Thursday, 9 August 2018

ஆர்கோ கப்பல்

‘இதே கிரீஸில்தான் மூன்று வருடங்களுக்கு முன்னர், 1983ம் ஆண்டு, கப்பலில் சேர்ந்தேன். அதன் பெயர் ஆர்கோ. என்னுடைய முதல் பயணம் பிரேசில் நாட்டுக்கு. அதற்குப் பின்னர் பலப்பல நாடுகளுக்கு பயணித்தேன். உலகம் முழுக்க சுற்றினேன். இறுதியில் ஒருநாள் துருக்கி பாண்டிர்மா துறைமுகத்தில் கப்பலை விற்றுவிட்டார்கள். வேலை போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது மூன்று பாகிஸ்தானிகள் எனக்கு உதவினார்கள். என் வாழ்க்கை மாறியது. ’துருக்கியில் பொஸ்ஃபோரஸ் என்ற இடத்தில் தங்கினோம். கிழக்கும் மேற்கும் சந்திக்கும் அற்புதமான இடம். எங்கள் விடுதியில் நின்று பார்த்தால் நீல மசூதி தெரியும். துருக்கியில் இயங்கும் மாஃபியா கும்பலுக்கு வேலை செய்வது என்று முடிவெடுத்தோம். அங்கே மாஃபியா ஓர் அரசாங்கம் போல பலத்துடன் செயல்பட்டது. அவர்கள் ஆதரவு இருந்தால் எந்த பிரச்சினையையும் கடந்துபோகலாம் என்றார்கள். நான் புதிதானபடியால் பாகிஸ்தானியர்கள் எனக்கு வேலை கற்றுத்தந்தார்கள்.
’துருக்கியில் 1980 களில் கார்கள் இறக்குமதி கிடையாது. கள்ளச் சந்தையில் அவற்றின் விலை எக்கச்சக்கமாக இருக்கும். எங்கேயாவது கார் ஒன்று விபத்தில் சிக்கினால் மாஃபியா கும்பல் லைசென்ஸ் தகடுகளை உடனே பிடுங்கிவிடும். அதே மாதிரியான ஒரு புதுக்காரை சுவிட்சர்லாந்தில் இருந்து வருவித்து லைசென்ஸ் தகட்டை மாற்றி விற்றுவிடுவார்கள். ஒரு கார் 40,000, 50,000 டொலர்கள் என்று விலைபோகும். எங்கள் வேலை சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் போய் அங்கே அவர்கள் சொன்ன வகைக் காரை வாங்கி ஓட்டிக்கொண்டு வந்து துருக்கியில் கொடுப்பது. மிகச் சுலபமான வேலைதான். சூரிச்சில் தொடங்கி இத்தாலி, யூகோஸ்லாவியா, புல்கேரியா நாடுகளைக் கடந்து துருக்கிக்கு ஓட்டவேண்டும். கூலியாக 5000 டொலர்கள் தருவார்கள். ஒரே வாரத்தில் இரண்டு கார்களைக்கூட கடத்தியிருக்கிறேன். கையிலே அத்தனை பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விரயம் செய்த நாட்கள் அவை.
சுவிட்சர்லாந்தில் ஒருநாள் பளிங்குத் தரையில் ஒரு பெண்ணின் பிம்பத்தை கண்டு மோகித்தேன். அவள் அந்த நாட்டு நீச்சல் வீராங்கனை, பெயர் ஸிமோனா. மெய்யான நீலக்கண்கள். உற்றுப் பார்த்தால் ஒரு கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோல இருக்கும். சுவிட்சர்லாந்தில் நிற்கும் நாட்களில் அவளுடனேயே தங்குவேன். கவலை இல்லாத நாட்கள் அவை. ஸிமோனா நான் ஒரு பணக்கார விற்பனை அதிகாரி என்று நினைத்திருந்தாள். ஒருநாள் அவளிடம் உண்மையை சொன்னபோது ஒரு துள்ளுத்துள்ளி எழுந்து நின்றாள். தாங்க முடியாத உவகை அவளுக்கு. துணிச்சல்காரி; சாகாசத்துக்கு அலைபவள். ’என்னையும் உன்னுடன் அழைத்துப்போ’ என்றாள். மாஃபியாவுக்கு அது பிடிக்காது எனினும் அவள் பக்கத்தில் இருக்க புதுக்காரை 2500 கி.மீட்டர்கள் ஓட்டினேன்.
துருக்கி எல்லைக்குள் நுழைந்ததும் முதலில் எதிர்ப்பட்ட உணவகத்தில் காரை நிறுத்தினேன். வாசலில் ஒருவன் இரண்டு கைகளாலும் தூக்கி ஒரு வாத்தியத்தை வாயிலே வைத்து ஊதினான். அதன் நீளம் வாசிக்கும்போது சிலசமயம் கூடியது; சிலசமயம் குறைந்தது. நான் அவனுக்கு 100 லீரா காசு போட்டேன். ஸிமோனா என் பையிலிருந்து பிடுங்கி இன்னொரு 100 லீரா போட்டாள். அவள் மகிழ்ச்சியில் இருந்தாள். நாங்கள் உணவருந்திவிட்டு திரும்பியபோது எங்கள் காருக்கு முன்னால் இன்னொரு கார் நின்றது. காரிலே ஒருவரும் இல்லை ஆனால் உள்ளுக்கிருந்து கடாமுடாவென்று சத்தம் வந்தது. ஸிமோனா என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. கனமான ஸ்பானரை எடுத்து ஓர் அடியில் கார் டிக்கி கதவை திறந்துவிட்டாள். அதற்குள் கைகால்கள் கட்டப்பட்டு ஒரு பெரிய உருவம் கிடந்தது. அத்தனை பெரிய உருவத்தை எப்படி சுருட்டி உள்ளே வைத்தார்களோ தெரியவில்லை. அவன் வாயை அவிழ்த்ததும் தன்னைக் காப்பாற்றச்சொல்லி மன்றாடினான். யோசிப்பதற்கு நேரம் இல்லாததால் அவனைக் காரிலே ஏற்றிக்கொண்டு வேகமாகப் பறந்தோம். ஸிமோனா இரண்டு வால் கிடைத்த நாய்போல மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளுக்கு சாகசம் பிடிக்கும்.

No comments:

Post a Comment