Tuesday, 23 January 2018

அங்க இங்க அசையப்படாது…’’
ஆற்றுப் பாறையில்
மூட்டைத் துணியை துவைக்க ஆரம்பித்த
பொன்னம்மை ஆச்சியின்
அதட்டலுக்கு அடங்கிப் போய்
அவளின் முதுகோடு முதுகாக

முகஞ் சுருங்கிப் போய்
அமர்ந்திருந்தாள் பொன்னி.
சாயங்கால வெயிலில்
தகதகத்தது தாமிரபரணி.
காந்திமதியும் கோமதியும்
பாவாடையில் மீன் பிடிக்கிறார்கள்.

சைலப்பனும் மாரியப்பனும்
தண்ணீருக்குள் கரணம் அடிக்கிறார்கள்.
நதியில் இறங்க நடுங்கி நின்ற
பட்டணத்து அபிஷேக்கை
பக்கத்து வீட்டு மாமா

அலேக்காகத் தூக்கி
அலற அலற நனைத்தெடுத்தபோது
பொங்கி வந்த சிரிப்பை
பொய்க் கோபத்துடன்

மறைக்கும் பொன்னியை
ஓரக் கண்ணால் கவனித்தபடி
குளிக்க இறங்குகிறது கோயில் யானை.
‘பராட்… பராட்…’ எனப் பாகன் தேய்க்க

கும்மாளத்துடன் குழந்தைகள்
நீர் வாரி இறைக்க
ஏக்கத்துடன் வெறிக்கிறாள் பொன்னி.
கரையேறிக் கடந்து போகையில்
தும்பிக்கை தண்ணீரை அவள்மீது

பூமாரி யானை பொழிய
கலகலவென்று சிரிக்கிறாள்.
‘அங்க இங்க’ அசைய இயலாதவளின்
அழகுச் சிரிப்பை அள்ளிக்கொண்டு
அசைந்து அசைந்து போகிறது யானை.

No comments:

Post a Comment