Tuesday 16 January 2018

எதிர் நாட்டு படையெடுப்பில் மனம் கலங்கிய மன்னர் செய்வதறியாமல் இருந்தார்.
எதிரியின் படைகள் 2000 பேர்கள். தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். எதிரி முற்றுகையிட்டால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் குழம்பி போய் இருந்தார்.
அப்போது அவர் குழப்பத்தை தீர்க்க ஒரு முனிவர் வந்தார்.
மன்னர் தன் நிலைமையை முனிவரிடம் சொன்னர். அதற்கு, முனிவர் " படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுங்கள்" என்கிறார். மன்னர் வியப்பாக முனிவரை பார்த்தார். போர் வர போகிறது. யுத்த திட்டங்கள் வகுத்தாக வேண்டும். இவர் என்னவென்றால் தன் படை வீரர்களுக்கு "விளக்கெண்ணெய் கொடுக்க சொல்கிறாரே !" என்று குழம்பினார்.
எப்படியும் 2000 பேர் கொண்ட படை வீரர்களை சமாளிப்பது கடினம். முனிவர் சொல்லுவதை செய்து பார்ப்போம் என்று தன் படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் விளக்கெண்ணெய் குடித்த படை வீரர்கள் பத்து பத்து பேராக கழிவறை சென்று வந்தனர். இதை பார்த்த மன்னருக்கு பயம் மேலும் அதிகரித்தது.
எதிரி படை வந்து விட்டதாக மன்னருக்கு செய்தி வருகிறது. எதிரி நாட்டு மன்னரிடம் ஒரு தூதுவன் சமாதானம் பேச அனுப்பியிருந்தான். மன்னருக்கு ஒரு ஆச்சரியம். சண்டைக்கு என்று வந்தவன் எப்படி சமாதானம் பேச ஆள் அனுப்புகிறான் புரியாமல் குழம்பி நின்றான். அப்போது தூதுவன் " ஒற்றன் மூலம் உங்கள் படை பலத்தை பார்த்தோம். பத்து பத்து பேராக உள்ளேவும் வெளியே வருவதை நோட்டம் விட்டோம். உங்கள் படைபலம் 5000 பேர் என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் பேச வந்திருக்கிறோம்" என்றான்.
மகிழ்ந்து போன மன்னர் புன்னகையுடன் சமாதானம் பேச சென்றார்...
"அன்றிலிருந்து விளக்கெண்ணெய் குடித்தால் எல்லா பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது." - இப்படி ஒரு கதை சொன்னது பகுத்தறிவாளரோ அல்லது எழுத்தாளரோ இல்லை. ஐந்தாவது படிக்கும் சிறுவன். குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நகைச்சுவை & சிந்திக்கும் திறன் சூழ்நிலைக்கேற்ப உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொன்ன கதை இது.

No comments:

Post a Comment