Saturday, 18 August 2018

தாஃபின்

ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது.
இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும் பறந்து கொண்டிருந்தேன். மின்னணுவியல் மற்றும் கருவியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றபின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வடிவமைப்பு அலுவலகத்தில் ஒரு வருடம் பணி புரிந்துவிட்டு அப்போதுதான் ONGCயில் சேர்ந்திருந்தேன். எனவே முதன்முதலாக ஒரு வாரப் பயிற்சிக்காக BHS என்ற ஒரு offshore பிளாட்பாரத்திற்குப் போக வேண்டியிருந்தது. பயணம் முந்தைய பணியின் விட்ட குறையாக ஹெலிகாப்டரின் வழியே நடக்கிறதோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். விமான வடிவமைப்பாளர் சிக்கொர்ஸ்க்கியின் தயவில் தொழிற்சாலைகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கைகளில் உருவாகி வரும் ஹெலிகாப்டர், யோசித்தால் சாதாரண விமானம் போல் இல்லாது வெறும் காற்றையே ஒரு கயிறு போல் பிடித்துக்கொண்டு விறுவிறுவென்று செங்குத்தாக மேலே ஏற வல்லது. அந்த முரட்டுத் திறன் காரணமாக எனக்கு ஹெலிகாப்டர்களை மிகவும் பிடிக்கும். முந்தைய பணியின் சார்பாக இன்னொரு ஃபிரெஞ்சு வடிவமைப்பிலான சேதக் ஹெலிகாப்டரை துணை விமானியாகக் கொஞ்சம் ஓட்டிப் பயின்றிருக்கிறேன். எனவே இந்த ஹெலிகாப்டரின் கலெக்டிவ் பிட்ச், சைக்ளிக் பிட்ச் முதலிய கண்ட்ரோல் கொம்புகளையும், இந்த தாஃபின் ஹெலிகாப்டரின் சிறப்பம்சமான பெனஸ்ற்றான் (Fenestron) எனப்படும் டெய்ல் ரோட்டர் அமைப்பையும் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மற்றபடி நான் போய் சேரப்போகும் பிளாட்பார்ம் ஏதோ எண்ணையும் கிரீசும் படிந்த ஒரு அழுக்கு ஓர்க் ஷாப் போல இருக்கும் என்று சற்று அசிரத்தையாய் உருவகம் செய்து வைத்திருந்தேன். ஒரு வாரம் அங்கே பயிற்சி முடிந்தபின் குஜராத்தில் உள்ள ஊரான ஹஜிராவில் போய் வேலையில் சேர்வதாய் உத்தேசம்.

No comments:

Post a Comment