Tuesday, 23 January 2018

நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல்
நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும்
கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள்
குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும்
நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து
நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும்
ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே
உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும்
தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட
தடைகள்தான் உந்துசக்தி யாகும்- இங்கே
உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட
உலகத்தின் போக்குன்னை உந்தித் தள்ளும்
மின்போக்கில் போகுமொளி போலே நீயும்
முன்னேற்றப் பாதையிலே மோகம் கொண்டால்
முன்போகும் உன்பின்னே உலகம் போகும்
முன்வைக்கும் உன்னடிகள் பாதை போடும்
போர்வைக்குள் சுகங்கண்ட மனிதனுக்குப்
புதுவிடியல் புதிராகத் தோன்றும்-இங்கே
சோர்வுதனை சுட்டெரிக்கும் சுடராய் ஆனால்
சூரியப்பூ நீதிரும்பும் திசையைப் பார்க்கும்
தீர்வுகளை சாதிக்க நீயே போதும்
திணறல்தான் நீந்திவர நல்ல பாடம்
ஆர்வமெனும் ஆயுதம்நீ கொண்டால் போதும்
ஆயிரமாய் வெற்றிகளும் உன்னைச் சேரும்

No comments:

Post a Comment