Wednesday 17 January 2018

நிறுத்தத்தில் நிற்காமல்
சென்ற பேருந்தில்
ஏறுவதற்கு சிறிது தூரம்
ஓடவேண்டியதாயிற்று.
படியில் ஒரு கால் வைப்பதற்கு
மட்டுமே இடம் இருந்தது.

தொங்கியபடியே கொஞ்ச நேர பயணம்.
நிறுத்தங்களில் ஆட்கள் இறங்க
பேருந்தின் உள்ளேறினேன்  
முன்பின் அறிந்திராத
ஒரு நல்லவன் அவன்
இறங்கவேண்டிய இடம் வந்ததும்
இருக்கையை விட்டு எழுந்தான்.

அதுவரை அவனுக்கு
சொந்தமாயிருந்த இருக்கை
இப்போது எனக்கு சொந்தம்.
இடம் கிடைத்ததில் வந்த
ஆணவம் உடனே
உறக்கமாக உருமாறியது.

ஓட்டுநர்  திடீர் பிரேக்
அடிக்க  முன்பக்க இருக்கையில்
தலைமுட்டி தூக்கம் கலைந்த
போது பயணிகள் எல்லாரும்
இறங்கி விட்டிருந்தனர்.

பேருந்தில் இப்போது
நானும் நடத்துனரும்
ஓட்டுனரும் மட்டும்.
இடையில் எங்கோ 
நடத்துனரும் இறங்கிட 
அடுத்த நிறுத்தத்தில்
ஓட்டுனரும் இறங்கினார்.

இப்போது பேருந்தில் 
நான் மட்டும்.
ஆளரவமில்லாத இடத்தில்
ஒரு பேருந்தும் அதில்
கூட்டமாக நான் ஒருவனும்.
எங்கே சென்றுகொண்டு
இருந்தோம் என்று
யோசிக்கும் போது 
பேருந்தும் தெரியவில்லை
நான் மட்டுமே தெரிந்தேன்.

என்னை நானே அறிவதின்
ரகசியம் எவ்வளவு
சிந்தித்தும் பிடிபடாமல் போக
பேருந்தை விட்டு இறங்கி
நானும் வெளியேறினேன்.

No comments:

Post a Comment