Sunday, 16 September 2018

லவ் ஸ்டோரி

வருடம் 1990. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?
போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!
காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…
கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.
சரி மிஸ்.
என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.
மிஸ்…
ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?
ம்..சரி மிஸ்.
அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.
எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.
எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.
போர் அடிக்குது பாடுடி…
“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….
துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.
முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.
எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.
ஏன் லேட் வெளிய நில்லு.
‘பொன் மானே கோபம் ஏனோ?’
பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.
‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’
சரி உள்ள வந்து தொல.
‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”
சரி போய் உக்காரு.
ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.
அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.
பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.
எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.
நான் பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?
எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.
நீ நல்லா படி.
ம் சரிடி.
அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.
———————————————————————–
நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.
அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.
என்னாச்சுடி?
ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.
பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.
இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…
அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.
உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.
என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…
தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.
————————————————————————–
கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.
அவ சொல்லவும்…
யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.
தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.
நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.
குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.
————————————————————————
20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.
நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.
நிஜமா கனவா?
ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?
எல்லாம் நேர்ல பேசலாம் வா.
ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.
முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…
பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.
எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?
ம்… கல்யாணம் முடிந்ததும் அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.
ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?
இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.
ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.
அழகாகச் சிரித்தாள்.
ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?
அவ தோள் மேல கை போட்டேன்.
நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.
படபடன்னு பேசினா.
ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!
பெருமை பொங்க முத்து பார்த்தாள்…
இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.
முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.
அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?
இருக்கு, ஆனா இல்ல!
புரியலயே தெளிவா சொல்லும்மா.
ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.
எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.
ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

No comments:

Post a Comment