Saturday 11 August 2018

மனத் தூய்மை

பாரதப் போர் முடிந்தது. வீமன் கதையினால் (கதாயுதம்) அடியுண்டு துரியோதனன் குற்றுயிராகக் கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன். அனாதையாகக் கிடக்கக் கண்ட அசுவத்தாமன் மனம் வருந்தினான்.
"உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து, அவர்கள் தலையை உன் காலடியில் காணிக்கையாக வைக்கின்றேன்" என்று சபதம் செய்தான் அசுவத்தாமன்.
இதனை அறிந்த கண்ணன், பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.
பாண்டவர்களைக் கொல்லப் பாசறையுட் புகுந்த அசுவத்தாமன், பாஞ்சாலியின் புதல்வர்களைப் பாண்டவர் என்று கருதி, அவர்கள் தலையை அறுத்து விட்டான்.
போரில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகளும் இறந்துவிட்டனரே என்று தருமர் கவலையுற்றார்.
அபிமன்யுவின் மனைவி உத்தரை கருவுற்றிருந்தாள். அவள் நல்லமுறையில் குழந்தை பெற்றால், வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என நம்பினார் தருமர்.
"இடிஇடித்திடு சிகரிகள் ஆம்என
எறிமருச்சுதன் முதல்இக லோர்தலை
துடிதுடித்திட அவர்அவர் சேனைகள்
துணிப டப்பொருது எழுபுவி நீபெற
விடிவ தற்குமுன் வருகுவென் யான்"
என்ற சபதப்படி உத்தரையின் கருவையும் அழிப்பதற்குப் ''பிரம்மசிரசு'' என்ற அம்பை ஏவினான் அசுவத்தாமன்.
கண்ணன் கருணையால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. ஆயினும் அந்த அம்பு, அதன் வலிமையால் கருவிலுள்ள சிசுவைக் கருகச் செய்துவிட்டது.
உரிய காலத்தில் உத்தரை குழந்தை பெற்றாள். குழந்தை இறந்தே பிறந்தது. கரிக்கட்டைதான் பிறந்தது.
உத்தரையின் கருவும் அழிந்தது கண்ட பாண்டவர் கதறி அழுதனர். குழத்தை உயிர் பெற்றுவிடும் என்று கண்ணன் ஆறுதல் கூறினான்.
கரிக்கட்டை உயிர்பெறப்போகும் அதிசயத்தைக் காணப் பராசர், வியாசர் முதலிய முனிவர்களும் மற்றும் பலரும் திரண்டனர்.
"பிரம்மசரிய விரதத்தைச் சிறிதும் நழுவாமல் கடைப்பிடித்தவர் யாராவது தொட்டால், கணிக்கட்டை உயிர்பெறும்" என்று கண்ணன் கூறினான்.
பிரம்மசரிய விரதத்தில் தங்களை விஞ்சியவர் யாரும் இருக்க இயலாது என்று இறுமாந்திருந்த முனிவர் பலரும் ஒவ்வொருவராகக் கரிக்கட்டையைத் தொட்டனர்.ஆனல் குழந்தை உயிர்பெறவில்லை.
"கண்ணன் கூறியது விளையாட்டுப்பேச்சே! இவ்வளவு பெரிய மகாத்மாக்கள் தொட்டும் குழந்தை உயிர் பெறவில்லையே! என்று பலரும் எண்ணினர்.
"நான் அக்கரிக்கட்டையைத் தொடுகின்றேன். ஒருவேளை, குழந்தை உயிர் பெற்றாலும் பெறலாம் என்று கண்ணன் கூறினன்.
கண்ணன் பேச்சைக் கேட்டு முனிவர் அனைவரும் சிரித்தனர்.
"கண்ணா! நெடுங்காலம் காட்டிலே தவம் செய்தவர்கள். பந்தபாசங்களை விட்டவர்கள், பிரம்மசரியத்தை உயிரினும் மேலாக மதித்தவர்கள். நாங்கள் தொட்டே உயிர் வராதபோது, நீ தொட்டால் உயிர் பெறுமா?
"உனக்கு எட்டுப் பட்டத்து அரசிகள் பதினாறு ஆயிரம் ஆயர் மங்கையருடன் ராசக்கிரீடை செய்தவன். உன் வாழ்வில் ஒழுக்கம் சிறிதேனும் கடைப்பிடித்தது உண்டா?" என்று கண்ணனை ஏளனம் செய்தனர்.
நான் தொடுவதால் உருவாக்கும் நட்டம் இல்லையே என்று கூறிக்கொன்டே கண்ணன் கரிக்கட்டையை தொட்டான்.
என்ன வியப்பு கரிக்கட்டை குழந்தையாகி அழுதது.
இதை கண்ட பாண்டவர்கள் பரசவமடைந்து பரந்தாமனை பாராட்டினர். முனிவர்கள் வெட்கி நாணத்தால் தலைகுனிந்தனர்.
முனிவர்களின் ஐயத்தைப் போக்குவதற்காகக் கண்ணன், "முனியுங்கவர்களே! நீங்கள் தவத்தால் சிறந்தவர்கள் தாம்! பிரம்மசரியத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்ததும் உண்மையே!
ஆனால் உங்கள் உள்மனம் சில சமயங்களில் காமத்தால் பேதலித்தது. உள்ளத்தால் பொய்த்து ஒழுகினீர்கள்.
"நான் பல்லாயிரம் ஆயர் மங்கையரோடு உறவாடியது உண்மை. உலகோர் கண்ணுக்கு நான் போக புருடனாகத் தோன்றினாலும் என் மனம் மாசற்று விளங்கியது. இக்கரிக்கட்டை உயிர் பெற்றதே அதற்குச் சான்று" என்று விளக்கினான் கண்ணன்.
"நான் பகவத் கீதையில் ஸ்திதப் பிரக்ஞன் உலக போகத்தில் ஈடுபட நேர்ந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதுபோல் பற்றற்றுப் பந்தப்படாமல் வேண்டும்" என்றேன். சொன்னது மட்டும் அல்ல, சொன்னபடி வாழ்ந்தேன்
என்று கண்ணன் திருவாய்மலர்ந்தமை கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

No comments:

Post a Comment