Thursday, 25 January 2018

விளக்கு

இரவு நேரம். மலையோரத்தில் அழகான குடிசை வீடு. அந்த வீட்டில் எண்ணெய் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கால் அந்த இடமே நல்ல வெளிச்சாமாக இருந்தது.
அந்த விளக்கை சுற்றி விட்டில் பூச்சிகளும் சிறு சிறு வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. விளக்கு பிரகாசாக எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பூனை,
‘ விளக்கே நீ சுடர் விட்டு எரிவதால் தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது.
இதற்கு யார் காரணம் ?’ என்று கேட்க,
விளக்கு பக்கத்தில் இருந்த தீப்பெட்டி சொன்னது;
‘ நான் தான் காரணம். நான் தான் இந்த விளக்கை பற்ற வைத்தேன்’ என்றது.
‘ இல்லை. இல்லை. விளக்கு எரிய நான் தான் காரணம், ஏனென்றால் நான் தான் விளக்கு எரிய எண்ணெய்யை இழுத்து மேலே கொடுக்கிறேன்’ என்றது விளக்கு திரி.
இதை கவனித்த எண்ணெய் சொன்னது, ‘ விளக்கு எரிய முக்கிய பொருளே எண்ணெய் தான். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம் ‘ என்றது.
‘ இவர்கள் எல்லோரையும் தாங்கி நிற்பது நான் தான். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்’ என்றது குடுவை.
எல்லோரும் விளக்கு எரிய நான் தான் காரணம். நான் தான் காரணம் என்று சொல்ல, பூனைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆந்தை சொன்னது,
‘ பூனையே நீ நாளைக்கு வா. தீப்பெட்டி, விளக்கு திரி, எண்ணெய், குடுவை இவர்களில் விளக்கு எரிய யார் காரணம் என்று சொல்கிறேன்’ என்றது.
மறுநாள் காலை விளக்கு அணைக்கப் பட்டது. அந்த வீட்டுக்காரர் விளக்கை தனி தனியாக கழற்றி துடைத்து காய வைத்தார்.
ஆந்தையும் பூனையும் வந்தன. தனி தனியாக இருந்த தீப்பெட்டி, விளக்கு திரி, எண்ணெய், குடுவை இவற்றை பார்த்து ஆந்தை சொன்னது,
‘ உங்களில் யாரால் தனியாக விளக்கை எரிய வைக்க முடியுமோ. அவங்க முன்னாடி வரலாம்’ என்று சொல்ல
நான்கு பேரும் திரு திருவென முழித்தனர்.
‘ நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது’ என்றது ஆந்தை.

No comments:

Post a Comment