மண்தான் மாணிக்கமாகிறது
*********************************************
கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி டீக்கடையில் வேலை பார்க்கத்தான் அவர் வருகிறார். கப்பல் தஞ்சோங் பஹாரில் வந்து நின்றது. மேட்டூர் மல்லில் தைத்த இரண்டு அரைக்கை சட்டை, இரண்டு தறிக் கைலி, லைஃபாய் சோப், 501 சவுக்காரம் அரை பார், கருவப்பட்டை பல்பொடி, ஓர் ஈரிழைத் துண்டு எல்லாமுமாக ஒரு எல் ஜி பெருங்காயத் துணிப்பையில் வைத்து அதன் காதுகளை முடிச்சுப் போட்டு வந்து இறங்கியதும் நேராக அலி கடைக்கே வந்து விட்டார். ‘வாங்கண்ணே. இன்னும் காணோமேன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். கப்பல் வந்துருச்சின்னு தெரியும். நல்ல வேளை. சரியான நேரத்துல வந்துட்டீங்க. நா அங்குதான் புறப்பட்டுக் கிட்டிருக்கேன்.’ என்றார் அலி. நயினார் அலியைவிட பத்து வயது குறைந்தவர். 18 வயதுதான் ஆகிறது. அலி ‘அண்ணே’ என்று கூப்பிட்டதும் தடுமாறிப் போனார். வயது குறைந்தவர்களையும் ‘அண்ணே’ என்று அழைப்பதும், வேலை முடிந்ததும் தொழிலாளி தோளில் முதலாளி கைபோட்டுக் கொண்டு நடப்பதும் மலாயாத் தமிழர்களின் பண்பாடாகவே இருந்து வந்தது நயினாருக்குத் தெரியாது சிங்கப்பூர் அன்று மலாயாவின் ஒரு பகுதியே. ஒரு பெரிய கிளாஸ் நிறைய காப்பி போட்டு நயினாரிடம் நீட்டினார் அலி. அறந்தாங்கியில் அவுன்ஸ் டீ சாப்பிட்ட நயினார் கிளாஸைப் பார்த்ததும் திக்குமுக்காடிப் போனார். ‘அட! நீங்க இன்னும் பசியாறியிருக்க மாட்டூங்களே? ‘ என்று இலை போட்டு இரண்டு இட்வியையும் வைத்தார் .
டோர்செட் ரோட்டில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘இதுதாண்ணே நம்ம வீடு. நல்லா தூங்குங்க. கப்பலில் கடைசி மூணு நாளில் டாய்லெட்டாம் முழங்காலுக்கு தண்ணி நிக்கும். நல்லா தூங்கியிருக்க மாட்டீங்க. நல்லா குளிச்சிட்டு தூங்குங்க. இங்க இருக்க சோப்பு சீப்பு எல்லாம் பொதுதான்.’ என்று சொல்லிவிட்டு வீட்டுச் சாவியை நயினாரிடம் கொடுத்தார். ‘இது ஒங்க சாவிதான். எனக்கிட்ட வேற ஒன்னு இருக்கு.’ என்றார்.
பத்து நாள் அழுக்கை ஒரே நாளில் சிங்கப்பூர் தண்ணீரில் கழுவிவிட்டார். பாயும் தலையணையுமாக சுற்றிச் சுற்றி இருந்தது. ஒரு படுக்கையை அப்படியே தலையணையாய் வைத்துக் கொண்டு தன் ஈரிழைத்துண்டை விரித்துக் கொண்டு தூங்குமுன் விட்டுப்போன தொழுகை எல்லாவற்றையும் தொழுது முடித்தார். ஒரு வழியாக வழக்க நிலைக்குத் திரும்ப இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
கடையில் நயினாருக்கு கிளாஸ் கழுவும் வேலைதான் முக்கியமான வேலையாக இருந்தது. மற்றவர்கள் இல்லாத சமயத்தில் டீ, காப்பி போடுவது, சாப்பிட வருபவர்களுக்கு இட்லி தோசை பரிமாறுவதும் அவர் வேலையாக இருந்தது. புன்சிரிப்போடு மிகவும் ரசித்து அவர் எல்லா வேலைகளையும் செய்தார். டன்லப் ஸ்த்ரீட்டிலிருக்கும் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் சொல்லும் பாங்கு தெளிவாக கடையில் கேட்கும். காலை கடைக்கு வருமுன் பள்ளிவாசலுக்குச் சென்று பஜ்ரு தொழுதுவிடுவார். சாப்பாட்டு இடைவெளியில் லுஹர். அஸரும் மஃரிபும் பயந்து பயந்து ஓடிப்போய் தொழுது வந்துவிடுவார். பிறகு கடை முடித்துப் போகும்போது இஷா தொழுதுவிடுவது வாடிக்கையாக இருந்தது. அவருடைய இபாதத்து என்கிற இறையச்சம், பழக்க வழக்கம் எல்லாம் அலிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நயினார் சிங்கப்பூர் வந்ததற்கான காரணம் அலிக்குத் தெரியும். அடமானத்தில் இருக்கும் தன் வீட்டை மீட்பதுதான் அந்தக் காரணம்.
நயினார் வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு தடவைகூட அதிகப் பற்றாக ஒரு வெள்ளி கூட கேட்டதில்லை. சம்பளத்தை ஊறுகாயாகவும், அதிகப் பற்றை சோறாகவும் சாப்பிடும் சராசரி மனிதனிலிருந்து நயினார் முற்றிலும் மாறுபட்டிருந்தது அலிக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. ‘அடமானத்தைத் திருப்ப மொத்தக் காசு ஐயாயிரம் வெள்ளியையும் தந்துர்றண்ணே. மாதா மாதம் ஐம்பது வெள்ளிய சம்பளத்தில கழிச்சுக்கிறேன்’ என்று அலி சொன்னபோது அதை உறுதியாக மறுத்தார் நயினார். அப்போதெல்லாம் வெள்ளிக்கும் ரூபாய்க்கும் வித்தியாசமில்ல. ஒரு வெள்ளிதான் ஒரு ரூபாய். நயினார் வந்ததிலிருந்து கடை வியாபாரமும் மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு நயினாரின் தொழுகை இபாதத்துதான் காரணம் என்று அலி நம்பினார். தொழும் நேரத்தில் அவர் செல்ல எல்லா சுதந்திரமும் கொடுத்தார். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு யார் முதலாளி, யார் தொழிலாளி, என்று தெரியாத அளவிற்கு மரியாதை செலுத்தினார் அலி. நயினார் வந்ததுமுதல் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நோன்பு காலங்கள் உட்பட அத்தனை சிறப்பு நிகழ்ச்சிகளுக்குமான தொண்டூழிய வேலைகளையும் நயினாரே தலைமைப் பொறுப்பிலிருந்து செய்து வந்தார். ‘ இதை எடு,அதை எடு’ என்று யாரிடமும் அவர் வேலை வாங்கியதே இல்லை. யாரையும் ஒருமையில் அழைத்தது மில்லை. நயினார் இல்லாவிட்டால் பள்ளிவாசலில் பொது விழாக்கள், தேவைகள் நடத்தவே முடியாது என்ற நிலை கூட இருந்தது. கொதிக்கும் வெந்தீராக சொற்களை உமிழும் மனிதர்களிடமும் குளிர் நீராகக் கலந்து அவரை சமாதானப் படுத்திவிடுவார்.
தான் வரும்போது கொண்டுவந்த அந்தப் பெருங்காயப் பையை அப்படியே ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்து மூடி தன் அலமாரியில் வைத்துக் கொண்டார். ‘எந்த அருகதையும் இல்லாத என்னை, அல்லாஹ் எப்படியெல்லாம் உயர்த்துகிறான்’ என்று நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தாமல் அவர் படுக்கைக்குச் சென்றதில்லை.
அலியின் தகப்பனார் கேம்பல்லேனில் ஒரு ஒட்டுக்கடை நடத்தி வந்தார் அதுவும் அலி கடைதான். சொந்தக் கடை. அலியின் தகப்பனார் முழங்கால் வலி காரணமாக ஆப்பமாக ஊர் செல்ல விரும்பினார். அது என்ன ‘ஆப்பம்’ என்று யோசிக்கிறீர்களா? திரும்பி வரும் நோக்கத்தில் ஊர் சென்றால் ‘தோசை’. ஊரோடு தங்கிவிடுவது என்ற நோக்கத்தில் சென்றால் ‘ஆப்பம்’. அலியின் தகப்பனாரின் விருப்பப்படி கடையின் முழுப் பொறுப்பும் நயினாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாடகை என்று ஒரு சிறு தொகையை மட்டும் வாங்கிக் கொண்டார். மற்ற எல்லா வரவுசெலவும் நயினாரைச் சார்ந்ததாகவே இருந்தது. நல்ல வருமானம் உறுதியான பிறகுதான் திருமணம் செய்வது பற்றியும் சிங்கப்பூரில் வீடு வாங்குவது பற்றியும் யோசித்தார். அப்துல் கஃபூர் பள்ளியோடு தனக்கிருந்த நெருக்கத்தை, ஈடுபாட்டை மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டார். இந்த இறையச்சம் அவருக்கு இயற்கையாகவே இருந்தது.
ஐம்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. தன் அத்தா விரும்பிய அவரின் அக்காள் மகள் உம்முசல்மாவை திருமணம் முடித்து சிங்கப்பூருக்கே அழைத்து வந்துவிட்டார். அப்துல்லா என்ற மகன் பிறந்து இன்று இருபத்தைந்து வயது. அத்தாவும் மகனுமாகத்தான் இப்போது ஒட்டுக்கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பள்ளிவாசல் தொடர்பில் ஒரு பாகிஸ்தான் வங்கியின் மேலாளர் நயினாருக்கு நெருங்கிய நண்பர்தான். ‘உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்பினால் சொல்லுங்கள். எங்கள் வங்கி உதவி செய்யும்.’ என்றார். நயினார் ஒப்புக்கொள்ளவில்லை. அத்தாவின் கடன்வாங்காக் கொள்கைக்கு மகன் அப்துல்லாவும் ஒத்துழைப்புக் கொடுத்தார். கடன் வாங்கியாவது காரில் செல்லவேண்டுமென்ற சராசரி இளைஞனிடமிருந்து அப்துல்லா மாறுபட்டிருந்தார். இது நயினாருக்கு அல்லாஹ் தந்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தாவின் விருப்பத்தையே தன் விருப்பமாக ஆக்கிக் கொண்டுவிட்டார் அப்துல்லா. ஏனென்றால் அத்தாவின் இந்தக் கொள்கைக்குக் காரணம் என்னவென்று அப்துல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அது என்ன காரணம்?
நயினார் சிங்கப்பூர் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது. நயினாரின் தகப்பனார் முஸ்தபா அறந்தாங்கியில் கூட்டுறவு வங்கியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை அவரால் அடைக்க முடியவில்லை. இதற்கிடையில் சர்க்கரை வியாதி கூடவே ரத்த அழுத்த நோயும் வந்து கால்கள் வீங்கி படுத்த படுக்கையாகிவிட்டார். வங்கி இவர் மீது நடவடிக்கை எடுத்து ‘ஜப்தி’ ஆர்டர் வாங்கிவந்து விட்டது. சிவப்புப் பட்டை அணிந்து வந்த ஊழியர்கள் வீட்டிலிருந்த சாமான்களை வெளியே அள்ளிப் போட்டுவிட்டு கடைசியாக முஸ்தபாவை அப்படியே கட்டிலோடு தூக்கி வெளியே போட்டுவிட்டு கதவைப் பூட்டி சீல் வைத்துச் சென்றுவிட்டார்கள். எல்லாவற்றையும் கண்ணீர் விட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார் நயினார். நயினாரை அணைத்தபடி விம்மி வெடித்தார் அம்மா. ‘மோசம் போயிட்டோம்யா அய்யா…..’ என்று அவர் கதறியது நான்கு தெருவுக்குக் கேட்டது. எல்லா சாமானையும் அள்ளி முஸ்தபாவின் அக்கா வீட்டில் ஒரு அறையில் போட்டுவிட்டூ அங்ககேயே ஒரு பகுதியில் தங்கிவிட்டார்கள். அன்று இரவு முஸ்தபா தன் மனைவியையும் மகன் நயினாரையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். வீங்கிய கால்கள் நடுங்கின. ‘உங்களுக்கு எந்த சுகத்தையும் நான் தரல. இந்த அவமானத்துக்கு நான்மட்டும்தான் காரணம்.என்ன மன்னிச்சிடுங்க சீதேவிகளா…’ அவர் நெஞ்சடைக்கச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அத்தாவைக் கட்டிப் பிடித்துக் கதறினார் நயினார். அப்போதுதான் நயினாரிடம் முஸ்தபா சொன்னார். ‘ என்னப் பெத்த அய்யா, என் சீதேவி மகனே எந்தக் காலத்துலயும் யார்ட்டயும் கடனே வாங்காதீங்கய்யா’ இதைச் சொல்லிவிட்டு அடுத்த இரண்டு நாளில் வஃபாத்தாகிவிட்டார்.
அத்தா சொன்ன அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகியும் அந்தக் கொள்கையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை நயினார். பதினாறாயிரம் வெள்ளியை மொத்தமாகச் சேர்த்துக் கொண்டுதான் வீடு வாங்கினார். சிங்கைக்குப் பிழைக்க வந்த எந்தத் தமிழ்முஸ்லிமும் சாதிக்காதது இது கின்னஸ் புத்தகத்தில் அவருக்கு இடம் தேவையில்லை. அல்லாஹ்வின் புத்தகத்தில் அவருக்கான இடம் இருக்கும். நயினார் மனைவி உம்முசல்மா அப்துல்லாவிடம் அடிக்கடி சொல்வார். ‘ஒங்க அத்தா ஒரு சாதாரண மனுஷனில்லேத்தா. அவரு அவுலியா அந்தஸ்துல உள்ளவரு.என்ன நிக்காஹ் முடித்த இந்த முப்பத்தஞ்சு வருஷத்துல ஒரு தடவ கூட ‘வா,போன்னு’ கூப்பிட்டதில்ல. விக்குனாக் கூட தானே போய்த்தான் தண்ணீர் குடிப்பார். ‘தண்ணி கொண்டுவான்னு’ என்னக் கேட்டதுல்ல. எந்த வேலையும் எனக்கிட்ட அவரு ஏவுனதே இல்ல. நானாப் பாத்தா ஒன்னும் சொல்லமாட்டாரு. அவரு துணிமணிகள அவருதான் தொவச்சுக்கிறாரு. ஒரு நா கேட்டேன். நா ஒங்க மனைவிதானே. எனக்கிட்ட வேல சொல்ல ஒங்களுக்கு உரிமை இல்லையான்னு. அவரு சொன்னாரு. ‘என்ன செய்யனும்னுதான் ஒங்களுக்குத் தெரியுதே. அதுக்கு மேல நா ஏன் வேல சொல்லனும். யூசுப் நாயகம் (அலை) ஜெயில்ல இருந்தபோது அவரோடிருந்த சக கைதி விடுதல ஆகி வெளியே போனப்ப அவர்க்கிட்ட சொன்னாங்க. என்னோட கனவுக்கு பலன் சொல்ற அறிவப்பத்தி மன்னர்க்கிட்ட சொல்லுங்க. என் உதவியக் கேட்க என்ன அவரு விடுதல செஞ்சிடுவாருன்னு. ஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா? அந்தக் கைதி யூசுப் நாயகத்தப் பத்தி மன்னர்க்கிட்ட சொல்ல மறந்துட்டாரு. அதனால யூசுப் (அலை) அவர்களுடைய தண்டனைக் காலம் மேலும் அஞ்சாண்டு அதிகமாயிடுச்சு. ஏன் தெரியுமா? ஒரு மனிதன்ட்டே யூசுப் (அலை) உதவி எதிர்பார்த்ததுதான். நம்ம தேவை அல்வாஹவுக்கு தெரியும் உம்முசல்மா. நாம யார்ட்டயும் எதுவும் கேக்க வேண்டியதில்ல’ இப்படிப் பேசுற ஒங்க அத்தா எப்படிய்யா சாதாரண மனுஷனா இருக்க முடியும். அவரு அவுலியாத்தா.’
தன் கொள்கையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்காத நயினார் வாழ்க்கையின் கடைசிப் படிக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டார். அவருக்கும் தன் அத்தாவுக்கு இருந்ததுபோல் சர்க்கரை வியாதியும் அதன் மாமன் மச்சான்களான ரத்த அழுத்தமும் கொழுப்பும் வந்துவிட்டது. தன்னால் கடினமான வேலைகளைப் பார்க்க முடியாவிட்டாலும் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தன்னால் ஆன எல்லா ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நோன்பு காலங்களில் பதினான்காவது கஞ்சி நயினாருடையதாக இருந்தது. அவர் சிங்கப்பூர் வந்தது ஒரு பதினான்காம் தேதி என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் நயினார் நாற்காலியில் அமர்ந்துதான் தொழுகிறார். அதை அவர் மிகவும் அவமானமாக நினைத்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இப்படியாக இருக்கிறது என்று தேற்றிக் கொண்டார்.
சென்ற ஆண்டு ரமலான் மாதத்தில் கடைசி தராவீஹ் தொழுகைக்குப் பின் வாஜிபுல் வித்ரு தொழுகையும் முடித்து சலாம் கொடுத்த போது அப்படியே மயங்கி விட்டார். அசைவுகள் இல்லை. உய்யென்று அவரைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது. ‘நயினார் மயக்கம் போட்டுவிழுந்துட்டாருன்னு, தொழுதுட்டு வெளியே போனவர்களெல்லாம் கூட திரும்பி வந்துட்டாங்க. மின்விசிறையைப் பக்கத்தில் வைத்தார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். கையில் கிடைத்த பேப்பரையெல்லாம் வைத்துக்கொண்டு விசிறிவிட்டார்கள். அந்த அளவுக்கு மழையில் நனைந்ததுபோல் வியர்த்து விட்டது அவருக்கு. பள்ளிவாசல் நிர்வாகக் குழு உடனே ஆம்புலன்ஸை அழைத்துவிட்டது. ஆம்புலன்ஸிலேயே சில முதலுதவிகள் செய்யப்பட்டு நயினார் நினைவு திரும்பினார். மருத்துவர் சொன்னார். ‘காற்றோட்டமில்லாமல் அதிகமாக வியர்த்து உடம்பு தண்ணிச் சத்தை இழந்துவிட்டது. பொதுவாக உங்கள் உடல்நிலைக்கு இது மிகவும் ஆபத்து. முடிந்தவரை காற்றோட்டமில்லாத இடங்களைத் தவிர்த்துவிடுங்கள்.’
பள்ளியில் முக்கிய இடங்களில் ஏர்கூலர்கள் வைத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. பெண்கள் தொழும் பகுதியும், நிலவறையும் குளிரூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் நயினாரால் நிலவறைக்கு இறங்கி ஏற முடியாது. முக்கியத் தொழுகைக் கூடம் குளிரூட்டப்படவில்லை. இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்ததும்தான் நயினார் முடிவெடுத்தார். அடுத்த ரமலானுக்கு அறந்தாங்கி சென்று விட வேண்டும் என்று. இங்கு ஏதாவது ஒன்றென்றால் அது பள்ளிவாசலை பாதிக்கும் என்று பயந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ரமலானில் அப்துல் கஃபூர் பள்ளியை பிரியவேண்டியதை நினைத்தபோது நெஞ்சு கனத்தது.
இதோ அடுத்த ரமலானும் நெருங்கிவிட்டது. ரமலான் பிறைக்கு இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருக்கின்றன. ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்தார். இரகசியமாக அழுதார். இப்போது பள்ளிவாசலில் புதிய நிர்வாகக் கமிட்டி பொறுப்பேற்றிருந்தது. தலைவராக ஹாஜி ஹாஜா ஃபாரூக் பொறுப்பேற்றார். நோன்புப் பெருநாளுக்காக சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. நயினார் தலைமையில் தொண்டூழியர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஹாஜா ஃபாரூக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். நயினார் கூட்டத்துக்கு வராதது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மூத்த உறுப்பினர் நயினார் வராததற்கான காரணத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இந்த ஆண்டு நயினார் இங்கு இருக்கமாட்டார் என்றும் அவரின் சொந்த ஊரான அறந்தாங்கிக்குப் போக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். ‘இங்கு ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று அவர் அஞ்சுவதும் அதற்காக அவர் செல்ல அனுமதித்து ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பள்ளிவாசலை உயிராக நேசித்த அந்த மாமனிதர் இல்லாமல் நோன்புப் பெருநாளுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் நம் கமிட்டிக்கு மிகப் பெரிய தலைக்குனிவு ஆகும். அவரிடம் பேசி அவரைத் தடுத்துவிடுகிறேன். நாளை இதே நேரத்தில் கூட்டம் இங்கே நடக்கும். நயினார் வருவார்’ என்று உறுதியாகச் சொல்லி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஹாஜா ஃபாரூக் வெளியேறிவிட்டார்.
ஹாஜா ஃபாரூக் மிகப் பெரிய கட்டட ஒப்பந்தக்காரர். அவர் கமிட்டிக்குத் தலைவராக வந்ததில் எல்லாருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ‘கொடுக்கத்தான் அல்லாஹ் எனக்கு செல்வங்களைக் கொடுத்திருக்கிறான்’ என்று அடிக்கடி சொல்வார். படிப்பு, நிக்காஹ், வேலை என்று வரும் எல்லாரையும் அரவணைப்பதற்காகவே பெரும் பெரும் அறக்கட்டளைகளை தன் சொந்தப் பொறுப்பில் நடத்தி வருகிறார். வசதியற்ற பலருக்கு ஹஜ் செய்யவும் உம்ரா செய்யவும் உதவி வருகிறார். அப்பேர்ப்பட்ட மனிதர்தான் அடுத்த நாள் நயினாரைத் தேடி அவர் கடைக்கே சென்றார். ‘நேத்து கூட்டம் போட்டோம். நீங்க வரல. அதுனால கூட்டத்த இன்னிக்கு மாத்தி வச்சிருக்கோம். நீங்க அவசியம் வரணும்ணே.’ ‘நா வந்து என்னத்தா செய்யப்போறேன். ஊருக்குப் போறதுனால எந்தப் பொறுப்பையும் என்னால எடுத்துக்கிற முடியாதுத்தா.’ ‘இல்ல. நீங்க ஊருக்குப் போகக் கூடாது. நம்ம பள்ளிவாசல்ல அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நா செய்றேன். அந்தப் பெரிய தொழுகைக் கூடத்தெ ஏர்கோன் செய்ய ஏற்பாடு செய்றேன். இதுக்காக நான் மூயிஸையோ, பொதுமக்களையோ தொந்தரவு செய்யப்போறதில்ல. என் சொந்தச் செலவுல நானே செய்யப்போறேன்.’ ‘ரொம்பச் செலவாகும்தா. மெதுவா பண்ணிக்கலாம்தா. இப்ப நா ஊருக்குப் போயிட்டு ரமலான் முடிஞ்சதும் வந்துர்றத்தா.’ ‘அண்ணே! செலவு எவ்வளவு ஆகுங்கிறதுக்கு கணக்கு இருக்கு. அம்பது வருஷமா இந்தப் பள்ளிவாசல உயிரா நெனச்சி என்னென்ன செஞ்சிருக்கீங்க. அதுக்கு என்னண்ணே கணக்கு. இந்தப் பள்ளிய எந்த அளவுக்கு நேசிக்கிறிங்கன்னு எனக்குத் தெரியும். நோன்புல இந்தப் பள்ளிவாசல்ல இல்லாம இருக்கிறது உங்களுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்னும் எனக்குத் தெரியும். நீங்க ஒன்னும் நெனக்காதீங்க. அனுமதி பெறவேண்டிய எடத்திலல்லாம் இன்னிக்கே அனுமதி வாங்கிர்றேன். நாளக்கு ஏர்கோன் வேல ஆரம்பமாகுது. இன்னிக்கு கூட்டத்துக்கு நீங்க வர்றீங்க.’
நயினார் அப்துல்லாவைப் பார்த்தார். அப்துல்லா ஹாஜி ஹாஜா ஃபாருக்கைப் பார்த்தார். பின் சொன்னார். ‘நா அத்தாவ அழச்சிக்கிட்டு வந்துர்றேன். நீங்க இவ்வளவு சொன்ன பிறகும் ஊருக்குத்தான் போவேன்கிறது சரியா இருக்காதுண்ணே. நா அத்தாவ சமாதானப்படுத்துறேன்.’
இரவு கூட்டம் நடந்தது. நயினாரும் வந்திருந்தார். ஹாஜா ஃபாரூக் சொன்னார். ‘இந்த முக்கியத் தொழுகைக் கூடத்த ஏர்கோன் செய்ய எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன். இதுக்காக எந்த பொது வசூலும் தேவயில்ல. என் சொந்தப் பொறுப்புல செய்றேன். கமிட்டி இதுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்.’ ஹாஜா ஃபாரூக்கின் முடிவை கூட்டம் வரவேற்றது.
அன்று இரவு ஹார்லிக்ஸ் பாட்டிலில் இருந்த அந்தப் பையை நடுநடுங்க வெளியே எடுத்தார். அந்தப் பையை பார்த்தபோது அன்று அலி கடையில் நின்றது அவர் கண்முன் விரிந்தது. அப்படியே நெஞ்சில் அணைத்துக்கொண்டு கலங்கினார். ‘இந்த அளவுக்கு என்னெ இவங்கல்லாம் நேசிக்க எனக்கு என்ன அருகதைய்யா இருக்கு?’
ரமலான் பிறை ஒன்று. தராவீஹ் தொழுகை தொடங்கிவிட்டது. புதிதாக குளிரூட்டப்பட்ட தொழுகை கூடத்தில் பரவசத்துடன் தொழுது கொண்டிருக்கிறார் நயினார். ஜில்லென்று ஏர்கோன் காற்று அவர் முகத்தில் வருடி சலாம் கூறிச் சென்றது. இந்த ஏற்பாட்டைச் செய்த ஹாஜா ஃபாருக்கிற்காக அழுது துஆ கேட்டார் நயினார். அவர் மட்டுமா? மொத்தக் கூட்டமுமே கேட்டது. அல்லாஹ் தனக்கு விருப்பமானவர்களின் ஆசையை தனக்கு விருப்பமானவர்களை வைத்தே நிறைவேற்றுகிறான்.

No comments:
Post a Comment