Sunday, 16 September 2018

சட்டை உரிக்கும் பாம்பு

சட்டை உரிக்கும் பாம்பு - என் அனுபவம்
********************************
(பயந்தவர்களுக்கு அல்ல )
========================
பாம்பு தனது முகத்தை பாறை மீது சரசரவென உரசியதும், ஆம்லெட் போடுவதற்கு மெதுவாக முட்டை ஓட்டை தட்டினால் மெலிதாக விரிசல் வருமே... அப்படி ஒரு விரிசல் உதடு பகுதியில் தோன்றும். அந்த விரிசலை சீரற்ற கருங்கல் அல்லது பாறையில் வாகாய் கோர்த்துக் கொள்ளும்.
கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறுவது போல இதுவும் முன்னேறிச் செல்ல போடப்படும் ஏற்பாடு.
உதட்டு வெடிப்பை பாறை இடுக்கில் நன்கு தோதாக மாட்டியதும் மெதுவாக வேலையை ஆரம்பிக்கும்.
வளைந்து நெளிந்து செல்வதுதான் இயல்பான குணம் என்றாலும் அந்த சமயத்தில் மட்டும் மூங்கில் கம்பு போல விறைப்பாக நீண்டு கிடக்கும். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பஞ்சு நுரை போல தலைப் பக்கத்தில் இருந்து வெளிவரத் தொடங்கும். அப்படியே தலையை நகல் எடுத்தது போல மற்றொரு தலை வெளியேறும்.
எலியையோ முட்டைகளையோ ஜீரணிக்க முடியாமல் துப்புவதை கேள்விப்பட்டு இருப்போம். இது தன்னையே துப்புவதை போன்றது. கிட்டத்தட்ட இரை எடுத்துக்கொண்டு நகர முடியாமல் கிடப்பது போலவே இப்போதும் கிடக்கும். தலை வந்த சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல முழு உடலும் வெளிவரத் தொடங்கும்.
இது குகைப் பாதையை கடந்து வெளி வரும் ரயில் போலவே இருக்கும். தலையை வெளியேற்றும்போது இருந்த சிரமம் இப்போது இருக்காது என்பதால் உடல் பகுதி சற்று வேகமாகவே வெளியேறிவிடும்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்கத்தை உருக்கியது போல தக தகவென மின்னும் அந்த உயிர், உயிரற்று கிடக்கும் தனது கூட்டை இப்போது பார்க்கும்.
அதற்கு இது ஒரு புதுப்பிறவி. உடலை முழுமையாக வெளியேற்ற வசதியாக தோலில் சுரந்த பிசுபிசுப்பும் கலந்து ஒருவித மதமதப்புடன் மயங்கி கிடக்கும். நீண்ட நேரம் உடலை விரைப்பாக வைத்திருந்த களைப்போ என்னவோ அப்படியே சுருண்டு ஓய்வெடுக்கத் தொடங்கும்.
பாம்பு சட்டை உரிப்பதைத்தான் சொல்கிறேன்....
---------------------------------------------------------------------------
பள்ளியில் படித்த காலத்தில் பார்த்த உண்மையான நிகழ்வு ...
நல்ல பாம்பு, சாரை தொடங்கி தண்ணீர் பாம்பு பச்சை பாம்பு வரை பொது விதி இதுதான் போலும்.
பள்ளி வயதில்எங்கள் ஊருக்கு தெற்கே இருக்கும் பரம்பு காட்டில் உள்ள கிணற்றில் இறங்கி குளிக்கும்போது சுவரில் (கல் பாறை) இதுபோன்ற பாம்பு சட்டைகள் தொங்குவதை வைத்து அதன் நடமாட்டத்தை அனுமானிப்போம். ஒரு கிணற்றில் ஏராளம் தவளைகள் உண்டெனில் ஓகே ...ஒன்றுமே இல்லையெனில் அங்கு மிக நிச்சயமாய் ஏதோ தவளைகளை தின்று கொழுத்த பாம்பு இருக்கும்.இது என்னோட அனுபவம் ...
தண்ணீர் பாம்பு , பச்சை பாம்பு போன்றவை மனித பயமின்றி திடீரென நீரில் கிளம்பி வருவதுண்டு.
பாட்டி ஒருத்தர் ஊரில் அவர்கள் வீட்டு வாசல் படி வரையில் குளத்து நீர் தேங்கி அலையடித்துக் கிடக்கும் ...நீர்ப்பாம்புகள் சின்னவை தான் ..திடீரென கிளம்பி வீட்டு வாயிற்படியில் கிடக்கும் ...அந்த ஊர்ப் பையன்கள் ஏதோ கயிறு போல கையில் தூக்கி வித்தைகாட்டி ...எனக்கோ நெஞ்சு எகிறும் ....பயத்தில் படபடக்கும் ...இப்போது அவை ஊர்ந்து நகர்ந்து போவதை ரசிக்கும் நிதானமுண்டு ...அவற்றை அடித்துக்கொல்லவும் விருப்பம் கிடையாது ...
தொலைக்காட்சியில் பாம்புக்கு பல் விளக்கி விடும் பலே ஆசாமிகளைப் பார்த்து ஆஹா ன்னு பிரமிப்பும் உண்டு...உங்களுக்கும் தானே மத்யமரே !!!
பிற வகை பெரிய இனப் பாம்புகள் எல்லாம் ஆள் அரவமற்ற தருணங்களில் தான் அவற்றின் வேலைகளை செய்யும். மனிதர்களின் இருப்பு உணர்ந்து சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ளும் ....
அவை நம்மை கொஞ்சமும் கவனிக்காத அசந்த தருணங்களில் மூச்சை பிடித்துக் கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை பீதியில் உறைந்தபடி இது போன்ற அரிய நிகழ்வுகளை பார்க்கும் அபூர்வ வாய்ப்புக்கள் ....எனக்கு வாய்த்தது...
ஆனாலும் .....
அம்மாடி ...பயங்கரம் !!!!!தானே ....

No comments:

Post a Comment