Wednesday 17 January 2018

இன்று மறுபடியும் Alchemist படிக்க ஆரம்பித்தேன். ரொம்பவும் பிடித்த கதை. இந்தக் கதையை – இது போல ஒரு புத்தகம் இருக்கிறது என்று நான் தெரிந்து கொண்டதே ஒரு சின்ன கதை போலத்தான்.

அப்போது நாங்கள் இருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் மூன்று பிரம்மச்சாரிகள் இருந்தனர். பார்க்கும் போது ‘ஹாய்!’ சொல்லும் அளவிற்குத் தான் பழக்கம். ஒருநாள் காலை வெளியே வரும்போது அவர்கள் கதவில் Alchemist என்று எழுதி ஒட்டியிருந்தது. இது என்ன திடீரென்று இப்படி எழுதி ஒட்டியிருக்கிறார்களே. என்று நினைத்துக் கொண்டேன். என்னை பொறுத்தவரை இதற்கு அர்த்தம் ‘ரசவாதி’ என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. அதற்குப் பிறகு பலநாட்கள் அவர்களைப் பார்க்க முடியவில்லை. ஒருநாள் காலை அவர்கள் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவசரமாக நானும் எங்கள் வீட்டுக் கதவைத் திறந்து ‘இது என்ன?’ என்று கேட்டேன். ‘அது ஒரு புத்தகம் ஆண்ட்டி. Paulo Coelho என்பவர் எழுதியது. எங்களை ரொம்பவும் கவர்ந்துவிட்டது. உண்மையில் ரசவாதம் தான். நீங்களும் படித்துப் பாருங்கள்!’

உடனே நான்.’உங்களிடம் இருந்தால் கொடுங்களேன், படித்துவிட்டுக் கொடுக்கிறேன்’ என்றேன். ‘ஸாரி, இந்தப் புத்தகத்தை ஓசியில் படிக்கக்கூடாது. அவரவர்கள் கைக்காசைப் போட்டு வாங்கிப் படிக்க வேண்டும்’ என்றான் அந்த இளைஞன்.

இந்தப் புத்தகத்தை எப்போது வாங்குவது என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. எனது மைத்துனர் பிள்ளை ஒருமுறை வந்திருந்தான். பக்கத்து வீட்டில் இருந்த பெயரைப் பார்த்துவிட்டு ‘இது என்ன வீட்டிற்குப் பெயரா?’ என்றான். அவனிடம் அந்த இளைஞன் சொன்னதைச் சொல்லிவிட்டு, ‘இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறாயா?’ என்று கேட்டேன். ‘இல்லை, பெரியம்மா’ என்றவன் வெளியே போய்விட்டு வரும்போது வாங்கிக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான். ‘உங்கள் பிறந்தநாளைக்கு என் பரிசு’ என்றான். நான் படித்து முடித்து பிறகு வேறு யாருக்கோ படிக்கக் கொடுக்க அந்தப் புத்தகம் போயே விட்டது. அதன் பிறகு என் தொல்லை பொறுக்கமுடியாமல் என் பிள்ளை வேறு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தான். பல வருடங்களுக்குப் பிறகு இன்று படிக்க ஆரம்பித்தேன் திரும்பவும்.

ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் அப்படியே தமிழில் எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். மொழிபெயர்ப்பு என்றால் அனுமதி பெற வேண்டுமாமே. எனக்காக நானே இதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு அற்புதமான நடை.

முன்னுரையில் ஆசிரியர் இந்த ரசவாதத்தைக் கற்க தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட நேர்ந்தது என்று சொல்லிக்கொண்டு போவார். கடைசியாக தனக்கு ஒரு குரு கிடைத்ததாகவும் அவர் இந்த ரசவாதம் பற்றி சொன்ன கருத்துக்களை விளக்க ஒரு கதை சொல்லுவார். அதைத்தான் இங்கு எழுதுகிறேன்.

ரசவாதிகள் ஏன் குழப்பமாகவே தெளிவற்ற மொழியில் பேசுகிறார்கள்? இது ஆசிரியரின் கேள்வி. அதற்கு குரு சொல்லுகிறார்: ‘மூன்று விதமான ரசவாதிகள் உண்டு. முதல்வகை தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அதனாலேயே அவர்களது மொழி தெளிவற்றதாக இருக்கிறது. இரண்டாம் வகையினர் என்ன செய்கிறோம் என்று அறிந்தவர்கள் கூடவே ரசவாதம் என்பது நம் அகத்தை விளிப்பது புறத்தை அல்ல என்பதையும் உணர்ந்தவர்கள். மூன்றாமவர்கள் ரசவாதம் என்ற பெயரையே கேட்டிராதவர்கள். ஆனால் தங்கள் வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சித்தர்மணிக்கல் (உலோகங்களை தங்கமாக மாற்றகூடிய ஒரு பொருள்)) எனப்படும் ரசவாதக் கல்லை கண்டுபிடித்து வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துபவர்கள்’.

இந்த மூன்றாவது வகையினரை விவரிக்க இந்தக் கதையைச் சொல்லுகிறார், பாலோ.
ஒருநாள் கன்னிமேரி குழந்தை ஏசுவை அழைத்துக் கொண்டு பூலோகம் வருகிறாள். ஒரு மடாலத்திற்கு செல்லுகிறாள். மாதாவைக் கண்டவுடன் அவளுக்கு மரியாதை செலுத்த அங்குள்ள துறவிகள் ஒரு நீண்ட வரிசையில் வருகிறார்கள். மாதாவின் மனதைக் கவர ஒவ்வொருவரும் தங்கள் அறிவுத்திறனை காட்டுகிறார்கள். ஒருவர் ஒரு அருமையான கவிதையை வாசிக்கிறார்; இன்னொருவர் பைபிள் கதை நிகழ்ச்சிகளைக் கொண்டு தானே வரைந்த சித்திரங்களைக் காட்டுகிறார்; இன்னொரு துறவி புனிதர் ஆக்கப்பட்ட எல்லாருடைய பெயர்களையும் சொல்லிக் காட்டுகிறார். கடைசியாக ஒரு எளிய மனிதர் வருகிறார். அவர் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை. அவரது பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் செல்லும் ஓர் சர்க்கஸ்- இல் வேலை செய்பவர்கள். அவர்களிடமிருந்து இவர் கற்றதெல்லாம் ஒரே ஒரு வித்தைதான். பந்துகளை வீசி எறிந்து அவை கீழே விழாமல் மாற்றி மாற்றி கையால் தட்டுவதுதான்.

எல்லோருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ளுகிறது. இவன் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யத் தெரியாமல் செய்து நமது மடாலயத்தின் கௌரவத்தை குறைத்துவிட்டால் என்ன செய்வது? எல்லோரும் தன்னை ஒருவித அதிருப்தியுடன் பார்ப்பதை கவனித்துக்கொண்டே அந்தத் துறவி தனது பையிலிருந்து சில ஆரஞ்சுப் பழங்களை எடுத்து அவற்றை மேலே எறிந்து அவை கீழே விழாமல் தனது கைகளால் மாற்றி மாற்றி தட்ட ஆரம்பித்தார்.

மேரி மாதாவின் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை ஏசு இவர் செய்வதைப் பார்த்து புன்னகையுடன் தன் கைகளைத் தட்ட ஆரம்பித்தார். அதைப்பார்த்த கன்னிமேரி அவரைக் கூப்பிட்டு, ‘குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள்.

எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. கட்டாயம் படியுங்கள்.

No comments:

Post a Comment