கண்ணாடி பாத்திரம் ஏதோ ஒன்று உடையும் சத்தம் கேட்டது.
கேத்தரீனா மற்றும் ஒரு கண்ணாடி குவளையை உடைத்திருக்கிறாள் போலும். கேத்தரீனா என்னைக் காதலிக்கிறாள்.
அவளை இத்தாலியின் மிலான் நகரில் ஓர் ஆய்வகக் கருத்தரங்கில் சந்தித்தேன்.
ஒரு வருடப் பழக்கம், அவளை விட நான் அறிவாளி, அவள் என்னை விட உலகத்தையும் மனிதர்களையும் அதிகமாக நேசிப்பவள், அதனாலேயே ஒரு வேளை ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
அவளின் ஒரு வார விடுமுறையில் ரோம் நகரத்திற்கு வந்திருக்கிறாள். சொல்லப்போனால் என்னை மட்டும் பார்ப்பதற்காகத்தான் இந்த ரோம் பயணமே....
ரோம் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது என்பது இரண்டாம் பட்சம், அல்லது முக்கியமே அல்ல..
“மன்னித்துவிடு கார்த்தி, இன்னொரு பாத்திரத்தை உடைத்துவிட்டேன்” அவள் கண்களில் நான் திட்டிவிடுவேனோ என்ற பயம் தெரிந்தது.
என்னிடம் பாசம் காட்டும் பெண்களை எனக்குப் பிடிப்பதைப்போல, என்னிடம் பயப்படும் பெண்களையும் ரொம்பவே ...பிடிக்கும்.
“பரவாயில்லை, கேத்தி, உடைந்த கண்ணாடி உன் கைகளைக் கீறிவிடவில்லைத்தானே” அவளின் பயம் எனது நேசமான வார்த்தைகளால் மறைந்தது.
இரண்டு கண்ணாடிக்குவளைகள், மூன்று பீங்கான் தட்டுகள், ஒரு ஸ்விட்ச் போர்டு, குளிர்சாதனப் பெட்டியில் காய்கறி வைக்கும் பிளாஸ்டிக் தடுப்பு, சன்னலை மூடும் நீண்ட ஷட்டர் கதவு என அவள் உடைத்த விசயங்கள் நீண்டு கொண்டே இருந்தன.
அவள் உடைத்த பொருட்களின் ஒட்டு மொத்த மதிப்பு, விடியற்காலையில், அவள் அன்பாக போட்டுத்தரும் டீக்கு கால் தூசியாகாது.
அவள் போடும் டீ படு சுமாரான ஒன்றுதான், ஆனாலும் அவள் அதைக் கொண்டு வந்துத்தரும் அன்பில்.....
இனிப்பு சரியாகக் கலக்கவில்லை என்றாலும், டீத்தூள் சரியாகப் போடவில்லை என்றாலும் எதுவுமே குறையாகத் தெரியாது.
சுடுதண்ணியில் டீ பாக்கெட்டைப் போட்டு, டீக் குடித்து பழகியவளுக்கு, டீத்தூளைக் கொதிக்க வை, பாலைக் கலந்து, இஞ்சி ஏலம் தட்டிப்போடு என்பது எல்லாம் லத்தீன் கற்றுக்கொள்வதுப் போல... இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்கின்றாள்.
இப்பொழுது கூட, இணையக் குறிப்புகளைப் படித்து , பிரியாணி செய்ய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறாள்.
அதீத அன்பு காட்டுபவர்கள் அவர்களை அறியாமல் அடிமையாகிவிடுவார்கள். அந்த அதீத அன்பில்தான், மூன்று வெங்காயங்களை கண்கள் கலங்க வெட்டிக்கொண்டிருக்கிறாள்.
”கார்த்தி, பிரியாணி சாப்பிடுகிறோம், அப்புறம் ஒரே கொஞ்சல்ஸ் மட்டும்” கொஞ்சல்ஸ் என்ற அவளுக்குத் தெரிந்த பிடித்த ஒரே தமிழ்வார்த்தையை மட்டும் கலந்து ஆங்கிலத்தில் சொன்னாள்.
அவளை நான் திருமணம் செய்து கொள்வேனா, காதலிப்பேனா என்றெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. நான் அவளுக்கு ஒரு குழந்தையைத் தரவேண்டும்.
.....அவளுக்கு இந்தியக் குழந்தை, குறிப்பாக தமிழ்க்குழந்தை வேண்டுமாம்.
...பிடிப்பற்ற அவளின் வாழ்க்கையில் பெருமிதமான பிடிப்பாக ஒரு தமிழ்க் குழந்தை, அதுவும் என் குழந்தை இருக்கும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்திய ஆண்களைக் காதலிக்கும் மேற்கத்தியப் பெண்கள் மாயையான பொய்மை அதிகம் நிறைந்த இந்தியக் கலாச்சரத்தில் மதிமயங்கிவிடுகிறார்கள். அந்த மதிமயக்கத்தை கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்.
ஆனால் இந்திய அல்லது தெற்காசியப் பெண்களைக் காதலிக்கும் மேற்கத்திய ஆண்கள் பெரும்பாலோனோருக்கு குனி என்றால் குனியும் நிமிர் என்றால் நிமிரும் பெண்கள் வேண்டும் என்ற ஆதிக்கத்தனம். நான் ஒரு முறை கேத்தரீனாவை அரைக் கிறுக்கு என்று கூட சொல்லி இருக்கின்றேன்.
“அன்பு செய்வது அரைக்கிறுக்குத்தனம் என்றால் நான் முழுக் கிறுக்காக விரும்புகின்றேன்” என்பது அவளின் பதிலாக இருந்தது.
பிரியாணிக்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கையிலேயே , “
“குட்டிப்பாப்பாக்கு என்ன பெயர் வைக்கலாம் கார்த்தி” எனக் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு கண்ணாடி டம்ளரை உடைத்தாள்.
வள்ளுவன் /வாசுகி ...... என்று சொல்லத்தான் நினைத்து இருந்தேன், ஆனால் அந்த நொடி துடுக்குத்தனத்தில்,
“பாத்திரங்களை கீழேப்போட்டு உடைத்துவிடுவதுபோல பாப்பாவையும் கீழே போட்டு உடைத்து விடாமல் இருந்தால் பெயர் வைப்பதுப் பற்றி யோசிப்போம்” என்றேன்.
நகைச்சுவை ஆளுமைகள் எல்லா நேரத்திலேயும் ரசிக்கப்படுவதில்லை விரும்பப்படுவதில்லை.
கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது. நிச்சயம் வெங்காயம் காரணமில்லை. அப்படியே போட்டது போட்டபடி என்னருகில் வந்து அமர்ந்து கொண்டு, என்னைக் கட்டிக்கொண்டு அழுதுத் தீர்த்தாள்.
பெண்கள் அழுது விட்டார்கள் என்றால் , அந்தப் பிரச்சினைக்காக மற்றும் ஒரு முறை அழ மாட்டார்கள்.
அழுது முடித்தவுடன் சில முத்தங்களுடன் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு , பிரியாணி செய்து முடித்தாள். தலைப்பாக்கட்டு பிரியாணி தோற்றுவிடும்,,, அவ்வளவு ருசியாக இருந்தது.
நான்கு நாட்கள் கழித்துப்போவதாக இருந்த பயணத்தேதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே மாற்றினாள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. ரயில் நிலையத்தில் , வண்டியில் ஏறிய பின்னர், இறங்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து பின்னர் ரயில் ஏறினாள்.
மிலான் சேர்ந்ததும் எஸ் எம் எஸ் அனுப்ப சொன்னேன். தலையாட்டினாள். 10 மணி நேரம் ஆகியும் அனுப்பவில்லை. பேஸ்புக்கிலும் தகவல் அனுப்பவில்லை. அவளின் பேஸ்புக் முகப்புப்பக்கம் போய்ப்பார்த்தேன்.
”நான் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே”
...எனப் பொருள் தரும் வாக்கியத்தை சோகச்சின்னத்துடன் இத்தாலிய மொழியில் எழுதி வைத்திருந்தாள்.
No comments:
Post a Comment