Tuesday 16 January 2018

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம். ‘இலக்கணமாவது, ஒண்ணாவது... நான் என்னத்தக் கண்டேன், இனிமே போய்ப் படிச்சுட்டு வர்றதெல்லாம் ஆகாது’ என்று நீங்கள் உரைப்பது என் செவியில் விழுகிறது. அஞ்சற்க... இலக்கணம் அறியாமலேயே மரபுக் கவிதை(!) எழுத சுலப வழியொன்று உள்ளது. நீங்கள் தமிழ்ப் படங்கள் நிறையப் பார்த்திருப்பீர்கள்தானே... படம் பார்க்கும் பழக்கம் இல்லாத என் தங்கையைப் போன்றவர்கள் நிறைய சினிமாப் பாடல்களை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்தானே...
‘எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனம்தான் நான் துயிலும் மஞ்சம்'
இப்படில்லாம் எழுதியிருப்பாங்க. இப்படி கடைசிப் பகுதியில ராணி, கோணி, தேனீ, வாநீ அப்படின்னு ஒரே உச்சரிப்புல வார்த்தைகளைப் போட்டு நாலஞ்சு பாரா எழுதி அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு வெச்சுட்டீங்கன்னா.... மரபுக் கவிதை ரெடி. இன்னொரு டைப்பாகவும் இதை நீங்க எழுதலாம்.
செந்நெல் ஆடிய வயல்களினூடே
என் பார்வை பட்டநேரம்...
மின்னல்போல கண்ணில் தோன்றி
மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
என் மனதைத் திருடிவிட்டாள்!
இதுல கவனிச்சீங்கன்னா முதல் வரியில வர்ற அதே வார்த்தை ஸ்டைலை மூணாவது வரியில கொண்டு வரணும். ரெண்டாவது வரியை முதல் வரியோட கோவிச்சுக்கிட்டுப் போற மாதிரி கொஞ்சம் நகர்த்திப் போடணும். ரைட்டா.... இப்படி கவிதை(?) இயற்றி, அதை பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா நீங்களும் இப்போ மரபுக் கவிஞரே...! (எதுக்கும் பப்ளிஷ் பண்ணினப்புறம் ஒரு ஹெல்மெட்டை தலையில மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கறது பெட்டர். இல்லாட்டி புலவர் ராமானுசம் ஐயா மாதிரி ஆசாமிங்க படிச்சுட்டு குட்டறப்ப தாங்கறது கஷ்டம்! ஹி... ஹி...!)
கஷ்டமான மரபுக் கவிதைய ஒரு வழி பண்ணிட்ட உங்களுக்கு புதுக்கவிதைங்கறது ரொம்ப ஈஸியான விஷயம்தாங்க... இதுக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா ஈஸியா அதை கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம். யாரும் எதும் கேக்காம ‘சூப்பர்' ‘அருமை'ன்னு கை தட்டுவாங்க. ஒரு பாராவுல ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?' அப்படின்னு சீரியல்ல நீங்க கேட்ட வசனமாவும் இருக்கலாம். இதையே...
கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?
நலலவனாய் இருப்பவனோ நாளும்
துன்பந்தான் படுகின்றான்!
அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம். அத விடுங்க... ரெண்டு டைப்பான கவிதை வகைகளைப் பார்த்துட்ட நீங்க, ஹைக்கூங்கற வடிவத்தை மட்டும் ஏங்க விட்டு வெக்கணும்? அதையும் தெரிஞ்சுக்கங்க. ‘ஹைக்கூ என்பது படித்ததும் உங்கள் மனதில் ஒரு காட்சியை நிறுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு உணர்வை தோற்றுவிக்க வேண்டும்' அப்படின்னு சொன்னாரு எழுத்தாளர் சுஜாதா.
அவர் கெடக்கார் அப்பாவி மனுஷன்! நமக்கு வேண்டியதெல்லாம் என்ன... ஹைக்கூங்கறது மூணு வரியில வரணும். அவ்வளவு தாங்க வேண்டியது. முன்னல்லாம் ‘ஜுனூன் தமிழ்'ன்னு ஒரு பேட்டர்னை சொல்வாங்க கேட்டிருக்கீங்களா? வரணும் நீ இப்ப.... சொல்ற என்ன நீ? அப்படின்னுல்லாம் வினோதமா சிரசாசனம் செய்யற வாக்கியங்களா வரும். கிட்டத்தட்ட அதே பேட்டர்னை அப்ளை பண்ணினீங்கன்னா ஹைக்கூ ரெடிங்க. உதாரணமா... ‘தண்ணீரில் காதலியின் முகத்தைப் பார்த்தேன். நிலவு போல் தெரிந்தது' அப்படின்னு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கங்க... அதை அப்படியே ரிவர்ஸ்ல மூணு வரியில எழுதிப் பாருங்க...
நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!
...இவ்ளவ் தாங்க ஹைக்கூ! இதை மாதிரி நாலஞ்சு எழுதி நீங்க பிரசுரிச்சுட்டாப் போதும். ஹைக்கூவும் உங்களுக்கு கை வந்திடுச்சு(கைக்கூ?)ன்னு அர்த்தம். இதுல்லாம் ஹைக்கூவே இல்ல பொய்க்கூன்னு யாராச்சும் நாலு பேரு கூவத்தான் செய்வாங்க. விட்டுத் தள்ளுங்க... அப்படிக் கூவக்கூவ உங்க பாப்புலாரிட்டி கூடுதுன்னுதானுங்க அர்த்தம்! அதனால... வெரைட்டி வாரியா கவிதைங்களை எழுதி, கவிஞர் அவதாரமெடுத்து கவிதையுலகைக் கலக்குங்க... அப்புறம்... மறந்துராம அதையெல்லாம் தொகுத்து அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ள புத்தகமா வெளியிட்டுருங்க. பிறகென்ன... நீங்க பு.க.வுக்கு வர்றீங்கன்ற தகவல் கெடைச்சதுமே கெடைக்கற மரியாதையே தனி தான். ஹி... ஹி... ஹி...!
‘ஊசி' குறிப்பு 1 : நல்ல கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும் இதை ஒரு பகடியாக மட்டுமே எடுத்துக் கொணடு (முடிந்தால்) நகைக்க வேண்டுகிறேன்.
‘ஊசி' குறிப்பு 2 : இவ்வளவு விளக்கமா வழிமுறைல்லாம் சொல்ற... நீ ஏன்யா கவிதை எழுதலைன்னு யாராச்சும கேட்டீங்களோ.... பிச்சுப்புடுவேன் பிச்சு! பேக்கரில இருக்கறவன் ஸ்வீட் தின்ன மாட்டான், சமையல்காரன் தானே சமைச்சதை சாப்பிட மாட்டான். அது மாதிரிதான்... நானும்... ஹெஹ்ஹெஹ்ஹே..!

No comments:

Post a Comment