மாங்கல்ய பாக்கியத்திற்கு நெல்லி இலை அர்ச்சனை
மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி சில மகரிஷிகள் திண்டுக்கல் சீனிவாசப் பெருமாள் கோயிலின் மலையடி வாரத்தில் யாகம் நடத்தினர். அசுரன் ஒருவன் யாகம் நடக்க விடாமல் தொந்திரவு செய்தான். யாகம் தடையின்றி நடக்க அருளும்படி ரிஷிகள் திருமாலை வேண்டினர். மகாவிஷ்ணுவும் அசுரனை அழித்தார். அந்த கோபத்துடன் சுவாமி உக்கிரமாக இருக்கவே ரிஷிகள் மகாலட்சுமியை வேண்டினர். அவள் தன் கணவரை சாந்தப்படுத்தினாள். அதே இடத்தில் தாயார்களுடன் சுவாமி கல்யாண கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு சீனிவாசர் என திரு நாமம் சூட்டப்பட்டது.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. பத்ம விமானத்தின் கீழ் அருளும் சுவாமி வலது கையால் ஆகாயத்தையும் இடது கையால் பூமியையும் காட்டியபடி சர்வலோகமும் தனக்கே சொந்தம் என்று உணர்த்துகிறார்.
நெல்லி மரம் இத்தலத்தின் விருட்சம். மாங்கல்யம் மற்றும் பிதுர்தோஷ நிவர்த்திக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்கின்றனர். நெல்லி மரம் மஹாலட்சுமியின் அம்சம் என்பதால் பெருமாளிடம் லட்சுமி சிபாரிசு செய்து நமது குறைகளை தீர்த்து வைப்பாள் என்பது நம்பிக்கை. திருமணத்தடை நீங்க கல்யாண சீனிவாசருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர்.
இங்கு ஆடிப்பூர நாயகி ஆண்டாளுக்கும் தாயார் அலமேலு மங்கைக்கும் சன்னதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை மாலையில் தாயார் சன்னதியில் கோமாதா பூஜையுடன் திருமஞ்சனம் நடக்கும். அப்போது பாலும் மஞ்சளும் பிரசாதமாகத் தருவர். இந்த பூஜையில் பங்கேற்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் என்பது நம்பிக்கை.
சுவாமியின் எதிரே 32 அடி உயர விஸ்வரூப கருடாழ்வார் சிலை உள்ளது. இவருக்கு பக்தர்கள் மோட்சதீபம் ஏற்றி வழிபடுவர் இதனால் பிதுர்தோஷம் நீங்கும்
பிரகாரத்திலுள்ள சக்கரத்தாழ்வாரை சுற்றிலும் பெருமாளின் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார். சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். சித்திரை நட்சத்திர நாட்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் அபய ஆஞ்சனேயர் தாமோதர வினாயகர் நவனீத கிருஷ்ணர் நவக்கிர சன்னதிகள் உள்ளன. இக்கோயில் அருகில் அபிராவி பர்வதீஸ்வரர் கோயில் கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கிமீ தூரத்திலுள்ள யானைத் தொப்பம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது இக்கோயில்
No comments:
Post a Comment