Thursday, 25 January 2018

என் கதை

1962-ல் திருநெல்வேலி சீமையில் தெற்கு கிழக்கு முனையில் ஒரு கிராமத்தில் பிறந்தேன்.
பின்னர் ஒரு வயது முதல் ஐந்து வயது வரையில் மும்பை சாந்தா குரூஸ் விமான நிலையம் அருகில் தகரக்கொட்டகை குடிசையில் தான் வாசம்.தினமும் விமானங்கள் ஓடு தளத்தில் (Runway) ஓடுவதை பார்த்து புளித்துப்போனது.
அப்பா ஒரு மில்லில் டெலிவரி வேன் டிரைவர் .துணி உருளைகளை கடைகடையாக கொண்டு போடும் பணி.தாணே வரைக்கும் போவாராம். அம்மா ரெண்டு அக்காள் ஒரு தங்கை ...பக்கத்தில் கள்ள சாராயக்கடை . பீப்பாய்களை சாக்கடை கால்வாயில் மறைத்து வைப்பார்கள். போலீஸ் சிலநேரங்களில் வரும்.ஒரே அடிதடி செம ரகளையாய் இருக்கும்...கோரைகானில் ஆரே பால்பண்ணை அருகில் அம்மா வழி தாத்தா குடும்பம் இருந்தார்கள். எப்போதாவது அங்கு போவோம் ...நல்ல நினைவு உண்டு ...
1967-ல் எனது கல்விக்காக ஊருக்கு அம்மாவோடும் இரண்டு அக்காள் ஒரு தங்கையோடும் வந்தோம்.
எங்கள் வீட்டின் கிழக்கில் சுமார் அஞ்சாறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் முழு வீச்சில் நடந்த காலம். பெரும்பாலும் புன்செய் பயிர்களே. சோளம் , காய் கறி வகைகள் ...சிறிய கிணறு ஒன்று இருந்தது..... அதில் கமலை ஏற்றம் உண்டு. 'கீக்கோ கீக்கோ' என ராட்டினத்தில் வடம் இழுபடும் ஓசை கேட்டு ஒரு பித்தளை சருவம் சின்ன டவல் எடுத்துக்கொண்டு அக்காள்கள் கூட நானும் சேர்ந்து ஓடுவோம் ...தெற்கு புறமாய் சிமென்ட் காலில் ஓடி இரண்டடி கீழே ஆற்றுமண் தரையில் விழுந்து கால்வாய் வழியே தண்ணீர் ஓடும். தண்ணீர் விழும் இடம் கொஞ்சம் விரிந்தது ..நிறைய பேர்கள் மண்ணை தோண்டி பள்ளம் பண்ணி மொண்டுக்குளிக்க வசதி பண்ணிக் கொண்டு நண்டும் சிண்டுமாய் நிறைய பேர்கள் குளிப்போம்...சில நாட்கள் அபூர்வமாய் நான் மட்டுமே தனியாக குளித்த வாய்ப்புக்களும் உண்டு...அப்படி நேரங்களில் சிமென்ட் கால்வாயில் ஓடி வந்து விழும் தண்ணீரில் தலை நீட்டி குளிப்பது சுகம்...சிலவேளைகளில் மணலில் படுத்து அரைகுறையாய் முங்கி குளிப்பேன்...
கிணற்று தண்ணீர் கொஞ்சம் உப்புக்கரிக்கும் சவக்கழிச்ச தண்ணீர் என்றாலும் வெள்ளிப்பளிங்கு சுத்தம்...
கிழக்கில் சில பனை மரங்கள் மேற்கில் ரெண்டே ரெண்டு தென்னை மரங்கள் .கிழக்கில் சூரியன் உதித்து சரியாக அந்த தென்னைகளுக்கு மத்தியில் மேலெழும்பும். அதை வைத்தே மிகத் துல்லியமாய் மணி கணக்கிடப் படும் ....அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். மனிதனின் நிழல் பூமியில் விழும் வகை வைத்து சிலர் மணி சொல்வார்கள் .அதுவும் கூட கிட்டத்தட்ட சரியாகவே இருக்கும்.

No comments:

Post a Comment