Wednesday 19 September 2018

தையல் சொல் கேளேல்


அதெப்படி பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று சொல்லலாம் என்று கோபிக்க வேண்டாம். 'தையல் சொல் கேளேல்' என்ற மூதுரையை சொன்னதே ஔவையார் எனும் பெண்மணிதான். ஔவையார் சொன்னதைக் கேட்டால் பெண்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது. அப்படியென்றால், ஔவையார் சொன்னதை செய்யக் கூடாது. அதாவது, தையல் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். ஓ! அப்பொழுது ஔவையார் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். மீண்டும் 'தையல் சொல் கேளேல்'... ஔவையார்... பெண்மணி... கேட்பதா.. கூடாதா என்று சுற்றி சுற்றி வருகிறது பாருங்கள்.

இதைத்தான் முரண்புதிர் (Paradox) என்பார்கள். முரணுரை என்றும் சொல்லலாம். நிறைய பிரபல முரண்புதிர்கள் இருக்கின்றன. நாவிதன் பாரடாக்ஸ், ரஸ்ஸல் பாரடாக்ஸ், பிறந்தநாள் பாரடாக்ஸ், தாத்தா பாரடாக்ஸ் என்று பலவகையான பாரடாக்ஸ்கள் இருக்கின்றன. பினாசியோ என்று ஒரு சிறுவர் கதை பாத்திரம். அவன் பொய் சொன்னால் மூக்கு நீண்டுவிடும். திடீரென பினாசியோ 'இதோ... என் மூக்கு நீளமாகப் போகிறது' என்று சொன்னால் என்ன நடக்கும்? யோசித்துப் பாருங்கள். அவன் மூக்கு நீளுமா... நீளாதா...

'இந்த வாக்கியத்தில் இரு பிழைகள் இருக்கின்றன' என்பதும் முரண்புதிர்தான். இருப்பதே ஐந்து சொற்கள்தானே... இதில் என்னடா பிழை என்று யோசித்தால்... அதுதான் 'பிழை' என்கிற சொல் இருக்கே என்பார்கள். அப்ப இன்னொரு பிழை? 'இரண்டு பிழை' என்று சொன்னதுதான் அந்தப் பிழை என்று கரகாட்டகாரன் செந்தில் ஸ்டைலில் பதில் வரும். 

தர்க்கம் என்றில்லை. கணிதம், புள்ளியியல், அறிவியல் என்று எல்லாவற்றிலும் இந்த முரணுரை வியாபித்து நிற்கிறது. 

'ஒரு கால இயந்திரத்தில் ஏறி, உங்கள் தாத்தா காலத்திற்கு போய் அவரை உங்கள் கையால் கொன்றுவிட்டால்...' என்பது போன்ற சுவாரசியமான பாரடாக்ஸ்களினால நம்க்கு அருமையான திரைப்படங்கள் கிடைத்திருக்கின்றன. Back to the future, Terminator, timeline, Timecop போன்ற படங்களில் இந்த முரண்புதிரை முன்நிறுத்தி சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலை கழகத்தை எதிர்த்து ஒரு பெண்கள் அமைப்பு வழக்கு போட்டது. 'அட்மிஷனில் ஆண்களுக்கு பாரபட்சம் காண்பிக்கிறார்கள்' என்று. அந்த கேஸை ஆராய்ந்த கமிட்டி 'அட்மிஷனில் ஆண்களுக்கு பாரபட்சம் என்று குற்றஞ்சாட்டுவதில் சாரமில்லை. சொல்லப் போனால் அட்மிஷன் பிராசஸஸில் small but significant bias பெண்களுக்குத்தான் காண்பிக்கப்படுகிறது' என்று தடாலடி அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இதைத்தான் சிம்ப்ஸன்ஸ் பாரடாக்ஸ் என்கிறார்கள்.

ஒரு சிட்னி ஷெல்டன் கதையில் இப்படி ஒரு சம்பவம் வரும். 'எதையும் கரைக்கும் திரவம் இது' என்று விளம்பரபடுத்துவார்கள். அதை நம்பாத ஒரு பெண் கேட்பாள் 'அதை வைத்திருக்கும் பாட்டிலை ஏன் அது கரைக்கவில்லை'

ஹிரண்யகசிபு பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான் என்பது கதை. 'இறவா வரம் தர முடியாது' என்று பிரம்மா முதலிலேயே டிஸ்கிளைமர் போட்டுவிட்டதால் 'வெளியில் மரணம் கூடாது... உள்ளிலும் மரணம் கூடாது... காலையிலும் கூடாது... மாலையிலும் கூடாது...' இப்படி ஒரு பெரும் பட்டியல். இப்படியான ஒரு பைனரி ஸ்ட்ராடிஜியை கஷ்டப்பட்டு யோசிப்பதற்கு பதிலாக 'வேண்டும் போது வரம் கேட்டுப் பெறும் வரம் வேண்டும்' என்று அடித்திருந்தால் பிரம்மா காலியாகியிருப்பார் இல்லையா?

இந்த முரண்புதிர்களால் என்ன பயன்? உண்மையில் சிம்ப்ஸன்ஸ் பாரடாக்ஸ், பிறந்தநாள் முரண்புதிர் எல்லாம் அடிப்படையில் எளிமையான பிராபப்பிலிட்டி கணக்குகளின் நடைமுறை சாத்தியம்தான். இணைய உலகில் ஹாக்கிங்கிற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இடையே நிகழும் பெரின்னியல் போராட்டத்திற்கு பின்னால் இம்மாதிரியான புள்ளியியல் முரண்புதிர்கள் நிறைந்திருக்கிறது. 

கல்யாணம் ஆன மறுவருடமே கத்திரிக்காய் பிட்ளை சரியாக செய்யவில்லை என்று வேணி மாமியை தள்ளிவைக்க போய்விட்டார் சாமிநாத மாமா. 'சோத்துல உப்புப் போட்டு திங்கறவனா இருந்தா உம்மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்' என்று அடிக்கடி உணர்ச்சிபிழம்பாக சண்டை போடுவார்.

'பின் எப்படி மாமி ஏழு குழந்தைகள்? இதுதான் சாமிநாத மாமா பாரடாக்ஸா?' என்று கேட்டால் மாமி 'அடப் போடா! இதிலென்ன புதிரும் புண்ணாக்கும்... இதுதாண்டா இயற்கை'என்பார்.

No comments:

Post a Comment