பிறரது பண்புகளை உனக்குள் புகுத்தாதே. மற்றவர்களில் நீ மறைந்து போகாதே.
இது நிரந்தர வேதனை.பெரும்பாலானோர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே மறந்து விடுகிறார்கள். தங்களது குரல்களை, அசைவுகளை, வார்த்தைகளை, திறமைகளை, நல்ல பண்புகளை மறந்து விடுகிறார்கள். இறுதியில் தமது இருப்பையும் சுயசார்பையும் இழந்து போலித்தனமாக வாழ்கிறார்கள்; அதனால் அவதியுறுகிறார்கள்.
ஆதி மனிதர் முதல் கடைசி மனிதன் வரை ஒரே வடிவில் இருவர் இருக்க மாட்டார்கள். பிறகு எப்படி அவர்களது குணங்களும் திறமைகளும் ஒரே மாதிரி இருக்க முடியும்?
நீ மற்றொருவன். உலகில் உன்னைப் போல் வேறு எவரும் பிறந்திருக்க முடியாது. இனி பிறக்கவும் முடியாது.
நீ இவனை விட அவனை விட முற்றிலும் மாறுபட்டவன். எனவே கண்மூடித்தனமாக இவனை பின்பற்ற வேண்டும், அவனை போல வாழ வேண்டும் என உன்னை நீ வற்புறுத்தாதே.
நீ எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு வாழு. உனது குரலை பேச்சு நடையை மாற்றாதே. உனது நடை எதுவோ அவ்வாறே நட. அதற்கு மாறு செய்யாதே. வேத அறிவிப்புக்கு ஏற்ப உன்னை நீ செதுக்கு. ஆனால், உனது இருப்பை வீணாக்கி விடாதே. உனது சுதந்திரத்தைக் கொலை செய்து விடாதே.
உனக்கென ஒரு சுவை உண்டு. உனக்குரிய சுவையை சுவைத்து, நிறத்தை ரசித்து நீ வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஏனெனில், நீ இவ்வாறே படைக்கப் பட்டிருக்கிறாய்.
மனிதர்களின் பண்புகள் மரஞ் செடிகளின் உலகத்திற்கு ஒப்பானது. அவற்றில் சில இனிக்கும். சில புளிக்கும். சில உயரமாக இருக்கும். சில குட்டையாக இருக்கும்.
மனிதர்களின் பண்புகளும் இப்படித்தான் அமைந்துள்ளன.
எனவே, நீ வாழைப் பழத்தைப் போன்றவனாக இருந்தால், எட்டிக்காயைப் போல மாற நினைக்காதே. ஏனெனில், உனது அழகும், மதிப்பும் நீ வாழைப் பழமாக இருப்பதால் தான் கிடைக்கின்றன. நமது நிறம்,மொழி, திறமை,ஆற்றல் ஆகியவை வேறுபட்டிருப்பது இறைவனது சான்றுகளில் ஒன்று. அவனது சான்றை நீ மறுக்காதே.
No comments:
Post a Comment