ஒருவன் அலுவல்கள் முடித்து மாலை அவனது வீடு திரும்புகிறான். அவன் மீது மிகுந்த பாசமும் பரிவும் கொண்ட அவனது வாழ்க்கைத் துணைவியார் நல்ல அறுசுவை உணவு சமைக்கிறார்.
நம்மவர் சக்கரை வியாதிக்கு சொந்தம். அதனால் அவரின் மருத்துவர் அவரை நேரத்துக்கு உண்ணச் சொல்லியிருக்கிறார். கடிகாரத்தில் மணி எட்டடித்தால் சாப்பிட்டாக வேண்டும்.
அன்றும் என்றும் போல வழக்கமான நேரம் சாப்பிட உட்கார்கிறார் . கடிகாரத்தில் சரியாக எட்டு மணி.
வாசலில் ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்க, நம்மவர் சென்று விசாரிக்கிறார். விசாரித்ததில் அவர் தேடிவந்த வீடு வேறு. சரியென்று அவரை விபரம் சொல்லி அனுப்பிவைத்துவிட்டு மறுபடியும் உட்கார, தொலைபேசி அழைக்கிறது.
அழைத்தவர் நல்ல நண்பர். பேசியதும் ஒரு முக்கியமான காரியம் குறித்து. அவ்வளவு எளிதாக துண்டிக்க முடியாத சூழ்நிலை. இப்படியே கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் போயிற்று. அவருடன் பேசி முடித்துவிட்டு சாப்பிட உட்கார மணி இப்போது எட்டேகால்.
அவர் மனைவி கேட்டார், “இது நீங்கள் உண்மையாக சுயமாக சம்பாதித்த பணத்திலிருந்து வாங்கிய பண்டங்களிலிருந்து செய்த உணவு, நான் உங்கள் மனைவி, இது உங்கள் வீடு அப்படியிருக்க உங்களால் ஏன் நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை?”
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஏதோ ஒன்று நம்மை செலுத்துகிறது. இந்தப் பதிவும்கூட அப்படித்தான். இன்று ஏன் இந்த கருத்துக்கள் ஞாபகத்துக்கு வரவேண்டும்? வந்து அதை பற்றியே சிந்தனையிலேயே ஏன் என் மனம் செல்ல வேண்டும்? சிந்தித்தாலும் அதை பற்றி ஏன் எழுத முடிவெடுக்க வேண்டும்?
இந்த இத்தனை கேள்விக்கு ஒரே பதில் ஆட்டுவிப்பவன் ஒருவன். ஆடுவோர் நாம்.
No comments:
Post a Comment