Saturday 11 August 2018

துந்தி

உலகின் முதல் மனிதன் ஸ்வயம்புவ மனு; அவன் மனைவி சதரூபா.
அவர்களின் முதல் மகன் உத்தனபாதன், இரண்டாவது மகன் ப்ரியவ்ரதன்
உத்தனபாதனுக்கு இரண்டு மகன்கள் – துருவன் (சுநிதியின் மகன்); உத்தமன் (சுருசியின் மகன்).
துருவனின் வம்சத்தில் பின்னர் தோன்றியவன் ப்ரிது. அவன் நல்ல அரசன் தான். ஆனாலும் அவனுடைய ஆட்சியில் பல பகுதிகளில் திடீரென்று உணவுப் பொருட்கள் காணாமல் போய் மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்தனர். ப்ரிது, அதற்கு என்ன செய்வது என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாட சென்றிருந்த பொழுது, மிகவும் பசியுடன் இருந்தான். திடீரென்று, அவன் முன் ஒரு கிழப்பசுத் தோன்றியது. அதை வேட்டையாட அவன் துரத்திச் சென்றான்; அது அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்றது.
மிகவும் களைத்துப் போன அவன் ஒரு இடத்தில் தன் வில்லைக் கூடத் தூக்க முடியாமல் நிற்க, அந்த பசு ஒரு சிறு பெண்ணாக மாறியது.
உடனே மன்னன் அச்சிறுமியை நோக்கி, “மகளே! நீ யார்” என்று கேட்டான்.
அச்சிறுமி, “நான் ஒரு தேவபசு! கேட்டவர்களுக்கு அனைத்தையும் தரும் காமதேனுவைப் போன்றவள். ஆனால், இப்பொழுது எதுவும் அளிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டேன். அதனால் என்னை ஆதரிப்பார் யாருமில்லாமல் நான் அநாதை ஆகிவிட்டேன்” என்று கூறினாள்.
மேலும் தொடர்ந்து, “மன்னா! எனக்கு தற்போது உன் மக்களுக்கு உணவு கிடைக்காததன் காரணம் தெரியும். என்னிடம் எல்லா உணவுப் பொருட்களின் விதைகளும் பயிர்களும் இருந்தன.
அவை, மேலேயே இருந்ததால் ‘டுண்டி’ என்ற பெரிய அரக்கி அவற்றைத் தானே உண்டு மக்களுக்குத் தராமல் தின்று விடுகிறாள்.
அதனால், நான் அவற்றை என் உள்ளுக்குள் யாருக்கும் தெரியாதபடி புதைத்துக் கொண்டு விட்டேன். என்னுள் புதைந்துள்ள அப்பொருட்களை எடுக்க மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே, அவன் தேவைக்கு ஏற்ப வெளியிடுவேன்” என்று கூறினாள்.
உடனே மன்னன் டுண்டி-யை அழிப்பது எப்படி என்று வினவினான்.
அதற்குப் பசு, “அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. அதைக் கொல்ல முதலில் அதை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு, என்னைத் தோண்டி என் உள்ளில் இருக்கும் உணவை அனைவருக்கும் அளி!
‘டுண்டி’ என்றால் மகிழ்ச்சியொலி; மக்களின் மகிழ்ச்சி சத்தத்தில் தான் அந்த அரக்கியும் அழிவாள். அதனால் தான் அவள் பெயர் ‘டுண்டி’ ” என்று கூறியது.
அனைத்தையும் கேட்ட மன்னன், “மகளே, உன்னை ஆதரிப்பார் யாருமில்லை என்ற கவலை வேண்டாம். இனி நீ என் மகள்” என்று அச்சிறுமியை ஆரத் தழுவினான். உடனே அப்பெண்ணின் உடல் பச்சை நிறமாக மாற அவள் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.
மன்னனுக்கு வந்தது பூமித் தாய் என்று புரிந்தது. பூமியில் இதுவரைத் தானாகத் தோன்றி வரும் உணவுப் பொருட்கள் இனிமேல் கிடைக்க வேண்டுமென்றால் பூமியைச் சீர் செய்து அதைச் சமன் படுத்தி விதையிட்டு பயிர் செய்ய வேண்டுமென்று புரிந்து கொண்டான். அவ்வாறேச் செய்து பூமியில் முதல் முதலாகப் பயிர்த் தொழிலைத் துவங்கி வைத்தான்.
ஆம்! பூமியின் முதல் விவசாயி ‘ப்ரிது’.
பூமித் தாயும் அன்று முதல் ‘ப்ரித்வி’ (ப்ரிது-வின் மகள்) என்று அழைக்கப்பட்டாள்.
பயிரை அறுவடைச் செய்து அன்றிரவு அதில் உணவுப் பொருட்களை தன் மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அனைவரும், அக்கால வழக்கப்படி பொது இடத்தில் நடுவில் எரியூட்டிப் பாடி மகிழ, டுண்டி என்ற அந்த பட்டினி அரக்கி அக்னியில் வீழ்ந்து அழிந்து போனாள்.
அதுவே ஹோலியன்று முதல் நாள் நடக்கும் விழா என்ற தொன்மமும் உண்டு.
ப்ரிதுவின் கதை என்பது மனிதன் வேட்டுவத் தொழிலிலிருந்து உழவுத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் கதையாகக் கொள்ளப் படுகிறது.

No comments:

Post a Comment