Tuesday 23 January 2018

இருள் பரவ துவங்கிய நேரம்...
ஒற்றை குரலொன்று
கேவலாய் அழைத்தது அம்மாவென...

இத்தனை நேரம் போராடிய மனம்
இதோ இலவம் பஞ்சாய் வெடிக்கிறது...

நீர் முட்டிய கண்கள் கண்ணீரை வழிய விடுகிறது...
அதில் மனதின் பாரங்கள் கரைய துவங்கின...

உன்னை காணாது நான் தவித்த தருணங்கள்
நரகம் காட்டி சென்றதடா கண்ணா...
எத்தனை துயரென்றாலும் உன்
உதடுகள் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில்
என் சொர்க்கம் காண்பேனே...

நானுனக்கு தமைக்கை என்கின்றனர் பலர்,
நீ என் மணிவயிறு சுமக்கா குழந்தையென அறியாமல்...
வாடா என் கட்டித்தங்கமே,
அம்மாவென என்னை கட்டிக்கொள்
என் ஏழு ஜென்மம் உனக்காய் நீளும்...

என் பல்லாங்குழி ஆட்டத்துள்
குன்னிமுத்தாய் நுழைந்தவன் நீ...
என்னை இடறி விடும் வழுக்கு பாதையில்
கைபிடித்து கரை சேர்த்தவன் நீ..

பிரம்மன் எனக்கொரு வரமளித்தால்
உன் ஆயுள் நீட்டிக்க ஒரு அட்சய பாத்திரம் கேப்பேன்...
வாடா மலராய் நீ என்றும் சிரிக்க
கூடவே வாசனை சேர்ந்து பதிய கேட்பேன்...
எனக்குள்ளே உன்னையும் வைத்து
உன்னை அரணாய் காத்திட கேட்பேன்...

மழையில் நனைந்து வாடிய மலரே...
வா வந்து பசியாறு...
அன்னை நானொருத்தி காவலுக்கு உண்டென
கவலை மறந்து துயில் கொள்ளு....

வானம் வாழ்த்தி பொழிகிறது
நாளைய விடியல் அது நமக்கென தான்...

No comments:

Post a Comment