Saturday 18 August 2018

பொம்மை

" டேய் உன்னைப் பார்த்தாலே எனக்குக் கோபம் கோபமா வருதுடா... ஒழுங்கா என் பொம்மையை கொடுடா... இல்லனா அத்தைகிட்ட சொல்லிடுவேன்... அத்தே!!! இங்கே பாருங்க இவனுங்கள... டேய்ய்.....வினய் குரங்கு, ரிஷி எருமை ஒழுங்கா குடுங்கடா..”
" ஹஹா! உனக்குப் பேரழகினு நெனப்பு... உன் பொம்மைக்கு என் கையாலதான் சாவு நீ பார்த்துகிட்டே இரு" …
நானும் ரிஷியும் பொம்மையைத் தூக்கிபோட்டு தூக்கிப்போட்டு அவளை வெறுப்பேற்றி பார்த்தோம்… எங்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டாள் அந்தக் குட்டி ராட்சசி..
காலையிலே எங்கள் அத்தை மகள் சஞ்ஜனாவைத் தொந்தரவு செய்வதில் எனக்கும் ரிஷிக்கும் அவ்வளவு சந்தோஷம்… “இந்தாமா உலக அழகி, முடிஞ்சா எங்களைப் பிடிச்சி பாரு….. டேய் ரிஷி, ஓடுறா.. அவள் கையில இது கிடைக்கக் கூடாதுடா….” ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுவதும் அவள் எங்களைத் துரத்துவதும் வாடிக்கையான ஒன்றுதான்….
--------------
நான் வினய் தேவ்.... விநாயகருக்கு வேண்டி பிறந்ததால் எனக்கு வினய் தேவ் என்று பெயர் வைத்ததாக என் அம்மா சொல்வார். பல வருடங்கள் பிள்ளை இல்லாமல் பிறந்ததால் என் பெற்றோருக்கு நான் தவப் புதல்வன்.
என் குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். என் தாத்தா, பாட்டி எங்களுக்குத் தெய்வம் மாதிரி.. என் அப்பா திரு. தர்மதேவன் மூத்த மகன். அவருடன் கூடப்பிறந்தவங்க நால்வர். மூன்று தம்பிகள், ஒரு தங்கை. ஆக எனக்கு மூன்று சிற்றப்பாக்கள், ஒரு அத்தை ..
எங்கள் வீட்டில் முதல் ஆண் வாரிசு பிறந்தால் வம்சம் தலைக்கும்;
அடுத்து பெண் வாரிசு பிறந்தால் செல்வம் கொழிக்கும்
என்று குடும்ப ஜோசியர் சொன்னதாக என் அம்மா சொல்வாங்க...
ஜோசியர் சொன்ன மாதிரி நான் பிறந்ததும் அப்பாவின் தம்பிகளுக்கும் தங்கைக்கும் பிள்ளைவரம் கிடைத்ததாம். முதல் பெண் வாரிசாக சஞ்ஜனா பிறந்தவுடன் அந்த ஊரில் எங்கள் குடும்பம் மிகுந்த செல்வ செழிப்புடன் விளங்குவதாகவும் என் அம்மா சொல்லி சொல்லி எங்களுக்கு மனனம் ஆகிவிட்டது.
எனக்கு மிகவும் பிடித்த முதல் சிற்றப்பா அர்ஜூனனுக்குப் பிறந்தான் ரிஷி தேவ் - தம்பி என்று சொல்வதைவிட என் உயிர் நண்பன் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.
அடுத்து என் அத்தைக்குப் பிறந்தவள் சஞ்ஜனா – எங்கள் அனைவருக்கும் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்கிற ஒரே அத்தை மகள்.
இரண்டாவது சிற்றப்பா நகுலனுக்குப் பிறந்தவன் ரோஷன் தேவ் – என் தம்பி
மூன்றாவது சிற்றப்பா சகாதேவனுக்குப் பிறந்தவள் சஹானா – எங்கள் வீட்டுக் கடைக்குட்டி, என் அருமை தங்கை.
நாங்கள் நால்வரும் மிகுந்த ஒற்றுமையுடன் இருப்போம்… எங்கள் அத்தை மகள் சஞ்ஜனாவுக்கும் எங்களுக்கும் ஆகவே ஆகாது … அவள் எலி, நாங்கள் பூனை. தினமும் எங்கள் சண்டையைப் பிரித்து வைத்து அலுத்துதான் போனார் என் அம்மா…
எங்கள் வீட்டில் மூத்த பேரன் என்பதால் என்னை அனைவருக்கும் பிடிக்கும். அவளுக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனால் காட்டிக் கொள்ளவே மாட்டாள்… திமிர் பிடித்த பெண் போல பாசாங்கு செய்து முறைப்பாள். பெண்கள் சுபாவமே அப்படித்தானே!!
என்னை “பனானா பனானா”-னு கேலி செய்து எனக்குக் கோபத்தை வரவைத்து சிரிப்பாள்.
நான் சிறு குழந்தையாக இருந்தபோது வாழைப்பழத்தை உரித்து கொடுத்தார்களாம். நான் பசியில் பழத்திற்குப் பதில் தோலை கடித்து தின்று விட்டேனாம். என் அம்மா அந்தக் கதையைச் சொன்னதிலிருந்து எனக்கு “பனானா” என்று பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவாள்.
அப்படிக் கூப்பிட்டாலே என் மண்டைக்குள் யாரோ மணி எடுத்து அடிப்பதைப் போல் எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். பழிக்கு பழி வாங்க அவளுக்கு மிகவும் பிடித்த பொம்மையை வைத்து நாங்கள் அவளுக்கு வெறுப்பேற்றி விளையாடுவோம்….
இப்படியாக பல நாள்கள் சந்தோஷம் மட்டுமே எங்கள் வீட்டில் குடிகொண்டிருந்த தருணம் அது. எனக்கு வயது 12 இருக்கும். பள்ளியில் நான், ரிஷி மற்றும் சஞ்ஜனா மூவரும் போட்டி போட்டுக்கொண்டு படிப்போம்.
தேர்வில் எப்போதும் முதல்நிலை மாணவன் நான் தான். பல நாட்கள் பல மணிநேரங்கள் கண்விழித்து படித்தாலும் அந்த ராட்சசி இரண்டாவதாகவே வருவாள். என் மதிப்பெண்களை நினைத்து, அவள் கதறி கதறி அழுவதைப் பார்த்தால் எனக்கே கண் கலங்கும். அந்த வருடம் அரையாண்டுத் தேர்வில் அவள் முதல் முறையாக முதல் நிலை தேர்ச்சி பெற, நான் வேண்டுமென்றே சில கேள்விகளுக்குப் பிழையாக பதிலளித்தேன். அதன் விளைவாக அவள் தேர்வில் முதல் நிலை. நான் இரண்டாவது நிலை. அதற்கு அவள் பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
நான் விட்டுக்கொடுத்தது அவளுக்குத் தெரியாது, ஆனால் எங்கள் ஆசிரியருக்குத் தெரியும். என்னைக் கூப்பிட்டு இனிமேல் அப்படிச் செய்யக்கூடாது என அறிவுரை கூறினார். அதை எவனோ ஒரு மாணவன் ஒட்டு கேட்டு அவளிடம் போய் சொல்லித் தொலைத்ததும் என் வீட்டில் பூகம்பம் வெடித்தது.
“ டேய், நீ விட்டுக்கொடுத்துதான் எனக்கு மார்க் கிடைக்கணும்-னு எனக்கு அவசியம் இல்லடா… சீ… எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு! எனக்கு விட்டு தர மாதிரி விட்டு தந்து, நீ விட்டு கொடுத்தால் மட்டும் தான் என்னால் தேர்ச்சி பெற முடியும்னு எல்லோரையும் நினைக்க வெச்சிட்ட இல்ல… இனிமேல் என்னைத் தொட கூடாது, என் கண்ணுல நீ படவே கூடாது, என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் கூட நான் அடுத்த நிமிடம் செத்துருவேன்டா, இது என் அம்மா மேல சத்தியம்”…-னு ஒரே போடு போட்டுவிட்டு ஓடிப்போய் அவளது அறைக்கதவை மூடிக்கொண்டாள் சஞ்ஜனா.
“இந்த வயசுல ஒரு பொண்ணுக்கு என்னடி இவ்வளவு கோபம்?”-னு கேட்டுக்கொண்டே கதவைத் திறந்து விளக்குமாற்றால் அவளைப் பிய்த்து எடுத்து விட்டார் என் அத்தை. என் மாமா அதற்கு மேல். மோப் கம்பைக் கொண்டு அவளை நைய புடைத்துவிட்டார். எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்த்ததைப் போல இருந்தது அவர்களது செயல். என் பெற்றோர் அறைக்குள் சென்று தடுத்த பின்னரே அவள் தலை தப்பியது.
அன்று, நான் மனம் உடைந்து கதறியதைப் பார்த்து என் குடும்பமே கண்ணீர் வடித்துவிட்டனர். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எனக்கு ஒரு சோறு தண்ணீர் இறங்கவில்லை. அன்று முழுவதும் என் வீட்டில் மயான அமைதி. நான் சாப்பிடாததால் யாரும் சாப்பிடவில்லை.
எங்கள் வீட்டு சமையல்காரர் முத்தான் எனக்கு சோறு போட்டு வந்து ஊட்டினார். யாருக்கும் மசியாத நான் அவர் அன்புக்கு அடிமை; அவர் மனம் கஷ்ட படக்கூடாது எனக் கொஞ்சம் சாப்பிட்டேன். சஞ்ஜனாவுக்கும் சோறு ஊட்டிவிட்டதாக அவர் கூறினார். முத்து என்ற அவருக்கு முத்தான் என்று பெயரிட்டு அழைத்தது சஞ்ஜனா தான். அனைவரும் அந்தப் பெயரை வைத்துதான் அவரை அழைப்பார்கள். அவர் உணவு என்றால் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இப்படியாக மூன்று நாள்கள் ஆகின. அவளிடம் மன்னிப்புக் கேட்டு சமரசம் ஆகிவிட நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. அவள் அறையை விட்டே வெளியே வரவில்லை. ரிஷியிடம் மன்னிப்புக்கடிதம் எழுதி தூதுவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. அவள் வெளியே வந்தால் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று மனம் கூறியது. அவள் என்னுடன் என்னதான் சண்டை போட்டாலும் அவள் என்றால் எனக்கு உயிர். இதயத்தைக் கீறியதைப் போன்று ஒரு வலி. தானாக என் விழிகள் அழுகின்றன. என்ன நான் இப்படி ஆகிவிட்டேன்? எனக்கே என்னைப் பார்க்க பாவமாக இருந்தது.
என் குடும்பத்தில் தென்றல் அடங்கி புயல் அடிக்கத் தொடங்கிய காலம் அது. என் மாமா குடும்பத்தினர் கோயில் யாத்திரைக்குக் அத்தையையும் சஞ்ஜனாவையும் அழைத்து செல்ல ஆயத்தமானார். ஏதோ அவளுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டுமாம். அவள் மகிழுந்து ஏறும்போது ஒளிந்திருந்து பார்த்தேன். அவளது கண் என்னைத் தேடியதை என் கண் கண்டுபிடித்து விட்டது. இதுதான் நல்ல தருணம் என மரத்தின் பின்னிருந்து முன்னுக்கு வந்தேன். அவள் பார்த்த பார்வை இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
என்னைப் பார்த்ததும் வேறு எங்கேயோ பார்ப்பதுபோல் தலையைத் திருப்பிக்கொண்டாள். மகிழுந்து புறப்பட்டு விட்டது, நான் அவளைப் பார்ப்பது அதுதான் கடைசி என்பது எனக்கு அப்பொழுது தெரியாது.
இது ஆப்பிள் நிறத்தில் இருக்கும் அவளது கதை; எனக்குத் தெரியாமல் எனக்குள் வந்து குடிக்கொண்ட என் தேவதையின் கதை.

No comments:

Post a Comment