Friday 19 January 2018

திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது.
ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள்.
இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த இழப்பும் குழப்பமும் இல்லை. தங்கள் வீட்டில் ஏதேனும் களவு போனால் அடுத்த வீட்டிலிருந்து திருடிக்கொள்ளலாம் என்கிற மன நிறைவோடு வாழ்ந்து வந்தனர்.
இப்படிப்பட்ட நாட்டில் வியாபாரம் எப்படி நடக்குமெனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வாங்குபவர் விற்பவர் இருவருமே மாறி மாறி ஏமாற்றிக் கொண்டார்கள். அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. குடிமக்களிடம் அரசு கொள்ளையடித்தது. மக்களும் பதிலுக்கு அரசாங்கத்தைத் தங்களால் முடிந்த அளவு ஏமாற்றினர். அந்த நாட்டில் ஏழை பணக்காரன் போன்ற பிரிவுகள் எல்லாம் கிடையாது. அனைவரும் திருடர்களே.
ஒரு நாள் அந்த நாட்டுக்கு எங்கிருந்தோ நேர்மையான மனிதன் ஒருவன் வந்து குடியேறினான். தினமும் இரவுகளில் அவன் திருடப் போகாமல் வீட்டிலேயே அமர்ந்து புகைபிடித்துக் கொண்டு புத்தகங்கள் படித்தான். அவன் வீட்டுக்கு திருட வந்தவர்கள் வீட்டில் ஆள் இருப்பதைக் கவனித்துவிட்டுத் திருடாமல் சென்றுவிட்டனர். இப்படியே சில நாட்கள் போனது. இவன் ஒருவனால் தினமும் யாரேனும் ஒருவருக்குத் திருட வாய்ப்பில்லாமல் போனது.
பொறுத்து பொறுத்துப் பார்த்த மக்கள் அவனிடம் ஒரு நாள் சென்று நிலைமையை எடுத்துக் கூறினர். அவனால் தினமும் ஒரு குடும்பம் திருட முடியாமல் பட்டினியால் வாடுவதை விளக்கினர். தன்னால் ஒரு குடும்பம் பட்டினியால் வாடுவதைக் கேள்விப்பட்டு அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயம் மற்றவர்கள் போலத் திருடவும் அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
தினமும் இரவு வேளையில் வீட்டில் இருந்தால் தானே பிரச்சனை? அதற்குப் பதிலாக அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்குச் சென்று பெருகி ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென முடிவு செய்தான். இதன் மூலம் அவன் வீட்டில் திருட வருவோருக்கு தடங்கல் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான். இப்படி அவன் தினமும் இரவு முழுக்கப் பாலத்தில் நேரம் கடத்திவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் பல பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களையும் இழந்தான்.
ஆனால் இப்போது பிரச்சனை அதுவல்ல. இவன் ஒருவனால் ஊரில் சமநிலை குலைந்து போனது. எப்படி என்று கேட்கறீர்களா? தினமும் இவன் நேர்மையாகத் திருடாமல் பாலத்திற்குப் போனதால், இவன் திருட வேண்டிய யாரோ ஒருவரது வீடு திருடப்படாமல் அப்படியே இருந்தது. அதே சமயம் காலியான அவன் வீட்டை திருட வந்து தினமும் சிலர் ஏமாந்து போயினர். திருடப்படாமல் விடப்பட்டவர்கள் நாளடைவில் பணக்காரர்கள் ஆயினர்.
தினமும் இவன் வீட்டுக்கு மாறி மாறி திருட வந்து ஏமாந்து போனவர்கள் ஏழைகள் ஆயினர். பணக்காரர்கள் காசு சேர்ந்ததும் அந்த நேர்மையானவன் போல அருகில் உள்ள பாலத்திற்குச் சென்று சுழித்தோடும் ஆறினை ரசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அப்படித் தினமும் பாலத்திற்குச் செல்வதில் அவர்களுக்கு ஒரு சிறு பிரச்சனை இருந்தது. நீரை ரசிக்கும் இரவு வேளைகளில் அவர்களால் திருட முடியாதே என்பது தான் காரணம். என்ன தான் செல்வம் சேர்ந்தாலும் அவர்கள் இன்னும் திருடர்கள் தானே? ஆதலால் அவர்கள் ஒரு யோசனை செய்தனர்.
தாங்கள் பாலத்திற்குச் செல்லும் இரவுகளில் தங்களுக்குப் பதிலாகத் திருட செல்வதற்குச் சில ஏழைகளை வேலைக்கு அமர்த்தினர். அந்த ஏழைகள் திருடி வருவதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது. சிலருக்கு நிலையான மாதச்சம்பளம் வழங்கப்பட்டது, ஒரு சிலருக்கு அவர்கள் திருடுவதில் குறிப்பிட்ட சதவீதம் சம்பளமாக வழங்கப்பட்டது. இப்படியாகத் திருடாமலேயே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆயினர், அவர்களுக்கு வேலை செய்த ஏழைகள் மேலும் ஏழைகள் ஆயினர்.
ஒரு கட்டத்துக்கு மேல் சொத்துச் சேர்ந்த பின், பணக்காரர்களுக்குத் திருட ஆள் அமர்த்துவது வீண் வேலையாகத் தோன்றியது. அவர்களிடம் சேர்ந்துள்ள செல்வத்தை யாரும் திருடாமல் பாதுகாத்தாலே போதுமெனத் தோன்றியது. எனவே ஏழைகள் சிலரை தேர்ந்தெடுத்துத் தங்கள் வீட்டை பாதுகாக்க வேலைக்கு அமர்த்தினர். யாரேனும் அவர்களிடம் திருடினால் அவர்களைத் தண்டிக்கச் சட்டம்,போலீஸ், சிறைச்சாலை ஆகியவற்றை உருவாக்கினர்.
காலம் உருண்டோடியது. இப்போது அந்த நாட்டில் யாரும் திருடுவதில்லை. மேலும் அந்த நாட்டில் இப்போது இரு பிரிவினர் மட்டுமே வாழ்கின்றனர் – பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்.
வெகு நாட்களுக்கு முன்னர் ஒரு நேர்மையானவன் வந்தான் அல்லவா? அவன் சில நாட்களிலேயே பசியால் வாடி இறந்து போனான்.

No comments:

Post a Comment