Tuesday 7 August 2018

பணம்



"பணம்"என்ற படத்தில் வசனம் எழுதி இருக்கிறார் கலைஞர்.
அதில் சில வசனங்கள் இன்னும் என்னைப்போல் உள்ளவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
’பணம்... மோகனமான மூன்றெழுத்து அழகி. முட்டாளின் மஞ்சத்திலே கொஞ்சுவாள். முரடனின் கையிலே சிக்குவாள். படித்தவனைப் பம்பரம் போல் சுற்றிவிடுவாள். பஞ்சாகத் துடிக்கவிடுவாள். பாசத்தைத் துண்டிப்பாள். நேசத்தைக் கண்டிப்பாள். தெய்வீகத் திரை போட்டுக்கொள்வாள். தியாகிகள் வேஷத்திலே திருட்டுகள் ஆடிடுவாள்.
அந்தக் கன்னியின் ஆட்டத்திலே கண்ணிழந்தோர் கணக்கற்றவர்கள். அந்தக் கூட்டத்திலே நானும் ஒருவன்.
என் இன்பலோகத்துக்கு ஏணி. உற்சாகபுரியின் ஊஞ்சல். துரோகிகளைத் தாலாட்டும் தொட்டில் என்று சிவாஜி சொல்ல, உடனே எஸ்.எஸ்.ஆர். ’சாவுக்குக் காவியம் பாடும் நீ யாரப்பா?’ என்று கேட்பார்.
’மரணத்தைப் பற்றி ஓர் முடிவுக்கு வந்த மாவீரனும் அல்ல. மகானும் அல்ல. மனம் தகர்ந்து போன சாதாரண மனிதன்.
சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன். சூனியமாகிவிட்டது வாழ்வு’ என்பார் சிவாஜி.
உடனே எஸ்.எஸ்.ஆர்., ‘வாழ்வு இல்லை. உன் அறிவு என்று சொல். தற்கொலையை விட கோழைத்தனம் வேறொன்றுமில்லை என்று சொல்லுவார்.
அதன் பிறகு, தன் தந்தையிடம் பேசுவார் சிவாஜி. அந்த வசனங்களில் இருந்து தீப்பிழம்புகள் கிளம்பி, திரைக்குள் வந்துவிழும்.
’ஜீவா உன்னுடன் பேசமாட்டாள். உன்னைப் போன்ற லோபிகள் வாழும் இந்த உலகத்தை விட்டே ஓடிவிட்டாள். பேராசைப் பேய்கள் இல்லாத இடத்துக்கு கருமிகளின் காலடி படாத பூமிக்கு என் கண்மணி போய்விட்டாள் என்று கதறுவார்.
உடனே தந்தை தங்கவேலு என்னடா சொல்றே... என்று கேட்பார்.
’பிரியமுள்ள உமது மருமகள் பிணமாகிவிட்டாள். எங்கே ஓடுகிறீர்? அவள் பிணத்தைப் பார்க்க, பக்கத்திலே நிற்க, உமக்கு என்ன தகுதி இருக்கிறது? பரிசுத்தமான என் ஜீவா எங்கே? பண வெறி பிடித்த கொள்ளிவாய்ப் பிசாசு நீர் எங்கே?
உமக்கு வேண்டியது இதோ இருக்கிறது. பணம்... பச்சைப்பசுங்கொடி படர்வதைத் தடுத்த பணம். என் இச்சைக்கு உகந்தவளின் இன்பவாழ்வை எரித்துச் சாம்பலாக்கிய பணம். சொந்த மகனின் சிந்தையைக் கலக்கி வீட்டுக்கு மருமகள் வெந்த உள்ளத்தோடு விரட்டியடித்த பணம்.
பணத்தையே கடவுளாகக் கொண்ட பாழும் பக்தனே. பண்பில்லாத பித்தனே. பார் உன் பணம் படுத்தியபாட்டை!’’
இப்படி கலைஞர் எழுதிய பணம் படத்தின் வசனம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment