Tuesday, 23 January 2018

கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் குரல்”.
அதன் முதல் பக்கத்தில்,”இது என்னுடைய புத்தகம். இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது. அன்பன்,கண்ணதாசன்”என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தார் கவிஞர். அவர் அடிக்கடி அந்தப் புத்தகத்தில் லயிப்பாராம்.
சைவப் பாரம்பரியமுள்ள செட்டிநாட்டுக் குடும்பத்தில் பிறந்து, சிறிது காலம் நாட்திக இயக்கத்தில் இருந்து, மீண்டும் பக்திநெறியிலே கலந்து ஆன்மீகத்தின் சாரத்தைத் தன் எழுத்துகளில் வடித்துக் கொடுத்த கவியரசு கண்ணதாசன், சமணத்திலிருந்து மீண்டபின்னும் சென்ற காலங்களை எண்ணி வருந்திய திருநாவுக்கரசர் போல் தன் வருத்தத்தையும் ஆங்காங்கே பதிவு செய்கிறார்.
“நல்லறிவை உந்தனருள் தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசிநின்றேன்
நடைபயிலும் சிறுவனொரு கடைவைத்த பாவனையில்
நாற்புறம் முழக்கி வந்தேன்
கல்வியறிவு அற்றதொரு பிள்ளையிடம் நீகொடுத்த
கடலையும் வற்றவிட்டேன்
கருணைமயிலே உன் நினைவுவரக் கண்டதன்பின்
கடலையும் மீறிநின்றேன்”
என்பது, சிறுகூடல்பட்டி மலையரசி அம்மையிடம் அவர் கொடுத்த வாக்குமூலம்.
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதப்போந்த அவரின் ஆன்மீகப் பயணம், தன் சிற்றூரின் தெய்வமாகக் குடியிருக்கும் மலையரசி அம்மையின் மலர்த்தாள்கள் பற்றித் தொடங்கியது.
“காட்டு வழிதனிலே-அண்ணே
கள்வர் பயமிருந்தால்
வீட்டுக் குலதெய்வம்-நம்
வீரம்மை காக்குமடா” என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பது போல்,பொதுவாழ்வில் கள்வர்கள் நடுவே பயணம் போன கவிஞரை அந்தத் தெய்வம் காத்தது.
சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் தோய்வுடன் கற்ற கவிஞருக்கு ஆதிசங்கரர் மேல் ஏற்பட்ட ஈடுபாட்டின் வேர் இன்னதென்று விளங்கவில்லை.ஆனால் ஆதி சங்கரர் அருளிச் செய்த சில நூல்களைத் தமிழில் எழுதும் அளவு அவரின் ஈடுபாடு வளர்ந்தது.
கனகதாரா ஸ்தோத்திரத்தை பொன்மழை என்ற பெயரில் தமிழ் செய்தார் கவிஞர்.இன்றளவும் பலராலும் அந்நூல் பாராயணம் செய்யப்படுகிறது.
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்
மாலவன் மீதுவைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுக்
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே”
என்பது அந்தத் தொகையின் முதல்பாடல்.
ஆதிசங்கரர் பல்வேறு பாஷ்யங்களை அருளியிருந்தாலும் பக்தி நெறியிலும் தத்துவநெறியிலும் அவரின் பங்களிப்புகளில் பெயர் பெற்றது,பஜகோவிந்தம்.அந்த சுலோகங்களை அருளியல் கொஞ்சும் அழகிய தமிழில் வடித்தளித்தார் கவிஞர்.
“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூட மதே
  சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
  நஹிநஹி ரக்ஷதி டுக்ரிஞ்கரணே” என்னும் சுலோகத்தை,
“பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை
     பாடிடுக மூடமதியே
  பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும்
     பரந்தாமன் சொன்னவிதியே
பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப்
     பற்றுவதில் நன்மைவருமோ
பாய்விரித்த வேளைதனில் காலனவன் சந்நிதியில்
      பாணினியம் காவல்தருமோ”
என்றெழுதினார். கவிஞர் செய்தது மொழிபெயர்ப்பல்ல. மூல சுலோகத்தின் கருப்பொருளை உள்வாங்கிக் கொண்டு அதைத் தமிழில் எழுதினார்.Trans creation என்னும் வகைமையைச் சார்ந்த எழுத்துகள் அவை.
போலித் துறவிகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள்.”குருட்டினை நீக்கா குரு” என்று திருமூலர் அவர்களை அடையாளம் காட்டுகிறார்.ஆதிசங்கரரோ “உதர நிமித்தம் பஹுக்ருத வேஷ” என்கிறார்.கவிஞர் அந்த சுலோகத்தை எடுத்துக் கொண்டு விளையாடுகிறார்.
” காவியுடை மொட்டையொடு
        கையிலொரு பாத்திரமும்
          காட்டுவது என்ன துறவோ
          கண்ணியமும் இல்லையதில்
            புண்ணியமும் இல்லைவெறும்
              கட்டைகளின் வேஷமல்லவோ
கோவணமும் நீள்சடையும்
        கோஷமிடும் வாய்மொழியும்
             கோமுனிவன் ஆக்கி விடுமோ
              கும்பியை நிரப்பவொரு
                 செம்பு சுமப்பார் அவர்க்கு
                    கோவிந்தன் காட்சி வருமோ”
என்கிறார்.
சில நூல்களைப் பற்றி சொன்னாலே அது தொடர்பாக ஓரிரு வாக்கியங்களை எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். அந்த நூலை அவர்கள் பார்த்திருக்கக் கூட வேண்டாம். திருவருட்பா என்று சொன்னால் போதும்..”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி நிறுத்தி விடுவார்கள்.கம்பன் என்றால் கேட்கவே வேண்டாம். ” அண்ணலும் நோக்கினான்.அவளும் நோக்கினாள்”.  பஜ கோவிந்தம் என்றால் ஒரு வரி. “புனரபி ஜனனம் புனரபி மரணம்”  .இந்த வரி அடங்கிய சுலோகம் பிறவியும் மரணமும் மாறி மாறி வருவதைக் குறிக்கிறது.
” புனரபி ஜனனம் புனரபி மரணம்
   புனரபி ஜனனி ஜடரே சயனம்
    இஹ சம்ஸாரே பஹுதுஸ்தாரே
    க்ருபயா பாரே பாஹி முராரே”>
இதை கவிஞர் பஜகோவிந்தத்தில் தமிழ் மணக்கத் தருகிறார்.
“தாய்வயிற்றிலே பிறந்து
      தானிறந்து மீண்டும் மீண்டும்
        தாய்வயிற்றிலே பிறக்கிறேன்
 தாரணிக்குளே இருந்து
      வான்வெளிக்குளே பறந்து
          தாரணிக்குளே நடக்கிறேன்.
ஓய்விலாத என்பிறப்பு
     மீண்டும் மீண்டும் யார்பொறுப்பு
        உன்னையன்றி வேறு காண்கிறேன்
 ஊரிலுள்ள ஜீவனுக்கு
      நீகொடுத்த வாழ்க்கையென்று
        உன்னிடத்தில் என்னை வைக்கிறேன்’
கவிஞர் இயேசு காவியம் எழுதிய பிறகு தான் சொந்த மதத்திற்கு இப்படியொரு காவியம் எழுத வேண்டுமென எண்ணி ஒரு முயற்சியைத் தொடங்குகிறார். அப்போதும் அவர் தேர்ந்து கொண்டது ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு.அந்நூலுக்கு கவிஞர் சூட்டிய பெயர்,”சங்கர காவியம்”.
ஆதிசங்கரர் அவதரித்த திருத்தலமாகிய காலடி பற்றி எழுதும் போது,
“முத்து விற்பபோல் முத்தி விற்றிடும் மோகமற்றவூர் காலடி” என்கிறார்.இதனை இரண்டு விதங்களில் பொருள் கொள்ளலாம்.
தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் முக்தியை முத்துப்  போல் எல்லோருக்கும் வழங்கக் குடியவர்களும் மோகமற்ற மனநிலை கொண்டவர்களுமான ஞானிகள் வாழ்கிற ஊர்” என்றொரு பொருள்.ஆன்மீகத்தை வியாபாரப் பொருளாக்கும் மோகமற்றவர்கள் வாழும் ஊர் என்றும் ஒரு பொருள்.
ஆதி சங்கரரின் பெற்றோர் எப்போதும் சிவசிந்தையிலேயே இருந்தவர்கள் என்பதை கவிஞர் சொல்ல வருகிறார்.இருவருக்குள்ளும் அந்தரங்கமான பொழுதுகளில் கூட சிவநாமமே பகிரப்படுமாம். சினம் கொள்ளும் சூழல் உருவானால் கூட சிவநாமம் மட்டுமே சொல்வார்களாம்!!
“தழுவுங்கால் இருவர் மூச்சும் சங்கரா என்னும்-விட்டு
 நழுவுங்கால் அதையே சொல்லும்-நல்லுணவருந்தும் போதும்
எழுங்கைகள் அதையே பாடும்- இடுங்கைகள் அதையே கூறும்
வழுவுங்கால் வார்த்தை கூட வன்சொல்லை அறியாதன்றே”  என்கிறார் கவிஞர்.
சிலநூறு பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்த நிலையில் கவிஞர் மறைந்தார். எனினும் இப்பாடல்கள் கவிஞரின் “முற்றுப் பெறாத காவியங்கள்” எனும் நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆதிசங்கரர் மேல் கவியரசர் கண்ணதாசன் கொண்டிருந்த ஈடுபாடு வியப்பையும் மகிழ்வையும் தருகிறது.

No comments:

Post a Comment