Tuesday 16 January 2018

ரஜினிகாந்த் என்கிற கோமாளியும் தமிழக அரசியலின் வெற்றிடமும்


மறைந்த எழுத்தாளர் ஞானி, "இவர்கள் என்றாவது எந்தக் கல்வியாளரின் உரையையாவது ஒரு மணி நேரத்திற்குக் கேட்பார்களா?" என்று 8 மணி நேரம் சினிமாக்காரர்களின் குத்தாட்டத்தையும் அருவருப்பான துதிப்பாடலையும் தன் சகல அமைச்சரவை சகாக்களுடன் முழுவதும் கண்டு களித்த கருணாநிதியையும் அவர் அமைச்சர்களையும் நோக்கிக் கேட்டார். 1967-இல் ஒரு சினிமா கூத்தாடியின் விளம்பரத் துணையோடு ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம் இன்று தமிழகத்தை ரஜினிகாந்த் போன்ற கோமாளியிடம் ஆட்சியதிகாரத்தைத் தூக்கிக் கொடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கிறது. இது அவலம். கேவலம். வீழ்ச்சி.



ரஜினிகாந்த் குறித்த என் ஆட்சேபம் அவர் சினிமாக்களின் தரம் பற்றியதோ அவர் நடிப்புத் திறன் பற்றியதோ அல்ல. மாறாகப் பொது வாழ்க்கைக்கு எந்த வகையிலும் லாயக்கற்ற கோமாளி அவர் என்பதால் தான்.









1967-இல் சினிமா கூத்தாடியின் 'விளம்பரத் துணையோடு' ஆட்சியைப் பிடித்தனர் என்று தான் சொன்னேன் அவர்கள் ஆட்சிக்கே தகுதியற்றவர்கள் அல்ல. ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு அண்ணாதுரையும் அவர் கட்சியும் எல்லா வித ஜனநாயகத் தகுதியும் பெற்றிருந்தனர். அவர்கள் முன் வைத்த கருத்துகள், ஜனநாயக மரபுகளூடாக வெகு ஜன அரசியலை கைக்கொண்ட முறைகள் என்று தொடங்கிப் பல தளங்களில் அவர்களை எதிர்ப்பதோ நிராகரிப்பதோ நியாயமானது. ஆனால் அண்ணாதுரை ஓர் இயக்கித்தின் வேர். பல்லாண்டு உழைப்பில் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இயக்கமாக இருந்து பின்னர் ஆட்சிக்கு வந்தனர் திமுகவினர். அண்ணாதுரை பதவியேற்ற போது அவருக்கும் அவர் கட்சியனருக்கும் குறைந்த பட்சக் கொள்கைகள் இருந்தன. பிரிவினை வாதத்தை நிராகரிக்கலாம் ஆனால் அதுவும் ஒரு கொள்கை தானே? பிராமணத் துவேஷத்தை குறைச் சொல்லலாம் ஆனால் அதனடியில் அதிகார பரவலாக்கம் நிகழ்ந்ததையும் அதனால் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களையும் ஒட்டு மொத்தமாக விலக்க முடியுமா? 1967-இல் அமைச்சரவை அமைத்த போது அரசியல் அரங்கில் பாலகர்கள் அல்ல அண்ணாவும் திமுகவும். பேரியக்கமான காங்கிரஸையும் பெருந்தலைவரான காமராஜரையும் வீழ்த்தியது சாதாரணமல்ல.



"The Politics of Cultural Nationalism in South India" by Marguerite Ross Barnett அறுபதுகளின் அரசியலைப் புரிந்து கொள்ள ஓரு அற்புதமான தகவல் களஞ்சியம். திமுக வெகு ஜன இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தும் போதே தங்களைப் 'படித்தவர்களின் இயக்கமாகவும்' முன்னிறுத்தியது ஒரு முரன். அதன் அடித்தளத் தொண்டர்கள் காங்கிரஸ் தொண்டர்களை விட அதிக விகிதம் படிக்காதவர்களைக் கொண்டிருந்தாலும் தலைமைப் பொறுப்புகளில் காங்கிரஸும் திமுகவும் படித்தவர்களை முன்னிறுத்தியது. கல்லூரிகள் திமுகப் பாசறைகள் ஆயின. இன்று வரை திமுகப் படித்தவர்களின் ஆதரவையும் அதிமுகக் கிராமப்புற ஆதரவையும் நம்பியே இருக்கின்றன.



கருணாநிதி முறையாகப் படிக்காதவராயினும் புலமை மிக்கவராகவே பார்க்கப்பட்டார். திமுகவின் முக்கியப் பேச்சாளராகவும், தளக் கர்த்தராகவும், சூத்திரதாரியாகவும் கருணாநிதி வளர்ந்தார். அவரைப் பற்றி மிக மிகக் காட்டமான பதிவுகளை எழுதியிருக்கிறேன் அது அவர் பின்னாளில் அடைந்த சறுக்கலினால். போர் குணமிக்கச் சாமர்த்தியசாலியான கருணாநிதியை இன்று வரலாறும் இன்றைய தலைமுறையும் கிட்டத் தட்ட மறந்தேவிட்டன. அண்ணாதுரை கருணாநிதிக்கு கணையாழி அணிவித்த வரலாறு இன்று, கண்ணதாசன் புண்ணியத்தில், சந்தி சிரித்து விட்டது ஆனால் அந்தச் சிரிப்பில் நாம் மறக்கக் கூடாதது அந்தத் தேர்தலில் உண்மையிலேயே கருணாநிதியின் சுறுசுறுப்பும் அவர் வியூகம் அமைத்த ஆற்றலும்.



எல்லோரும் ஜெயகாந்தன் அண்ணாதுரையின் இரங்கல் கூட்டத்தில் பேசிய உரையை மட்டும் நினைவில் கொள்கிறோம். 1972-இல் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' எழுதிய ஜெயகாந்தன் ஜூலை 10 1979-இல் கருணாநிதியை சந்தித்து நீண்டதொரு பேட்டியெடுத்திருக்கிறார். அதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம். அந்தப் பேட்டியில் மிகப் பண்போடு இருவரும் உரையாடிக் கொள்கிறார்கள். திமுகப் பற்றி அதற்குப் பின்னும் ஜெயகாந்தன் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார். அந்திமக் காலத்தில் கருணாநிதியோடு அவர் கொண்டிருந்த நட்பை ஆச்சர்யத்தோடு பார்த்தவர்கள் எவரும் எழுத்துகளோடு பரிச்சயமில்லாதவர்கள். கவனிக்க வேண்டியது கருணாநிதியைக் கூட நெருங்கிப் பார்க்க ஆட்சேபமில்லாத ஜெயகாந்தன் எம்.ஜி.ஆரை நெருங்கியதேயில்லை. ஓர் ஆவணப் படத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க வாய்ப்பு வந்ததையும் தான் அதை நிராகரித்ததையும் ஜெயகாந்தன் நினைவு கூர்ந்தார். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் ரஜினி பற்றிய என் கோணம் விளங்கும்.



எம்.ஜி.ஆர் திமுகவை விட்டுப் பிரிந்த போது கருணாநிதியின் மீது அசூயைக் கொண்ட சில மூத்த தலைவர்களும், நெடுஞ்செழியன் போன்றோர், அவரோடு வந்தார்கள். அதிமுக என்பது நீண்ட அரசியல் பாரம்பர்யம் கொண்ட திமுகவில் இருந்து பிரிந்தக் கட்சி. அதன் சாதகங்கள் அதிகம். எம்.ஜி.ஆர் வெறும் சினிமாக்காரராகப் பார்க்கப் படாததற்கு இது முக்கியக் காரணம். ஆட்சியமைத்த போது அனுபவசாலிகள் அமைச்சரவையில் கொஞ்சமாவது இருந்தார்கள். ஆனால் கூடிய சீக்கிரமே எம்.ஜி.ஆர் அரசாட்சியைச் சினிமாவில் ஜாலம் காட்டுவது போல் நடத்தத் துவங்கினார் என்பது தான் உண்மை. ராமாவரம் தோட்டம், எம்.ஜி.ஆரின் நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் சினிமாத்தனம் இருந்தது. எம்.ஜி.ஆர் அறிவு பூர்வமாகப் பேசியதாக எந்த ஒரு வரியையும் யாரும் இன்று மேற்கோள் காட்டிவிட முடியாது.



எம்.ஜி.ஆருக்கு இருந்த குறைந்தப்பட்ச அனுபவம் கூட ஜெயலலிதாவிடம் இல்லை. ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலம் கந்திரக்கோளம். "அவர் ஐயங்கார் இல்லை ஆயிரம் கார்" என்றார் நண்பராக இருந்த சோ. அரசாங்கம், ஆட்சி, கட்சி இது எதையும் நடத்தத் தெரியாமல் ஜெயலலிதா தத்தளித்தார். காட்டு தர்பார் நடந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளும் மூன்று ஆட்சிக் காலமும் செலவாயிற்று ஜெயலலிதா என்கிறவர் முதிர்ச்சியடைய. பாவம் அவர் முன்னர்ச் செய்த தவறுகளும் நோயும் துரத்த இரும்பு மனுஷி என்கிற மாயையை நிறுவிய சாதனையோடு அவர் சகாப்தம் முடிந்தது.



இன்று ரஜினி முதல்வராக ஆசைப் படுகிறார். எம்.ஜி.ஆர், ஜெயா ஆகியோரின் பின் ஒன்றிரண்டு அனுபவசாலிகளாவது நின்றார்கள், கட்சி என்ற அமைப்பு இருந்தது. ஆனால் ரஜினியின் பின்னோ வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள். ஜெயலலிதாவால் கரண் தாபரோடு உரையாட முடிந்தது ரஜினிக்கு இரண்டு வரியைக் கூடச் சேர்ந்தார் போல் பேசத் தெரியவில்லையே.



விஜயகாந்த் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்தால் கமலும் ரஜினியும் என்னாவார்கள் என்பது விளங்கும். எம்.ஜி.ஆர் போலவே நீண்ட நாள் திட்டத்தோடு தன் சினிமாவை அரசியல் பிரவேசத்துக்கான இமேஜைத் தயாரிக்க விஜயகாந்த் பயன் படுத்தினார். 'ரமணா' படத்துக்குப் பிறகு விஜயகாந்த் என்றாலே அரசியல் திட்டங்கள் முன் மொழிவது, புள்ளி விவரம் அடுக்குவது என்று வாடிக்கையாகி மிமிக்ரி செய்வோர் கூட அதைக் கிண்டலடித்தார்கள். விஜயகாந்த் பேசியது போல் கூட இது வரை ரஜினி பேசியதில்லையே?



விஜயகாந்த் தன் கட்சியை மனைவி, மச்சினன் கையில் அடகு வைத்துக் குடும்பக் கட்சி நடத்தினார். கட்சியில் குடும்பத்தினர் பங்காற்றுவது, குடும்பத்தினர் என்பதாலேயே பதவியில் அமர்வது என்பதில் இருந்து குடும்பமே கட்சி என்ற கீழ்மை நோக்கிச் சென்றது விஜயகாந்த் கட்சி. எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தார் போல் அவரின் சொந்த நிலையாமை. சட்ட சபையில் எப்படிப் பேச வேண்டும் என்று கூடத் தெரியாத விஜயகாந்த் அடுத்தத் தேர்தலில் காணாமல் போனார். எம்.ஜி.ஆர் இருந்த போது 13 ஆண்டுக் காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் திமுக என்ற கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்ததோடு ஆளுங்கட்சிக்கு கூட இல்லாத பெரிய கட்சி அலுவலகத்தைத் திமுகவுக்காகப் புரோகிதர் உத்தியோகம் பார்த்துக் கட்டியெழுப்பிய கருணாநிதியை நினைத்துப் பார்க்க வேண்டும்.



எம்.ஜி,ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரையும் வீழ்த்தியது அவர்கள் தங்கள் தனிப் பெரும் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஆட்சியையும் கட்சியையும் நடத்தியது தான். தனி மனித துதிப் பாடலின் மிகக் கேவலமான நிகழ்வுகளைத் தமிழகம் கண்டது. அவர்கள் யாரையும் விடச் சாமான்யர்கள் என்றில்லை சக சினிமா கலைஞர்கள் யாருடனும் கூட ரஜினிக்கு மனித அளவில் உறவே கிடையாதே? ரஜினியின் நண்பர்கள் யார்? அந்த மூவரில் இருவருக்குக் குடும்ப உறவுகள் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. ரஜினியோ குடும்பத்திடம் இருந்தும் விலகி இருப்பவர்.



மனிதர்களிடம் இருந்து விலகி ஓடுபவர் ரஜினிகாந்த். தனிமையை நேசிப்பதோ நாடுவதோ அவர் தனிப்பட்ட விருப்பம் ஆனால் பொது வாழ்க்கைக்குச் சற்றும் லாயக்கில்லாத மன நிலை அவருடயது என்பதை யாராவது மறுக்க முடியுமா? ரஜினியின் சினிமா வாழ்வின் ஆரம்பத்தில் தன் மீது விழுந்த திடீர் வெளிச்சம், கொட்டிய பணம் எதையும் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார் என்பது 1980-களில் பத்திரிக்கைப் படித்த யாருக்கும் தெரியும். இன்று அந்தத் தத்தளிப்பு இல்லை ஆனால் அதில் இருந்து ஓடும் ஓட்டம் நிற்கவில்லை.



தமிழ் நாடு என்பது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டால் ஒரு நாட்டுக்குச் சமம் ஆனால் இன்று நம் முன் நிற்கும் முதல்வர் வேட்பாளர்கள் அல்லது முதல்வராக ஆசைப்படுவோர் ஸ்டாலின், இ.பி.எஸ், தினகரன், கமல் ஹாசன், சீமான் ஆகியோர் தான். கிட்டத்தட்ட தேய் வழக்காகிவிட்ட பாரதியின் மேற்கோள்களில் ஒன்று, 'விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்'.



சீமானின் தமிழ் தேசியம் என்பது காமடியாகவும் விஷச் செடியாகவும் ஒரே நேரத்தில் தெரிவது எனக்கு மட்டுமா? அவர் கோமாளியாகப் பேசாத போது நாஜித்தனமாகப் பேசுகிறார். இவருக்குக் கைத்தட்டி இவர் பேசும் அபத்தத்தையெல்லாம் சித்தாந்தம் என்று பேசுபவர்களை விட ரஜினி ரசிகன் அறிவாளி.



தினகரனின் பேச்சை சமத்காரம் என்று வியக்கிறார் முரசொலியில் எழுதும் உயரிய தகுதி இருந்தும் 'தமிழ் இந்து' மாதிரி துண்டு பிரசுரத்தில் எழுதும் சமஸ். 'அரசியல்வாதி என்றால் கோவணத்தோடு இருக்க வேண்டுமா" என்று புது மொழியில் பேசினாராம் தினகரன். சமஸ் சொல்கிறார். தான் சோரம் போனது பற்றிய கேள்விக்கு நடிகை ஒரு வேசி என்று வாய்ச்சவடால் அடித்தார் அண்ணாதுரை அதற்கும் ஒரு கூட்டம் கைத் தட்டியது. அன்று ஆரம்பித்தது இந்த வெற்று வாய்ச்சவடால்களைச் சாமர்த்தியம் என்று சிலாகிக்கும் அருவருப்பான மனோபாவம்.



ரஜினியின் போதாமைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள நாம கமல்ஹாசனை ஒப்பு நோக்க வேண்டும். ரஜினியின் விசிலடிச்சான் கூட்டம் இதற்கு மேல் படிக்காமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.



கமல் வாழ்க்கையை நேசிப்பவர். ரஜினி வாழ்க்கையில் இருந்து ஓட்டம் எடுப்பவர். பொது மேடைகள், தனி வாழ்க்கை என்று எங்குமே கமல் மிக நேர்த்தியான உடையோடவே இருப்பார். ரஜினியோ அலட்சியம். இதில் பெருமைப் படவோ, வியக்கவோ ஒன்றுமில்லை. உடையிலும் தோற்றத்திலும் காட்டும் அலட்சியத்தை ரஜினி என்றுமே பண விவகாரத்தில் காட்டியது கிடையாது.



20 வருடங்களுக்கு மேலாகத் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துபவர் கமல். தன்னைக் காண்பதையே பெரும் கனவாக நினைத்து தன் பிறந்த நாளன்று திரண்டு வரும் ரசிகர்களை ஏமாற்றுவதைக் கேளிக்கையாகச் செய்பவர் ரஜினிகாந்த். இவரா பொது வாழ்க்கைக்கு ஏற்றவர்?



பல வருடங்களுக்கு முன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாகத் தூர்தர்ஷன் கமலின் நேர் காணல் ஒன்றை ஒளிப் பரப்பினார்கள். அதில் ஜெய்ஷங்கர் கமலிடம் "எல்லோரும் சினிமாவில் சில்லறைப் பார்க்க நினைப்பார்கள் ஆனால் நீங்கள் நஷ்டம் ஏற்படுத்தும் படங்கள் எடுப்பது ஏன்" என்று நேரிடையாகக் கேட்டார். பாலு மகேந்திரா இன்னும் ஒரு படி மேலே போய் "கமலின் ஒரு நல்ல படத்தைப் பார்ப்பதற்குப் பத்துக் குப்பைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது" என்றார். கமல் எல்லாக் கேள்விகளுக்கும் புன்னகையோடு பதில் சொன்னார். கமலின் பேட்டிகளில் இது எப்போதும் தெரியும். அவர் மகாத்மா அல்ல ஆனால் ஒரு மனிதனாக அனுகக் கூடியவர். ரஜினி அப்படியல்ல. பொது வாழ்க்கைக்கு லாயக்கற்றவர். ஸ்டாலினும், கருணாநிதியும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டால் அனுகக் கூடியவர்களே.



இன்று கிட்டத்தட்ட சித்தாங்கள் அற்ற பிழைப்புவாத அரசியலுக்கு வந்துவிட்டோம். ஸ்டாலினோ ரஜினியோ இன்று யாருக்கும் பெரும் சித்தாந்தங்கள் ஏதுமில்லை. கமல் சித்தாந்தம் என்று ஒன்றிரண்டாவது சொல்வார். 'அன்பே சிவம்' மார்க்ஸியம் பேசியது. அவர் காந்தியின் வழி வந்தவர். தமிழை நேசிப்பவர். இலக்கியம் பயின்றவர்.



ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் தத்தம் நாயகர்களின் குணாதிசியங்களாக முன் வைத்து சண்டையிடுவது பெரும் பாலும் முன்னவர் வெகுஜன நாயகன் என்பதும் இரண்டாமவர் அறிவு ஜீவித்தனமான பிம்பம் கொண்டவர் என்பதும். இதில் கமலின் அறிவுஜீவித்தனமான சினிமாவை, குறிப்பாக அவை தோல்வியுறும் போது, கலாய்ப்பதில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அலாதி சுகம் இருக்கும். இது சினிமா கலாய்ப்பில் ஆபத்தில்லாதது. ஒரு பெரும் மாகாணத்தின் ஆட்சிப் பீடத்தில் அமர்பவருக்குக் குறைந்த பட்ச அறிவுத் தேடல் இருக்க வேண்டும்.



ரஜினியின் 'மனிதன்' சினிமாவுக்கும் கமலின் 'நாயகன்' சினிமாவுக்கும் இடையே போட்டியில்லை அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் வெற்றிப் பெற்றன அந்த வெற்றியில் அவர்கள் இருவரும் மேலும் முன்னேறினார்கள் ஆனால் முதல்வர் பதவி என்பது ஒன்று தான் இருவரில் ஒருவர் தான் அதற்கு லாயக்கு. கமல், ரஜினி இருவரின் சினிமாப் பயணம் அவர்களின் ஆளுமையைத் தெளிவுப் படுத்துவதோடு அவர்களை வேறு படுத்தியும் காண்பிக்கிறது. மசாலாப் படத்தில் அடைந்த வெற்றியைப் பார்த்து இது தானே விற்கிறது அதையே கொடுக்கிறேன் என்ற பாதையில் சென்றவர் ரஜினி. 'சகல கலா வல்லவன்' வெற்றியைப் பார்த்து மிரண்டு வெகு ஜன ரசனைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தால் பின்னர்த் தான் வெறும் மசாலா நாயகனாகி விடுவோம் என்று பயந்து வேறு பாதையைச் சுவாதீனமாகத் தேர்ந்தெடுத்து அதில் ஏற்றங்களும் இறக்கங்களும் கண்டு தொடர்ந்து பயணிப்பவர் கமல். இருவரில் யாருக்குத் தலைமைப் பண்புள்ளது?



பொது மக்களின் சுவையறிந்து ஒரு பெரும் ஜனத்திரளை தன் கைவசம் 30 வருடங்களுக்கு மேலாகத் தன் கையில் வைத்திருக்கும் ரஜினி சாமர்த்தியசாலி இல்லையா என்று வாதிடலாம். அதைச் சில்க் ஸ்மிதாவும் செய்தார். கேட்டதைக் கொடுத்து அபிமானத்தைச் சம்பாரிப்பது குறைந்த பட்ச சாமர்த்தியம். 'நாயகன்' படத்தோடு சேர்ந்து வந்த 'மனிதன்' படத்தை இன்று ரஜினியே மறந்திருப்பார்.



ரஜினி அடிப்படையில் தைரியமில்லாத கோழை. வியாபார நஷ்டம் பற்றிக் கவலைப் படாமல் (அதுவும் அது இன்னொருவரின் தயாரிப்பாக இருந்தால்) படம் எடுப்பவர் கமல். ரஜினியோ தன் வியாபாரத்தில் குறியாய் இருப்பவர். இது கதை தேர்வுக்கு மட்டும் என்றில்லை. 1992-96 காலத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய பிரதம மந்திரி நரசிம்ம ராவ் ரஜினியை நேரில் சந்தித்துக் காங்கிரஸ் பக்கம் இழுக்கப் பார்த்தார். கடைசி வரை போக்குக் காட்டினார் ரஜினி. பிறகு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியைத் தன் சினிமா வியாபாரத்திற்கு அப்பட்டமாக 20 வருடங்களுக்கு மேலாகப் பயன் படுத்தினார்.



இந்த 'ரஜினி வாய்ஸ்' என்பது பம்மாத்து. ரஜினி வாய்ஸ் கொடுத்து ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஜெயித்ததில்லை. 1996-இல் குருவி உட்கார பனம்பழம் விழுந்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணத்திற்குப் பின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்தார். 234 தொகுதியில் வரலாறு காணாத தோல்வி ஜெயலலிதாவுக்கு. திமுக-தா.ம.க கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஓட்டுச் சிதறாமல் மொத்தமாக அறுவடைச் செய்தன. ராமர் பாலம் கட்டுவதற்கு உதவிய அணிலை விடக் குறைவானப் பங்கு ரஜினியின் பங்கு. அடுத்து வந்த தேர்தல்கள் அதை வெளிப்படுத்தின.



பாராளுமன்றத் தேர்தலின் இடையே கோவையில் குண்டு வெடிப்பு நடந்த போது ரஜினி வாய்ஸ் கொடுத்தும் திமுக அணி தோற்றது. ஜெயலலிதா மறு பிறப்பெடுத்தார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி வம்பை விலைக்கு வாங்குவது ரஜினியின் வேடிக்கை. மிகப் பயங்கரமான கோரச் சம்பவத்துக்கிடையே திமுக ஆதரவுக் குரல் எரிச்சலை ஏற்படுத்தியது வாக்காளனுக்கு.



இன்னொரு தேர்தலில் பா.ம.கவை எதிர்த்து வாய்ஸ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். ஆறு எம்.பி. தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.கா ஆறிலும் வென்றது (நினைக்கிறேன்). இது தான் ரஜினி வாய்ஸ் எடுப்பட்ட லட்சணம். இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் 'பாபா' தோல்வியில் இருந்து மீள கதாநாயகியை மையமாக வைத்த படத்தில் நாயகியின் பெயரே தலைப்பாக ரஜினி என்ற ஒருவர் நடித்த 'சந்திரமுகி' பெரு வெற்றியடைந்தது. ஒரு மெஷினின் பெயர் தாங்கிய இன்னொரு படம் இயக்குனர் புண்ணியத்தில் வெற்றி. ரஜினி கதாநாயகனாக நடிக்க, எப்போதும் போல், ஹீரோவின் பெயரோடு வெளியான 'லிங்கா' படுத் தோல்வி. ரஜினியின் சினிமா சகாப்தம் ஓவர். இப்போது சவுகரியமாகக் கையில் எடுத்திருப்பது அரசியல் பிரவேசம்.



தன் அரசியல் பிரவேச உரையில் எப்போதும் போல் துண்டு துண்டாகப் பேசினார். பேச்சினூடாகச் செய்தியாளர்களிடம் இருக்கும் பயம் பற்றிப் பேசினார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போது எழுந்த சர்ச்சையைச் சமாளிக்கப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கமல் தேர்ந்த ஆட்டக் காரரைப் போல் கேள்விகளைச் சந்தித்தார். ரஜினி பாவம் அவர் முன்னால் மைக்கை நீட்டினால் உளறிக் கொட்டுவார். காவிரிப் பிரச்சனைக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த ரஜினியிடம் யாரோ மைக்கை நீட்டி "தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாதென்று சொல்லும் கர்நாடக அரசியல்வாதிகள் பற்றி உங்கள் கருத்து" அப்படீன்னுக் கேட்க ரஜினி "அவங்களை உதைக்கனும்" என்றார். மேடையில் பேசிய கமல் நிதானத்தின் குரலாக இருந்தார். ரஜினியின் பேச்சுக் கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்த ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார்கள். அதற்கு ரஜினி "பர்வதம்மாள் சொல்லட்டும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றார். பர்வதம்மாள் என்ன கர்நாடகாவின் முதல் மந்திரியா? ஏதேனும் கட்சித் தலைவரா? எதுவும் இல்லை. இது தான் ரஜினியின் அரசியல் முதிர்ச்சியின் தரம்.



இந்த நேரத்தில் கமல் இக்கட்டான சூழலை எப்படி எதிர் கொண்டார் என்று பார்க்கலாம். 'விஸ்வரூபம்' பட வெளளியீட்டில் பிரச்சனை வெடித்த போது அவர் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களிடம் அமைதியாகப் பேசினார், கலைந்து போகச் சொன்னார். அவர் நினைத்திருந்தால் தூண்டும் வகையில் பேசியிருக்கலாம். அவருக்கு அப்படியொரு கூட்டம் கூடியதும் ஆச்சர்யம் அதை அவர் கையாண்ட விதமும் ஆச்சர்யம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்தப் போது (முழுவதுமாகப் பார்க்கவில்லை. சகிக்கவில்லை) கமல் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள், நிகழ்ச்சியின் வணிக நிர்ப்பந்தம் எல்லாவற்றையும் சமாளித்த விதத்தில் ஒரு முதிர்ந்த மேனேஜ்மெண்டுக்கான தன்மை தெரிந்தது.



'ஆன்மீக அரசியல்' என்று பேசி இந்துத்துவர்களின் மனம் குளிர வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் ஆன்மீக அறிவைக் கொட்டி எடுத்த 'பாபா' திரைப்படம் சொல்லும் அவருக்கு ஆன்மீகமும் வியாபாரமே. மொன்னைத்தனமான புரிதல்களும் மூட நம்பிக்கைகளுமே ரஜினியின் ஆன்மீகம். நரசிம்ம ராவ் ஜெயலலிதாவோடு கூட்டு வைப்பதென்று கெட்ட நேரத்தில் முடிவு எடுத்து விட்டார் என்று ஆராய்ந்துச் சொன்னவர் ஆயிற்றே. ஆன்மீகத்திலும் அரசியலிலும் பாலப்பாடம் அறியாதவர் ரஜினி. விரலை மடக்கி முத்திரை காண்பித்தால் ஆன்மீகமா? அப்படி என்றால் இன்று சிலம்பரசனே தமிழ் நாட்டின் முதல்வராகும் தகுதிக் கொண்டவர். இவர் வந்து தானா இந்து மதம் காக்கப்பட வேண்டும்? இவரால் தானா அரசியலில் ஆன்மீகம் நுழைய வேண்டும்? அண்ணாதுரை என்றோ நாத்திகத்துக்கு முழுக்குப் போட்டார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மிக வெளிப்படையாகத் தங்கள் மத நம்பிக்கைகளைப் பறைச் சாற்றினர். ஸ்டாலினின் மனைவி போகாத கோயில் தமிழகத்தில் உண்டா? கனிமொழிக்காக யாகம் செய்யாத குறை தான். கமல் நாத்திகமும் பேசுவார் ஸ்லோகமும் பேசுவார்.



சரி அப்படியென்றால் கமல் தான் தகுதியானவரா? கிடையாது. கிடையவே கிடையாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடத்தினார் என்பதெல்லாம் தகுதியா? அப்படியென்றால் கோட்டு கோபி முதல்வர் ஆகலாமே? கமல் தன் எல்லைகள் அறியாதவர். இடித்துரைப்பவர்கள் அவரை விட்டு விலகி ரொம்பக் காலம் ஆகிவிட்டது. அவர் சுவாரசியங்கள் நிறைந்தவர் ஆனால் நாடாளத் தகுதியற்றவர். சினிமாவுக்குத் தேவைப்படும் போது மட்டும் பொது விஷயங்களில் கருத்துச் சொல்பவர் அவர். சமீபமாக அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளக் கோணார் உரைத் தேவையாயிருக்கிறது.






தலைமைக்கு ஆசைப்படுபவர்களை அளக்க இன்னொரு அளவுகோல் அவர்கள் எத்தகைய உணர்வுகளை பொது மக்களிடம் உருவாக்குகிறார்கள் என்பது. சீமான் ஆதரவாளர்கள் கோமாளித்தனமான நாஜிக்கள். கமல் படத்துக்கு வரும் ரசிகர்கள் பெரும்பாலும் சினிமாவை பார்த்தோமா, ரசித்தோமா என்று அத்துடன் கிளம்புவார்கள். ரஜினி படத்துக்கு வரும் ரசிகர்களின் காலித்தனம் ஜகத் பிரசித்தம். அமெரிக்காவில் ரஜினி படம் ரிலீஸான திரையரங்குக்குச் சென்றால் தெரியும் நான் சொல்வது. இதில் வேடிக்கை இங்கே இப்படி காலித்தனம் செய்யும் படித்த இளைஞர்கள் சென்னையில் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு விசிலடிக்கும் தரை டிக்கெட்டுகளைப் பார்த்து உதட்டைச் சுழிப்பார்கள். ரஜினி தன் ரசிகர்களை காலித்தனம் செய்ய வெளிப்படையாகத் தூண்டியதேயில்லை. அந்த வேலையை அவர் படங்களும் அதன் வழியே உருவான பிம்பமும் செய்கின்றன. இந்த காலித்தனமான கூட்டம் தான் "ஆகா எங்க ஆளைப் பார்த்தீர்களா எப்படி சமூக வலைத் தளத்தை ஆக்கிரமித்து விட்டார்" என்று ஆர்ப்பரிக்கிறார்கள். அற்பர்கள். சுசி லீக்ஸ் இதை விட சமூக வலைத் தளத்தை ஆக்கிரமித்த காலத்தை மறந்த விடலைகள்.



தென்னாப்பிரிக்காவில் பெரும் சாதனைகளை நிகழ்த்திவிட்டு இந்தியா வந்த காந்தியை 'இந்தியாவைச் சுற்றி விட்டு வா. ஒரு வருடத்துக்கு ஒன்றும் பேசாதே" என்றார் கோகலே. காந்தியும் அப்படியே செய்தார். இன்றோ இரண்டு கூத்தாடிகள் ஒரு பெரும் மாகாணத்தை ஆள ஆசைப்படுகிறார்கள். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் தகுதியை வளர்த்துக் கொள்ளவும் முனைய வேண்டாமா? அவர்கள் தொழில் புரிந்த சினிமாவில் சிறக்க தங்கள் தகுதியை மெனக்கெட்டு வளர்த்துக் கொண்டவர்கள் தானே இருவரும். அரசியல் என்றால் மட்டும் வானத்தில் இருந்து குதிக்கலாம் என்று நினைப்பதேன்? ஏனென்றால் இன்று அப்படி வந்த ஸ்டாலினும், ஜெயலலிதாவும் அரசியலில் குதித்ததால் வந்த வினை. உடன் பிறப்பே "ஸ்டாலின் எமெர்ஜென்ஸியில் வாங்கிய அடிகள்" என்று நா தழு தழுக்க வேண்டாம். அந்தக் காலத்தில் திமுகவின் எத்தனையோ தொண்டர்கள் அடி வாங்கினார்கள் அவர்களில் பலருக்கு இன்று முகவரி கூடக் கிடையாது.



மாற்று அரசியல் என்று கமலையும் ரஜினியையும் முன்னிறுத்துவது அயோக்கியத்தனம். அவர்களுக்கே எதை மாற்றப் போகிறோம் என்று தெரியாது. ஊழலற்ற ஆட்சி என்று சொல்லலாம். ரஜினியின் குடும்பத்தைப் பார்த்தால் இன்னொரு போயஸ் மாபியா என்றே தோன்றுகிறது. கமலுக்கும் நாம் எந்தச் சான்றிதழையும் வழங்கி விட முடியாது. அவர் சினிமா வாழ்வில் அவரால் பணம் இழந்தவர்கள் நிறைய. அது வெறும் வியாபார இழப்பா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்று நமக்குத் தெரியாது. அவர் அடிக்கடி தான் வருமான வரிக் கட்டுவதாகப் பெருமையோடு சொல்வார். அது தான் தகுதியென்றால் தமிழகத்தில் பல கோடி மாதச் சம்பளக்காரர்கள் அதற்குத் தகுதியானவர்கள். கமலும் ரஜினியும் இணையும் புள்ளி ஆணாதிக்கத்தில். இருவருக்கும் பெண்கள் ஏளனப் பொருள்கள்.









ஆமாம் திருமாவளவனின் பெயர் ஏன் தலைவராக உச்சரிக்கப்படுவதில்லை? கமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் ஆகியோரை விடத் திருமா தகுதியானவரே. ஆனால் நடக்காது. அப்படியானால் மீண்டும் கேள்விக்கு வருவோம். நிச்சயமாக ரஜினிக்கும் கமலுக்கும் தகுதியில்லை. தினகரனிடம் தமிழ் நாடு போனால் தமிழும் மிஞ்சாது நாடும் எஞ்சாது. மீண்டும் இ.பி.எஸ் அல்லது ஸ்டாலின் தான்.தேய் வழக்கு என்றாலும் வேறென்ன சொல்வது, "விதியே, விதியே தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்".

No comments:

Post a Comment