக்கு அருள்மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இவற்றிலிருந்து, ஆலிலைமேல் துயின்று புவனம் அனைத்தையுமே ஆட்டுவிக்கும் சிறு குழந்தை கண்ணனின் வைபவம் பக்தர்களால் அளவிட்டுக் கூறிட இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமக்குத் தெளிவாக விளங்குகிறதல்லவா?

No comments:

Post a Comment