Tuesday 16 January 2018

விபரீத அனுபவங்கள் ரகுவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அவன் உறைந்து போனான் என்பது தெரிந்தது. பம்மல் வாசிகளான எனக்கும் ரமேஷுக்கும் பேய் சமாசாரம் பெரிய விஷயமில்லை என்றாலும்.. ஒரு பேய் தலையை இத்தனை அருகில் பார்ப்பது இதுவே முதல் தடவை.

முதலில் தயங்கிய ரகு மெள்ள முன்னேறி, தலையை ஒரு குச்சியால் தொடப்போக.. அது விர்ரென்று எழுந்து வேகமாக கிணற்றுச் சுவற்றில் மோதித் தெறித்து எங்கள் பின்கட்டுக் கதவில் மோதி சட்டென்று எங்கள் முன் வந்து புவ்வென்று விரிந்தது.. டெனிஸ் பந்து தரையில் விழ, எங்கள் முகத்தருகே ஒரு உருவம்.. அத்தனை பற்களும் ஆடச் சிரித்தது. "வரேண்டா!" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் காணாமல் போனது.

எத்தனை நேரம் வெலவெலத்திருந்தோம் என்பது நினைவில்லை. "தணிகாசலம் இருக்கார்டா.. அவர்கிட்டே சொல்லலாம்" என்றான் ரமேஷ்.

அதற்குள் ஸ்ரீராமைக் காணாமல் அரண்டோம். முப்பதடி தொலைவில் பம்மல் மெயின் ரோடில் நின்று கொண்டிருந்தான். "இங்க வாடா" என்று கூவினேன். அவன் அங்கிருந்தே, "காஞ்சிபுரத்துக்கு எந்தப் பக்கமா போவணும்? நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். "பயப்படாத.. நாங்க இருக்கோம்ல?".

எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் துர்கையம்மன் கோவிலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். கோவில் எதிரே இருக்கும் ஒற்றைப் பனைமரத்தடியில் இருந்த கருங்கல் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த பூசாரி தணிகாசலத்தை எழுப்பி விவரம் சொன்னோம்.

"கால் தெரிஞ்சுச்சா? கொலுசு சத்தம் கேட்டுச்சா? சிரிச்சப்ப எக்காளமா இருந்துச்சா? இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா? பல்லுலந்து ரத்தம் வந்துச்சா? கண்ணுலந்து முடி வந்துச்சா? தலைல கருமுடியா நரையா? உச்சந்தலைல ஆணி அடிச்சிருந்துச்சா? காது அறுந்திருந்துச்சா? கண்ணு ரெண்டும் சுத்துச்சா? கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா?...." என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.

"இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே?" என்று முணுத்தான் ரமேஷ்.

"எதுவும் கவனிக்கலியா தம்பி?" என்று என்னை நெருங்கினார் பூசாரி. "இத பாருப்பா. பேயுங்க பல வகை. இன்ன வகைனு தெரிஞ்சா... அதுக்கு ஏத்தாப்புல குறியடிச்சு ஓட்டலாம்.. பலி போட்டு ஓட்டலாம்.. வேப்பெல அடிக்கலாம்.. ஆணி அடிச்சு முடி கட்டலாம்.. பச்சைக்கோழி ரத்தம் குடிச்சு மோளம் கொட்டலாம்.. எதுவுமில்லேனு வை.. ஓடி ஒளியலாம்" என்றார். "என்ன பேய்னு தெரியாம இப்போ என்ன செய்ய?"

"தணிகாசலம்.. ஒரு குச்சியால ரகு தலையை நோண்டுனப்ப.. அது பிகுன்னு எங்க முன்ன விரிஞ்சு வந்துச்சு.. வரேண்டானு கூவிச் சிரிச்சு காணாம போயிருச்சு.." என்றேன்.

"சிரிச்சப்போ பல்லு மொத்தமும் ஆடிச்சு" சேர்ந்து கொண்டான் ரகு.

கொஞ்சம் யோசித்த பூசாரி, "தம்பி.. இது ரொம்ப டேஞ்சருபா.. பல்கொட்டியா இருக்கும் போலிருக்குதே? ரொம்ப ரொம்ப டேஞ்சரான பேய்பா" என்றார்.

No comments:

Post a Comment