Thursday, 25 January 2018

சுக்கு மல்லிக் காப்ப்பி
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கோவில் பட்டி வாரச்சந்தையில் (திங்கள்கிழமை) கணீரெனக் கேட்கும் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் முத்தையா தாத்தா.
பளபளவென விளக்கிய பித்தளைப் பானையும், கீழே தகர அடுப்பும் சேர்த்துக் கம்பிகளால் கட்டி சுக்கு வென்னீரின் சூடு கையை தாக்காமல் இருக்க தூக்குக் கம்பியை சுற்றி சணல் கயிறு சுற்றி பொதிந்திருப்பார்.

நெற்றி நிறைய விபூதி, வாய் நிறைய புன்னகையுடன் அவர் வந்து விட்டால் சந்தைக்கு வரும் பேர்வாதி ஆளுங்க ஆளுக்கு ஒரு கிளாஸ் வாங்கி குடிப்பார்கள்.
சந்தை முடிந்த பிறகு 7 மணிக்கு மேலும் மற்ற நாட்களிலும் கோவில்பட்டித் தெருக்களில் அவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சென்று விற்று விட்டு வீட்டுக்கு செல்ல மணி 10 ஆகிவிடும்.
கிட்டத்தட்ட 5 கிலோ எடையை சூட்டோடு 4 மணி நேரம் தூக்கிக் கொண்டு திரிவது அவ்வளவு சாதாரணம் அல்ல.
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருநாள் அப்படித்தான் ஒரு சந்தை நாளில் கூவிக்கூவிப் பார்க்கிறார். வியாபாரமே ஆகவில்லை.
மனம் சோர்ந்து
"பூவநாதா என்ன சோதனை இன்னைக்கி, ஏன் இப்படி சோதிக்கிற?"
என அவருடைய இஷ்ட தெய்வத்தை வினவியபடி அமர்ந்திருந்தார்.
மேலும் அரை மணி நேரம் ஓடி விட்டது. சரி இன்னக்கி குடுப்பினை அவ்வளவுதான். அடுப்பிலிருந்த கங்கை எடுத்து வெளியே போட்டு சுக்கு வென்னிக் காப்பியவே ஊத்தி அணைச்சார்.
ஒரு கங்கு மட்டும் காலியாகிடந்த வைக்கோல்
மேல விழ பதறிப் போய் கொத்தாய் அந்த வைக்கோல அள்ளி கால்ல போட்டு மிதிச்சார்.
மனசுல ஏதோ கருக்கென்றது. வைக்கோலை அள்ளிய இடத்தில் ஒரு துணிப்பை .
எடுத்துப் பார்த்தா பட்டுச்சேலையும் பை நிறைய நகைகளும்.
அவருக்கு என்ன செய்ய ன்னு ஒன்னும் ஓடல்ல.
சுத்து முத்தும் பாக்க யாருமே இல்லை, சந்தையே காலி.
அய்யோ, யாரு வீட்டு நகை யோ, காணாம எப்பிடித் தவிக்காகளோ, நம்மளாப் போயி கேட்டா எவனும் ஆமா, இது ஏம் நகை தான்னுட்டா என்ன பண்ண? இப்பிடி யோசிச்சு பையை வீட்டுக்கு கொண்டு வந்திட்டார்.
அதிலிருந்து எட்டு வாரம் திங்கள்கிழமை சந்தையில் பூரா நாளும் சுக்கு வென்னிக் காப்பியை வித்துக் கிட்டே யாராவது ஒருத்தராவது வந்து எம் நகைய தொலைச்சிட்டோம்னு, ஆவலாதி வருதான்னு பரிதவிச்சு வந்தாரு. ஒருத்தரும் வரல.
நேரே செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு போயி பூவனாத சாமி சந்நிதியில் மெளனமாக கண்ணீர் வழிய நின்று பார்த்துக் கொண்டே இருந்தவர் சரி என தலையாட்டி விட்டு வந்தார்.
இப்போது சுக்கு வென்னித் தாத்தா ஊரில் பெரும் தனவந்தர். பல ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்கிறார். அவரின் பிள்ளைகளும் நல்ல படி பெரிய வியாபாரிகளாக ஆகி விட்டனர்.
சரி, முத்தையா தாத்தா என்ன செய்கிறார்?
சுக்கு மல்லிக் காப்பி யேய்.

No comments:

Post a Comment