Thursday 11 January 2018

நண்பன் நாராயணன் வேலை பார்க்கும் காரியாலயத்தில் மானேஜர் மிகக் கெட்டிக்காரர்.
அவரது வேலையையும், சுறுசுறுப்பையும், புத்தி நுட்பத்தையும், சமயோஜிதத்தையும் நாராயணன் என்னிடம் புகழ்ந்து சொல்லியவாறே இருப்பான்.
அதிகாரியின் மாமனார் திடீரென்று காலமாகிவிட்டார்.
மரியாதை நிமித்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்த காரியாலயம் பூராவும் மாமனாரின் இல்லத்துக்குச் சென்றிருந்தது.
முக்கியமான நபர் இறந்துவிட்டார். ஆனால் முக்கியமான இன்னொரு நபர் வரவில்லை.
காரியம் செய்து வைக்கும் புரோகிதர்!
மானேஜர் துடிக்கிறார். குளிகன் வருவதற்குமுன் எடுத்தாக வேண்டுமென்று மானேஜர் படபடத்தார்.
அரை மணி கழித்து புரோகிதரை எங்கிருந்தோ தேடிப் பிடித்து ஸ்கூட்டரில் அழைத்து வந்தார்கள்.
மானேஜர் அவரைப் பெரும் திட்டாகத் திட்டிவிட்டு ''சரி. சரி. ஆகட்டும் சீக்கிரம்'' என்றார்.
புரோகிதர் நிதானமாக ''சட்டி வந்தாச்சா, பேரன்கள் வந்தாயிற்றா, நெய்ப் பந்தம் ரெடியா?'' என்று கேட்டவாறு ''ஸ்நானம் பண்ணுகிறவர்கள் பண்ணிவிட்டு வாங்க'' என்று சுறுசுறுப்பாக காரியத்தில் ஈடுபட்டவர் திடீர் நினைவு வந்தவராக ''ஆஸந்தி ரெடியா?'' என்றார்.
மானேஜர் தடுமாறிப் போய் ''என்ன கேட்டீர்கள்?'' என்றார்.
''பாடை ரெடியா என்று கேட்டேன்'' என்று புரோகிதர் பல்லைக் கடித்தார்.
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அப்படி ஒரு அயிட்டம் இன்று தேவை என்பதே யாருக்கும் நினைவு இல்லை.
மானேஜர் படு கோபத்துடன், ஆபீஸ் கேஷியரான இளைஞருக்குப் பளாரென்று ஓர் அறை விட்டார். ''ஏண்டா, அறிவில்லை'' என்று கத்திவிட்டு ''உனக்குப் பாடை கட்டத் தெரியுமா? புழக்கடையிலே தென்னை மரம் இருக்கு பார். ஒரு மட்டை வெட்டிகிட்டு வா. கத்தியைத் தூக்கிட்டு ஓடு!'' என்று கத்தினார்.
அவன் கெக்க பிக்க என்று நின்றான். ''எனக்கு மரம் ஏறத் தெரியாதே'' என்றான். மசாலா இல்லாமல் சமைக்கத் தெரியாதே என்ற மாட்டுப் பெண் மாதிரி.
மானேஜர் ''ஏண்டா, உன் கீழே பத்துப் பேர் உங்க டிபார்ட்மென்ட்டிலே வேலை செய்யறாங்க. ஒருத்தனுக்குக்கூட மரம் ஏறத் தெரியாதா? தென்னை மட்டை வெட்டத் தெரியாதா? பாடை கட்டத் தெரியாதா?'' என்று ஓவென்று கத்தினார்.
சிப்பந்திகளுக்குக் கை உதறியது. ஒருத்தருக்கும் தெரியாத விஷயம் அது. மானேஜர் கண்களில் தீப்பொறி பறந்தது.
''கொண்டாடா அந்த வெட்டரிவாளை'' என்று சிப்பந்தி கையிலிருந்த வெட்டரிவாள வெடுக்கென்று பறித்துக் கொண்டார்.
தார்ப்பாச்சு போட்டு வேட்டியை வரிந்து கட்டிக்கெண்டார். வெட்டரிவாளை இடுப்பில் செருகிக்கொண்டு கடகடவென்று மரத்தில் ஏறி ஒரு மட்டையை வெட்டிக் கீழே தள்ளினார். ஏறின வேகத்துடனே இறங்கினார்.
அடுத்த இருபது நிமிஷத்தில் அவரே ஒண்டியாகப் பாடையைக் கச்சிதமாகக் கட்டிவிட்டார்.
சிப்பந்திகள் வியப்புடன் அவரைப் பார்த்தனர்.
'நம்ம மானேஜர் ஒரு சகலகலா வல்லவர்! அவர் நம்மகிட்ட கத்தறதுதான் நமக்குத் தெரிகிறது. எந்த சிச்சுவேஷனையும் சமாளிக்கக் கூடியவர் என்பது இப்போது தெரிகிறது' என்று பேசிக்கொண்டனர்.

No comments:

Post a Comment