Thursday 9 August 2018

குடி

 பாதிரியார், “சமாதானத்தோடு போய்வரக்கடவோம் !” என்றார்.
”கர்த்தருடைய நாமத்தினாலே ! ஆமென்” என்று கூறிவிட்டு ஜானும், ஜெசியும், குழந்தைகளும் வீட்டிற்கு புறப்பட்டார்கள். கறிக்கடையில் அரை கிலோ கோழிக்கறியும், அரைக்கிலோ ஆட்டுக்கறியும் வாங்கிக்கொண்டு ஜெசியும் குழந்தைகளும் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். முன்பே வீட்டிற்கு சென்று பரிசுத்தவான் போல தான் அணிந்து இருந்த வெள்ளை சட்டையையும், வெள்ளை பேண்டையும் கழற்றி வைத்துவிட்டு, ஒரு டீசர்ட்டும் லுங்கியும் அணிந்துகொண்டு வெளியே சென்றான் ஜான்.
வீட்டிலே குழந்தைகள் தங்கள் ஞாயிறு பள்ளி புத்தகங்களை வைத்துவிட்டு. டிவி ரிமோட்டுக்காக அடித்துகொண்டு இருந்தார்கள். ஒரு பாப்புவும், புஜ்ஜியும் போகோ டிவியில் வரும் சோடா பீம் பார்க்க தீர்மானித்தார்கள். அப்போது ஜான் திரும்பவும் வீட்டிற்கு வந்தான். பாப்புவும் புஜ்ஜியும் வேகமாக ஓடிச்சென்று, “அப்பா, என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க !” என்று கேட்டார்கள்.
முழுவதுமாக மப்பு தலைக்கு ஏறி இருந்த ஜான், “ச்சீ போ அங்கிட்டு, அடியே ஜெசி, வெளிய வாடி !” என்று கூச்சலிட்டான்.
ஜெசி வெளியே வந்ததும், “என்னடி ! மொரச்சி பாக்குற *********. ஒழுங்கா உங்க அப்பன் வீட்டுக்கு போய் 25 ஆயிரம் ரூபா கொண்டு வாடி, ஜான்னு பேரு வெச்சா நான் என்ன *********” என்று பல கெட்ட வார்த்தைகளை பேசி, சண்டை போடத் தொடங்கினான்.
ஜெசி அருகே முழங்காலில் நின்றுகொண்டு சத்தமாக, “ஆண்டவரே, இந்த மனுசனுக்கு நல்ல புத்திய கொடுங்க !” என்று ஜெபித்தார். இதை கேட்டுக்கொண்டு இருந்த ஜானுக்கு ஆத்திரம் அதிகரிக்கவே மரகதவள்ளியை எட்டி உதைத்தான். பாப்புவும், புஜ்ஜியும் “அம்மாவ அடிக்காதீங்க ! என்று குறுக்கே பாய்ந்து தடுத்தார்கள் !” அவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு, மீண்டுமாக அடிக்கத்தொடங்கினான் ஜான். சிறிது நேரத்திற்கு பிறகு, “இரு டீ, திரும்பவும் மப்பு ஏத்திகிட்டு வந்து உன்னைய கவனிச்சிக்கிறேன் !” என்று கூறிவிட்டு சென்றான்.
இது இவர்களுடைய வீட்டிலே ஒரு வழக்கமான நிகழ்வு தான். ஜான் ஒரு எஞ்சினியர், கைநிறைய சம்பளம் வாங்குபவன், சில தவறான சிநேகிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில், சொந்தத்திலேயே அதிகமாக படித்திருந்த ஜெசியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
ஜெசி ஜானை திருத்த எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்தாள். பல ஜெப கூட்டங்களுக்கு சென்று கண்ணீரோடு ஜெபித்தாள். அங்கே தொலைக்காட்சியில் ஜெசியின் கண்ணீர் ஜெப கூட்டம் நடத்துகிறவர்களுக்கு சிறந்த விளம்பரமாக அமைந்தது. இரவும் பகலும் சண்டைகள் தொடர்ந்தன. பல மனநல ஆலோசகர்களிடம் சென்று ஆலோசனை பெற்றும், அவற்றை கடைபிடிக்க முடியாமல், ஒரு வீட்டிற்குள் வாழும் எதிரிகளாகவே ஜானும் ஜெசியும் வாழ்ந்து வந்தார்கள்.
20 ஆண்டுகள் உருண்டு ஓடின...பெண்ணிற்கு திருமண வயது நெருங்கிவிட்டது என்பதால் ஜான் ஒரு வழியாக குடிபழக்கத்தை சற்று மூட்டை கட்டி வைத்தான்.
”பாப்பு, இங்க வா, இந்த போட்டோ எல்லாம் பாரு !! இவர் என்சினியர் மாசம் 1 லட்சம் சம்பாதிக்கிறார், இவர் ஒரு டாக்டர் சொந்தமா கிளீனிக் வெச்சிருக்கார், இவர் சாப்டுவேர் என்சினியர் மாசம் 2 லட்சம் சம்பாதிக்கிறார்” என்றான் ஜான்.
“இவங்க எல்லாம் யாரும் வேண்டாம், நம்ம சர்சுக்கு வர்ற பசங்கள்லயே நல்ல குணம் இருக்கிற பையனா பாருங்க !” என்றாள் பாப்பு.
இப்போது தான் ஜானுடைய மனதில் அந்த யோசனை உதித்தது. பழையக் குருடி கதவத் தொறடி என்பது போல, மீண்டுமாக பூஸ்ட் ஏத்திக்கொண்டு, சர்ச் போதகர் வீட்டிற்கு சென்று “யோவ், நீ சர்ச் நடத்திறியா இல்ல, ****************, இனிமே யூத் மீட்டிங், கீத் மீட்டிங்னு ஏதாவது நடத்தின !” என்று கத்திக்கொண்டு இருந்தான்.
உள்ளே தன் நண்பர்களுடன் ஜெபித்துக்கொண்டு இருந்த புஜ்ஜி வேகமாக வெளியே வந்து, “அப்பாங்கிற மரியாதையோட சொல்றேன், ஒழுங்கா வீட்டுக்கு போய்டுங்க, நீங்க என்னைய அடிச்சா ஒன்னும் இல்ல, அதுவே நான் அடிச்சா மரியாத கெட்டு போய்டும்!” என்று ஜான் கையில் இருந்த கம்பை தட்டிவிட்டான் புஜ்ஜி.
தன் மகன் தன்னை விட பலசாலியாக இருப்பதை உணர்ந்த ஜான் பயந்து வீட்டிற்கு சென்றுவிட்டான். வீட்டிலே பாப்பு காணவில்லை என்று ஜெசி அழுதுகொண்டு இருந்தாள். போலீசில் புகார் அளிக்கப்பட்டும் பாப்புவை கண்டுபிடிக்க முடியவில்லை.
சில மாதங்களுக்கு பிறகு புஜ்ஜி வெளியூருக்கு சென்று வேலை தேடச் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டின் கதவை தட்டினான்.
“வா புஜ்ஜி, எப்டி டா இருக்க, உள்ள வா” என்று பாப்பு அழைத்தாள்.
“வாங்க தெய்வ மச்சான் !” என்று ஜோனத்தானும் அன்போடு அழைத்தான்.
எல்லோரும் குடும்ப ஜெபம் செய்துவிட்டு சாப்பிடத் தொடங்கினார்கள்.
“அக்கா, எப்ப இருந்து நீ இவ்வளவு நல்லா சமையல் பண்ண கத்துகிட்ட !”
“எல்லாம் என்னோட ட்ரெயினிங் தான்” என்றான் ஜோனத்தான்.

No comments:

Post a Comment