Thursday 11 January 2018

கார் டிரைவர்களுக்குத் திறமையும் சமயோசித புத்தியும் மிக முக்கியம்.
நான் ............. காரியாலயத்தில் வேலை செய்த நாட்களில் என்னிடம் ஒரு பழைய கார் இருந்தது. டிரைவிங் கற்றுக் கொள்வதற்குள் அக்கம் பக்கத்து சாலைகளிலிருந்து ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்.
ஆகவே, என் பிள்ளைகள் ஒரு டிரைவர் போட்டுத் தந்துவிட்டார்கள்.
அந்த டிரைவர் மகா மகா சாது. இளைஞன். ஆனால் மிகவும் பயந்தாங்கொள்ளி. லாரியெலலாம் ஒட்டுவதாகச் சொல்லி ஏதோ சில காகிதங்களையும் வைத்திருந்தான்.
அவனுடைய முக்கிய குணாதிசயம் என்னவென்றால் கார், கீர்மேல் மோதுவானே தவிர ஜனங்கள்மேலோ, வேறு வாகனங்களின் டிரைவர்களுடனோ மோத மாட்டான். சமாதான விரும்பி.
மிகுந்த நெருக்கடியான ஒரு நேரத்தை அவன் சமாளித்ததை என்னால் ஆயுளுக்கும் மறக்க இயலாது.
கீழப்பாக்கத்தில் சட்டக் கல்லூரி அமைந்திருந்த இடத்தைத் தாண்டித்தான் என் ஆபீஸ் இருந்தது.
சட்டக் கல்லூரி நெருங்கியதுமே என் டிரைவரின் கை கால் உதறத் தொடங்கிவிடும்.
காரணம், நாலு ரோடுகள் சந்திக்கும் ஜங்ஷன் அது.
மில்லர்ஸ் ரோடு, ஓட்டேரி ரோடு, புரசைவாக்கம், பூந்தமல்லி ஹை ரோடு.
இன்னும் ஓரிரு குறுக்குச் சாலைகளைக் கடந்துதான் என் காரியாலயத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு தினம் அந்த ஜங்ஷனில் என் கார் டிராஃபிக் ஜாமில் நன்றாக சிக்கிக்கொண்டுவிட்டது. சகல திக்குகளிலிருந்தும் ஹார்ன் சத்தங்கள் எங்கள் காரை மிரட்டின. நான் நிலைகுலைந்து போனேன்.
ஆனால் டிரைவர் ஒரு சிறிதும் கலங்கவில்லை. ஒரு அதிசய காரியம் செய்தான்.
வண்டியை ஆஃப் செய்து விட்டு அமைதியாகக் கீழே இறங்கினான். எலக்ஷனுக்கு ஓட்டு சேகரிப்பவர் கைகூப்பி எல்லாரையும் கும்பிட்டவாறு ஓட்டுக் கேட்பதுபோல ஓரொரு காரின், லாரியின் அருகில் போய் டிரைவருக்குப் பெரியதாகக் கும்பிடு போட்டு........
''அண்ணே மன்னிச்சுக்குங்க. கார் நின்னுடுச்சு. இதோ இப்ப எடுத்துடறேன்'' என்று சகல கார்க்காரன், லாரிகாரன் டிரைவர்களையும் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
சகல டிரைவர்களும் ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி அவனை வாழ்த்தி அருளி அவன் புறப்பட வழி செய்து தந்தனர்.
நன்றி கூறி விடை பெற்றான். ஏறக்குறைய பொதுக் கூட்டத்தில் ஒரு தலைவர் பேசி விடைபெறுவதுபோல அவர்களிடம் பிரியா விடைபெற்று அவன் அமர்ந்து காரை நிதானமாக ஸ்டார்ட் செய்தான்.
மிகப் பெரிய ரகளையாகி இருக்கவேண்டிய காட்சி மிக அமைதியாக முடிந்தது.

No comments:

Post a Comment