பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில்
பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய்
தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன்
முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்:
காட்டு நெருப்பு கலைத்த கலவியில்
உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய்
எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன்
பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும்
அடுத்த விநாடியே அரும்பு கட்டும் –
புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை
சமதளமாகி சந்தனமாகி
எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட
எழுந்து நதியாய் என்னை நனைக்கும்..
தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின்
சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும்
நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம்
தீரா வியப்பைத் தருவது போல்தான்
பரஸ்பர நிழல்களாய் படரும் நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் நீட்டமும் குறுக்கமும்:
பகடைக் காயின் பக்கங்கள் போல
உருளும் கணங்களின் உன்மத்தம் தெறிக்க
இரவின் மௌனம் கடையும் ஒலியில்
திரளும் அன்பும் திரளும் சினமும்
உருகும் உயிரில் ஒளியை வழங்கும்
No comments:
Post a Comment