Thursday, 11 January 2018

ஞாயிற்றுக் கிழமைகளின் மதியம் இரண்டு மணிக்கு திருநெல்வேலி வானொலி நிலையத்தில் புதிய திரைப்படங்களின் பாடல்கள் போடுவார்கள்.
தினமும் சாயாக்கடைகளில் வாசிக்கப்படும் தினசரிகளில் வெளியாகும் அந்த புதுப்படங்களின் விளம்பரங்களை கண்டு, அவை வெளியாகி ஓடும் நாட்களையும் வாரங்களையும் கணக்கிடுவதும் வசூல் சாதனை செய்யும் அவற்றின் வெற்றியை, மற்றும் பெண்களின் கூட்டம் அலை மோதி ஏற்படுத்திய சாதனையை வெளிப்படுத்தும் வாசகங்களுடன் வரும் அவற்றின் விளம்பரங்களை ஒரு ஏக்க மனப்பான்மையுடன் கண்டு அதன் பாடல்களை வானொலியில் கேட்டு ரசிப்பதன் மூலம் அத்திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வோம்,
இடையில் வெளியூர் காலேஜில் படிக்கும் அண்ணன்மார் ஊர் வரும்போது நகரங்களில் அந்தபடத்தைக் கண்டு தரும் தகவல்களை வாய் பிளந்தவாறு ஆவலுடன் கேட்போம்...
நெல்லை ராசபாளையம் மதுரை நகரங்களின் திரைகளில் அவர்கள் கண்டு வந்த திரைப் படங்களை எங்களிடம் சுவாரசியமாக சொல்வதையும் கேட்டு மனசுக்குள் ஏற்றி பள்ளிக்கூடம் போயி அங்குள்ள நண்பர்களிடம் அந்த படக்கதை பேசுவோம், அதிகபட்சம் பொடிக் கடையில் பாட்டுப் புத்தகம் வாங்கி சார்வாள் இல்லாத நேரத்தில் பாடி மகிழ்வோம்.
மயில் முதலியார் கடையில் காத்து நின்று லென்சு வாங்கி வந்து அது ஒழுங்காக வேலை செய்கிறதா என செக் பண்ணுவதற்கு வேனாக் கொதிக்கும் வெயிலில் சூரியனின் ஒளிக்கற்றையை லென்சின் வழியாக குவித்து வாங்கி ஒரு துண்டு ..... பீடித்துண்டின் மேல் படும்படி சிறிது நேரம் வைத்து அந்தப்பீடி புகைதர ஆரம்பித்ததும் மனம் கிளர்ச்சி பெற்று நல்ல லென்சு தாண்டே.. அப்படின்னு சமாதானம் அடைவோம்,
பெரிய அட்டைபெட்டி எடுத்து அதன் ஒரு பக்க சுவரில் அந்த லென்சை பதித்து பெட்டியின் நடுவில் ஒரு மெழுகு திரி நட்டு அழகிய சினிமா ஓட்டும் புரொஜெக்டர் தயார் செய்வோம்.
மார்கெட்டில் உள்ள சுடலை கடையில் பள்ளிக் கூடம் விட்டவுடன் ஓடிப்போய் பழைய எம்ஜியார் சிவாஜி படங்களின் அறுந்துகிடந்த பிலிம்களை நாலணா எட்டணாவுக்கு வாங்கி வரும் போது, எதோ எங்கள் கையில் படப்பெட்டியை சுமந்து வருவது போல எண்ணி வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து தியேட்டர் ஆரம்பிக்க நாள் குறிப்போம்,
வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் எங்களின் தியேட்டர்களில் நாங்கள் ஓட்ட உள்ள படங்களின் பெயர்களை அழகாக குண்டு குண்டான கையெழுத்தில் கோடு போட்ட நோட்டிலிருந்து தாளைக் கிழித்து துட்டுப் போட்டவனின் பெயரிலேயே தியேட்டர் ஆரம்பித்து :
இன்று முதல் ....... தியேட்டரில் எம்ஜியார் நடித்த என் அண்ணன் என அறைகூவல் விடுத்து அவ்வூட்டு சுவரில் கைந்தண்ணிப் பசை தேச்சு ஒட்டி விளம்பர மார்க்கெட்டிங் தொடங்குவோம்.
மெழுவர்த்தி ஏத்தி படம் காட்ட தயாரான நிலையில் படம் பார்க்க வருவோர் கையில் கந்தநூல் எனும் கழிவு உடை நூல்களை கட்டணமாக கொண்டு வரும்படி சொல்வோம். வாங்கி குமிச்சு வச்சிக்கிடுவோம்.
படம் காட்டும் எங்களின் நண்பர் கடுமையான பில்டப்புடன் என்னடே… நேரம் ஆச்சு படத்தை ஆரம்பிக்கட்டுமா.. என தொணதொணக்கவும் வாசலில் கம்பியை கொண்டு “நங்”குன்னு ஒரு அடி அதாவது பெல், உள்ளே காக்குளியிளிருந்து அவுக அண்ணன் ஏல என்ன அங்க சத்தம்…
அடே பய்ய அடியண்டே போடே எங்கண்ணனுக்கு தெரிஞ்சா நச்சுரும்….
அதை தொடர்ந்து அட்டையின் லென்சு வழி பாயும் ஒளிக்கீற்றில் அவர் கையில் வைத்திருக்கும் எம்ஜியார் பட பிலிமை காட்டி ஆட்ட அதன் பிம்பம் என்னமோ ஏதோன்னு வெள்ளையடிக்காத அந்த சுவரில் விழுந்து படிந்து மாய்ந்து மெழுகுவர்த்தி ஒளியில் சில நொடிகளில் மடியும்.
இரண்டு நிமிட இந்த படங்காட்டும் சாகசம் நிகழ்ந்த பின் அடே !!! '''பெல்லடி'''யேண் டே!!!
இன்டர்வெல் (இன்ற்றோல்)....
வேர்த்து விறுவிறுத்து வெளியே வருவோம்.
கர்ஜனை, ராசபார்வை , சிவப்புமல்லி என தொடரும் நெல்லை வானொலியின் பாடல்கள் ஞாயிறுகளின் மதியம் கேட்டு மனசில் பதிந்துவிட்டால் அதனை நாங்கள் மறுவாரம் மனப்பாடமாய் அந்த பாடலை வானொலியுடன் சேர்ந்து கூட்டாக பாடுவோம்.
கந்தநூல் விற்கப்பட்டு மூக்கையா லாலாவில் மிச்சர் வாங்கி ஆளுக்கு கொஞ்சம் தின்போம்.
எத்தனை பாட்டுப் புத்தகங்கள் அதன் முன்பக்கத்தில் அச்சில் வந்த படக்கதையை ஒருவன் சத்தமாக வாசிக்க நாங்கள் எல்லோரும் சுற்றியிருந்து கேட்போம், முக்கிய இடத்தில் படத்தின் நாயகன் தன தந்தையை தாயைக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்கினானா இல்லையா என்பதை வெள்ளித்திரையில் காண்க அப்பிடின்னு போட்டதை வாசித்து மகிழ்வோம்..
கண்மணியான நண்பர்களோடு கைகோர்த்து களிப்புடன் கொண்டாடி மகிழ்ந்த எங்களின் கைவசமிருந்த பாதுகாப்பான அந்தப்பால்ய கால நினைவுகள் நமத்துப்போன சாணித்தாளில் அச்சிடப்பட்ட பழைய கால பாட்டுப்புஸ்தகம் போல மடித்து பத்திரமாக எதோ ஒரு பாடப்புஸ்தகங்களின் நடுவில் எங்களின் கல்புக்குள் காலம்காலமாக…

No comments:

Post a Comment