Tuesday 23 January 2018

தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி
தாளமிடப் பாடுபவளாம்
அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்
உள்ளமெங்கும் ஆடுபவளாம்
கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்
கோயில்கொண்டு வாழுபவளாம்
விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ
வினைதீர்க்கும் அன்னையவளாம்
பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து
பூரணத்தை சுட்டுபவளாம்
வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து
சக்கரங்கள் தட்டுபவளாம்?
ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு
ஆனந்தமே நல்குபவளாம்
காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி
காவலென்று காக்கவருவாள்
அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை
அண்டியபின் என்ன கவலை?
பித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து
பேசுவதே இந்தக் கவிதை
முத்தியைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்
மோகினியின் கோயில் நுழைவோம்
எத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்
யாமளையின் பாதம் தொழுவோம்
கைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்
காசிஅன்னபூரணேஷ்வரி
மைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை
மெல்லச்சொல்லும் மந்த்ரேஷ்வரி
நெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க
நிற்பவளே காமேஷ்வரி
மெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்
மஹாமாயே ஜகதீஷ்வரி

No comments:

Post a Comment