1992 நவம்பர் பனிரெண்டு மாலை நேரம் மணி ஐந்தரை
எங்கள் வீட்டில் தேவைக்கு உறவினர் ஒருத்தர் வீட்டில் தினந்தோறும் அம்மா / மனையாள் போய் பசும்பால் வாங்கும் வழக்கம். சில நாட்களில் அபூர்வமாய் நானும் வாங்கப் போவேன் .
அன்று சொம்புடன் தெருவில் செல்லும்போது எங்கள் ஊர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் முன்னால் நடந்து செல்கையில் தெருவில் நல்ல நீரோட்டம் . இழுப்பு விசையும் ...
சிறு வயது முதல் உருண்டு புரண்டு .....மழைக்காலங்களில் அணைக்கட்டு கட்டி குதுகலமாய் விளையாடிய இடம் தான் ...ஆனால் அன்று நீரின் இழுப்பு விசை மிகவும் வேறுபட்டுத் தெரிந்தாலும் அந்நேரம் அவ்வளவாய் உறைக்கவில்லை.
மாலை வழிபாட்டுக்கு சர்ச் போய் திரும்ப வந்து எட்டுமணிக்கு வழக்கம் போல உணவு உண்டு அப்பா அம்மா மனைவி மகனுடன் பொழுது கழிந்தது.
ஒன்பதரைக்கு மேல் தூங்கும் வழக்கம். வீடு முன்பக்க இரும்பு கதவை பூட்ட தெருப்பக்கம் சென்றேன். எங்கள் வீடு தெரு வாசலில் இருந்து ஒரு முப்பதடி உள்ளே ..... அதனால் தெருப்பக்கம் போனாலே அங்கு காட்சிகள் தெரியும். மூன்று படிகள் நீரில் மூழ்கி வீட்டு காம்பௌண்டில் வெள்ளம் கொஞ்சமாய் தேங்கி இருந்தது . தெருவில் ஒரே கூச்சல் குழப்பம் ....
வெளியில் போனதும் அதிர்ந்து போனேன். பேரிரைச்சலோடு தண்ணீர் வெள்ளமாய் பாய்ந்து ஓடிய காட்சியில் நெஞ்சு அதிர்ந்து வயிற்றில் ஏதோ கசமுசா ...ஆனது .....முதன்முதலாக ஊர்த் தெருவில் அவ்வளவு தண்ணீரைப் பார்க்கும் முதல் பயங்கர அனுபவம் .....தில் இல்லை திகில் உண்டு ....நிலைமை
அவ்வளவு தண்ணீர் தெருவில் ஒருநாளும் நான் ஓடி பார்த்ததில்லை.இரைச்சல் வேறு காதைப் பிளந்தது. ஆட்கள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து ஒரே களேபரம் .....
நீரில் கால்நடைகள் , கோழி போன்ற பறவைகள் உயிரோடும் செத்தும் வந்தது என்னமோ போல இருந்தது .
மரச்சாமான்கள் பொம்மைகள் நிறைய மிதந்து வந்ததை ஆட்கள் ஆர்வமாய் பொறுக்கி சேர்த்தார்கள்.
நாய் , மாடு , கன்றுகளை பிடித்து பாதுகாப்பாய் அங்கங்கே கட்டியவர்கள் சிலர்.
விறகுக்கட்டைகள் , நிறைய சுள்ளிகளும் மிதந்து வந்ததை ஆட்கள் சேகரித்துக்கொண்டு ஒரே தேடுதலும் கைப்பற்றுதலுமாக வீர விளையாட்டுக்கள்..என் பங்குக்கு ஒரு தேங்காய் துருவலும் மர மணைப்பலகையும் சேகரித்துக்கொண்டு வெற்றி வாகையுடன் மனையாளிடம் கொடுத்தேன்....அதுவும் வீரமாக வெள்ளத்தில் புகுந்து கைப்பற்றவில்லை....அதுவாக வந்து சரண் அடைந்து கிடைத்தது .....
நிறைய பேர்களின் வீடுகளில் ஜன்னல் மட்டம் வரை மழை நீர் வெள்ளம் புகுந்து பொருட்களை பாழாக்கி ....சில சிறுவர்கள் சிறுமியர் இளம்பெண்கள் மிரண்டு அழுது ...பார்க்கவே கவலையாக இருந்தது.மனம் வாடி துக்கம் நெஞ்சை அடைத்தது....
வெள்ளம் உள்ளே புகாத சில வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று.
சர்ச்சில் கூட ஓரடி வெள்ளம் புகுந்து விட்டது. மறுநாள் சுத்தம் செய்ய பெரும்பாடாகிப் போனது. அரையடி அளவு சேறும் சகதியும் வழித்து சுத்தம் செய்தும் ஒரே முடை நாற்றமாய் இருந்து ...பினாயில் சோப் வகைகளை போட்டு மீண்டும்மீண்டும் கழுவி பின்னரே நல்ல சுத்தமானது ...தனிக்கதை .....
மறுநாள் வெள்ளம் சுத்தமாய் வடிந்து கிராமம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டாலும் தினசரிப் பத்திரிகைகளில் பாபநாசம் மணிமுத்தாறு பகுதிகளில் வீட்டினுள்ளும் பரண்களில் மேலேயே ஜலசமாதி ஆனவர்கள் படங்கள் கண்டு மனம் கலங்கிப்போய் துக்கித்துப் போனோம்....ரொம்ப நாட்கள் அது மனதில் தைத்து இருந்தது ...
மறுநாள் சைக்கிளில் தெருக்களில் பக்கத்துக்கு ஊர்களில் சுற்றிப்பார்க்கப் போனதும் வெள்ளத்தின் கொடுமையான பல பாதிப்புக்கள் தெரிந்து மனம் வாடிப்போனேன்...
சரிந்துபோன கூரைகள் ...இடிந்து விழுந்த சுவர்கள் ....மரித்துப்போன கன்று காலிகள் , பறவைகள் ...ஆனால் தெய்வாதீனமாய் மனித உயிர்ச்சேதம் ஏதுமில்லை....
ஆண்டவருக்கு நன்றி....
மேற்குத்தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்க்க வந்த மழை வெள்ளம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே வரை எங்கள் ஊரின் வெகு அருகில்
ஓடும் அனுமன் நதியில் ஓடியது ஒரு வரலாறு.
ஓடும் அனுமன் நதியில் ஓடியது ஒரு வரலாறு.
ஆறுமாத காலம் தொடர்ந்து ஓடிய அனுமன் ஆற்று வெள்ளம் இன்றுவரையிலும் எங்கள் ஊரின் ஒரு ரெகார்ட் ...
( முதல் படம் ஒரிஜினல் அல்ல ...
வலையில் பிடித்துப் போட்டது ...இரண்டாவது அனுமன் நதியில் வெள்ளம் ஆகஸ்ட் 2018 )
------------------------------------------------------------------------
வலையில் பிடித்துப் போட்டது ...இரண்டாவது அனுமன் நதியில் வெள்ளம் ஆகஸ்ட் 2018 )
------------------------------------------------------------------------
வீடியோவில் அனுமன் நதி வெள்ளம் இப்போது ஆகஸ்ட் 2018ல்
No comments:
Post a Comment