கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும்
என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க
வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு
ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும்
நிரம்பி வழிந்தது.
ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன.
ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை
நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி
நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுகளும், விடைபெறுதல்களும், தவற விடுதல்களும்,
வியாபாரமும், வெறும் இரைச்சலும் அவசரமாக அரங்கேறுகிறது. மணல் முழுவதும் கீழே நிரம்பவும்
ரயில் கிளம்பவும் சரியாக இருக்கும். பிறகு அடுத்த அறிவிப்பு ஒலிக்கவும் அதே கை வந்து கடிகாரத்தைத்
திருப்பி வைக்கும் வரை நிதானமாக ஒரு யோக நிலைக்குச் சென்று விடுகின்றன நடைமேடைகள்.
நாள் முழுக்க, இப்படியும் அப்படியும் ஒவ்வொரு ரயிலுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு நாடகத்தை
அரங்கேற்றிக் கொண்டிருக்கிற நாடகமேடைகளாகவே இந்த நடைமேடைகள்
இருக்கின்றன. அந்தந்த நாடகத்திற்கான நடிகர்கள் அவரவர் பாத்திரத்தைச் செய்து முடித்து
விட்டு அவசரமாகக் கிளம்பி விடுகிறார்கள்.
இவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்தரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும்
டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து
கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும்
அல்லாமல்
வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி,
கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில்
இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான். ஏதேதோ
காரணங்களால் அவர்களின் இருப்பு நீண்டு நீண்டு அவர்களை நடைமேடையின் தற்காலிகக் குடிமக்களாக
மாற்றி விடுகிறது. இவர்கள் வெளிப்படையாகக் கை நீட்டி இரப்பதில்லை. கிடைப்பதைப் பற்றிக்
கொண்டு, ஏதோ ஒரு வண்டிக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களில் ஒருவரது அபயக் குரல் கணீரென்று ஒலிக்கவும் என் கவனம் அவர் பக்கம்
திரும்பியது. முதல் நடைமேடையில் நின்றிருந்த ரயில் புறப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த
வேளையில், 'அண்ணா அண்ணா என் கம்பு உள்ளே விழுந்துருச்சுண்ணா, எடுத்துக் குடுண்ணா' என்று
அவரின் தவித்த குரல் என்னோடு சேர்த்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது.
அவருக்குக் கண் பார்வை இல்லை என்பது பார்த்ததுமே புரிந்தது. வயதானவர். கறுத்து மெலிந்த
தேகம். அழுக்கான, கிழிசல் இல்லாத உடைகளை உடுத்தி இருந்தார். தோளில் ஒரு ஜோல்னாப் பை
தொங்கிக் கொண்டிருந்தது. அவரின் தவிப்பைக் கொண்டு அவரின் உருவத்தை நிரப்பிய மற்றொரு
முக்கியப் பொருள் அவரின் கம்பு என்பது தெரிந்தது. பார்வை இல்லாமல், குறிப்பிட்டு இன்னாரை
என்று கேட்காமல், காற்றில் கைகளை வீசி, பொதுவாக வேண்டிக் கொண்டிருந்தார். ரயில் முழுதாகச்
சென்றால்தான் கம்பை எடுக்க முடியும். நடைமேடையில் டீ விற்கிற ஒருவர் அவரின் வீசிய கைகளின்
பிடியில் சிக்க, அவரது கைகளைப் பற்றிக் கொண்டு மறுபடியும் 'அண்ணா அண்ணா என் கம்பு விழுந்துருச்சுண்ணா,
எடுத்துக் குடுண்ணா' என்று வேண்டினார் முதியவர். கம்பு தொலைந்த தவிப்பில் ரயில் சென்று
கொண்டிருப்பதையோ, தான் ரயிலுக்கு வெகு அருகில் நிற்பதையோ, அந்த டீ விற்பவர் சமாதானங்கள்
சொன்னதையோ அவர் கவனிக்கவே இல்லை. திருவிழாவில் பொம்மை கேட்டுக் கண் மூடித்தனமாக அடம்
பிடிக்கும் குழந்தை போலக் கம்பை எடுத்துத் தரச் சொல்லிக் கூவிக் கொண்டிருந்தார்.
டீ விற்பவர் சுதாரித்து அவரை ரயிலுக்கு அருகில் இருந்து பின்னுக்கு இழுத்துக்
கொஞ்சம் அதட்டி உட்கார வைத்தார். 'அட இருய்யா.. வண்டி போயிட்டு இருக்குது. நீயும் உள்ளே
விழுந்துராதே. எடுத்துத் தரேன்' என்று அவரிடம் சொல்லிக் கொண்டே பெஞ்ச்சில் அமர்ந்தார்.
அந்த முதியவர் தலையில் அடித்துக் கொண்டே அமைதியாகத் தரையில் உட்கர்ந்து கொண்டார். உட்கார்ந்ததும்
முனகலான குரலில் 'அண்ணா எடுத்துக் குடுண்ணா' என்று மறுபடியும் அவர் ஆரம்பிக்க, பின்னாலிருந்து
டீ விற்பவர் 'இங்கேதானய்யா இருக்குறேன்.. வண்டி போனதும் எடுத்துத் தரேன். அமைதியா இரு'
என்று சத்தமாகச் சொன்னார். அவரின் குரல் பின்னாலிருந்து வருவதை உணர்ந்து அந்த முதியவர்
அந்தத் திசையில் ஒரு கும்பிடு போட்டு அமைதியானார். இருந்தாலும் இப்படி கவனக்குறைவாகக்
கம்பைத் தவற விட்டு விட்டதற்காக அவரால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை போல. மீண்டும்
மீண்டும் தன்னை நொந்து கொண்டு, மெலிதாகத் தலையில் தட்டிக் கொண்டு, முன்பு குரல் வந்த
திசையை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு, நிலைகொள்ளாமல் தவித்தார். அந்தச் சில
நிமிடங்களில் அவரின் மனதில் பல சந்தேகங்கள் வந்திருக்க வேண்டும். ஒரு வேளை ரயில் கம்பின்
மேல் ஏறியிருந்தால்? ஒரு வேளை அந்த டீ விற்பவர் சத்தம் காட்டாமல் எழுந்து போய்விட்டால்?
பிறகு யாரிடம் உதவி கேட்பது?
நான் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சற்று அருகில்தான் அந்த முதியவரும் டீ விற்பவரும்
அமர்ந்திருந்தார்கள். மிக நீளமான ரயில் போல. ரொம்ப நேரம் போய்க் கொண்டிருந்தது. நான்
அந்த முதியவரையும் டீ விற்பவரையும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனித்துக்
கொண்டிருந்தேன். டீ விற்பவரும் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போய்விடக் கூடியவர் போலத்தான்
தெரிந்தார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நெரிசலான நேரத்தில்
வியாபாரம் பார்க்காமல் ஒரு இடத்தில் உட்காரப் பிடிக்காதவர் போலத் தெரிந்தது. இந்தக்
கிழவருக்கு உதவப் போய் ஒன்றிரண்டு டீ விற்பது பாழாய்ப் போகுதே என்ற தவிப்பு அவருக்கு.
ஒரு சுய சமாதானமாக அவரே ஒரு கோப்பையில் டீயை நிரப்பி அந்த முதியவரிடம் கொடுத்து 'இந்தா
டீ குடி' என்று நீட்டினார். 'அண்ணா டீ எல்லாம் வேண்டாம்ணா கம்பை எடுத்துக் குடுண்ணா'
என்று ஆரம்பித்தார் முதியவர் மறுபடியும். சம்பந்தமே இல்லாமல் டீ கிடைக்கவும், கம்புக்கு
என்ன ஆச்சோ என்றுதான் அவர் மனம் பதறியிருக்க வேண்டும். நிச்சயமாகத் தெரிந்த ஒரு துக்கத்தை
விட என்ன ஆனதோ என்று தெரியாத நிச்சயமின்மைதான் அதிகமாகத் தவிக்க வைத்து விடுகிறது.
கம்பு உடைந்து போயிருக்க வேண்டும்; பாவம் கிழவன், ஒரு டீயாவது கொடுப்போம் என்ற அனுதாபம்
அதனால் தான் வந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். டீ விற்பவர் மேலும்
எரிச்சலடைந்தார். 'அட எடுத்துக் குடுக்குறேன்யா.. வண்டி இப்போதான் போயிட்டிருக்கு'
என்று மீண்டும் ஒரு முறை சலிப்போடு சொன்னார்.
ஒரு வழியாக வண்டி முழுவதுமாக நடைமேடையை நீங்குமாறு வரவும், சுறுசுறுப்பாக எழுந்து
'டீக்குக் காசு வச்சிருக்கியா?' என்றார் முதியவரிடம். அவர் சுதாரிப்பாக அது வரை டீயைக்
குடிக்கவே இல்லை. இந்தக் கேள்வி வரும் என்று அவர் யூகித்திருக்க வேண்டும். தயக்கத்தோடு
எதுவும் பேசாமல் அவர் கோப்பையைத் திருப்பித் தருவது போல் நீட்ட, டீ விற்பவர் 'சரி விடு..
காசெல்லாம் வேண்டாம். குடி குடி' என்று கம்பை எடுக்கப் போனார். அவர் சட்டென்று நகர்ந்து
விட்டதால் முதியவர் அவருக்கு நன்றி சொல்லிக் கை கூப்பியதை அவர் பார்க்க வில்லை. டீ
விற்பவருக்கு முன்பாகவே மற்றொரு வாலிபன் தண்டவாளத்தில் இறங்கிக் கம்பை எடுத்து டீ விற்பவரிடம்
கொடுத்தான். அவன் நினைத்திருந்தால் கம்பை முதியவரிடமே கொடுத்திருக்கலாம். என்ன நினைத்தானோ,
எடுத்துக் கொடுத்தது தான் தான் என்றே தெரியாமல் இருக்கட்டும் என்று டீ விற்பவரிடம்
கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். அவரும் அதை வாங்கி முதியவரிடம் 'இந்தா
கம்பு' என்று கொடுத்து விட்டு ஒரு நொடி கூட மேலும் வீணாக்காமல் டீ டீ என்று கூவிக்
கொண்டே நகர ஆரம்பித்தார்.
கம்பு கிடைத்ததும் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த முதியவர் அதை முழுவதும்
தடவித் தடவிச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். எங்கும் சேதமில்லை. ஆனால் நனைந்து போயிருந்தது.
தன் பைக்குள் கை விட்டு ஒரு கந்தல் துணியை எடுத்து அதைச் சுத்தமாகத் துடைத்து விட்டு
ஒரு முறை முகர்ந்து பார்த்துக் கொண்டார். ஒரு திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. அதை
அருகிலேயே வைத்து விட்டு மேலும் சில நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்தார். கோப்பையில்
டீ இன்னும் மீதமிருந்தது. மெது மெதுவாக அதை ஊதி நிதானமாகக் குடித்தார். ஒவ்வொரு முறை
டீயை உறிஞ்சின பின்பும் உடனே கம்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். அந்த மொத்த நடைமேடையின்
கவனமும் தன் மேலேயே இருப்பது போல அதீதத் தன்னுணர்வோடு இருந்தார். சுற்றி முற்றிப் பார்த்தேன்.
என்னைத் தவிர வேறு எவரும் அவரைக் கவனிக்கவில்லை. தனக்குத்தானே மீண்டும் சில முறை தலையில்
அடித்துக் கொண்டு இனி கம்பைத் தொலைக்கவே கூடாது என்று உறுதியாகத் தன்னையே கண்டித்துக்
கொண்டு தன் தோளில் கிடந்த பையை எடுத்து அவிழ்த்தார்.
உள்ளிருந்து ஒரு பாலித்தீன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒற்றை பூரியில்
இருந்து ஒன்றிரண்டு துண்டுகளைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டார். எப்போது வாங்கிய
பூரியோ, பத்திரமாகப் பாலித்தீன் பையில் சுருட்டி வைத்துக் கொண்டு மிகச் சிக்கனமாகச்
சாப்பிடுவதைப் பார்த்தால் இந்த ஒரு பூரியையே இரண்டு வேளைக்குச் சாப்பிடுவார் போலத்
தோன்றியது. வெறும் பூரி தொண்டையை அடைக்க, மறுபடியும்
பைக்குள்ளிருந்து ஒரு சிறு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். குடித்து முடித்ததும்
குலுக்கிப் பார்த்து இன்னும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று யூகித்துக் கொண்டார்.
பிறகு பழையபடி மிச்சமிருந்த பூரியைப் பத்திரமாக மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டு
கம்பைத் தூக்கி ஒரு தம்புராவைப் போலப் பிடித்துக் கொண்டு அதை மீட்டுகிறாற்போல அமர்ந்து
கொண்டார். அந்தக் கம்போடு அவர் கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல எனக்குத்
தோன்றியது.
சில நிமிடங்களுக்குப் பிறகு பொதுவாக இலக்கில்லாமல் 'அண்ணா திருவனந்தபுரம் வண்டி
எப்போ வரும்ணா' என்று கேட்டார். அவருக்கு இடது பக்கம் பின்னால் சற்றுத் தொலைவில் நான்
இருந்தேன். வலது பக்கம் இதே போல மற்றொரு குழுவில் சில மாணவ மாணவியர் உட்கார்ந்திருந்தார்கள்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசித்த நொடியில் மறு புறத்திலிருந்து '11
மணிக்கு வரும்' என்று அந்தக் குழுவின் ஒரு மாணவன் சொன்னான். அவர் பதில் வந்த திசையைத்
திரும்பிப் பார்த்து ஒரு முறை தலையசைத்துக் கொண்டார். பல நாளாகக் கோவையில் இந்த நடைமேடையிலேயே
தங்கியிருப்பவர் போலத் தோன்றும் இவருக்கு இன்றிரவு திருவனந்தபுரம் வண்டியின் மேல் என்ன
அக்கறை என்று எனக்குத் தோன்றியது. மேலும் சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே இருந்தார்.
பிறகு 'மணி என்ன ஆச்சுங்க?' என்று வலது பக்கம் திரும்பிக் கேட்டார். அங்கே எவரும் இல்லை.
அந்தக் குழு இதற்குள் நகர்ந்து போயிருந்தது.
'ஒன்பதரை தான் ஆகுது. திருவனந்தபுரம் வண்டிக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு'
என்று நான் அவருக்குப் பதில் சொன்னேன். வேறு திசையில் வேறு குரலில் பதில் வருவதைக்
கொண்டு அவர்கள் கிளம்பி விட்டிருப்பதை ஊகித்துக் கொண்டு என் பக்கம் திரும்பி ஒரு முறை
தலையசைத்துக் கொண்டார். அவர் பார்க்க மாட்டார் என்றாலும் நானும் திரும்பத் தன்னிச்சையாகத்
தலையசைத்தேன். நிதானமாக மீண்டும் தன் கம்பை ஒரு தம்புராவைப் போல் வைத்துக் கொண்டு தனக்கு
மட்டுமே கேட்கக் கூடிய ஒரு சுவரத்தை மீட்ட ஆரம்பித்தார்.
இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். மீண்டும் ஒரு முறை பொதுவாக இலக்கில்லாமல்
'அண்ணா திருவனந்தபுரம் வண்டி எப்போ வரும்ணா' என்று கேட்டார். 'இன்னும் நேரம் இருக்கு.
மணி பத்து கூட ஆகலை' என்று நான் பதில் சொன்னேன். பழகின குரலின் பதில் வரவும் அவருக்குக்
கொஞ்சம் கூச்சமாகி விட்டது. நானும் இதற்குள் எழுந்து போயிருக்க வேண்டும் என்றுதான்
அவர் நினைத்திருக்க வேண்டும். அவருக்கு அறிமுகமாகும் குரல்கள் எவையும் ஐந்து நிமிடங்களுக்கு
மேல் புழக்கத்தில் இருப்பது குறைவுதானே. இயல்பாகவே தன்னோடு பேசுபவர்கள் சத்தமில்லாமல்
நகர்ந்து சென்று விடுவார்கள் என்றுதான் அவர் மனம் பழகியிருக்கவேண்டும். விடைபெறுதல்கள்
அவரின் வழக்கத்தில் இருப்பதே இல்லை.
மேலும் பத்து இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் பொதுவாக இலக்கில்லாமல் 'அண்ணா
திருவனந்தபுரம் வண்டி எப்போ வரும்ணா' என்று கேட்டார். இம்முறை நான் அருகிலேயே இருந்தாலும்
பதில் சொல்லாமல் கவனித்தேன். கேள்வி கேட்டதும் எதேச்சையாக என் பக்கம் அவர் ஒரு கணம்
திரும்பினார். இந்தக் கண்ணாமூச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வலது பக்கத்தில்
இருந்து மற்றொரு குரல் 'தெரியலங்களே' என்றது. மூன்று வாலிபர்களும் இரண்டு வாலிபிகளும்
ஒரு குழுவாக நின்றிருந்தார்கள். அவர்களில் இருந்து ஒரு வாலிபன் தான் சொன்னான். முதியவர்
அவர்கள் பக்கம் திரும்பி 'அண்ணா கொஞ்சம் கேட்டுச் சொல்லுண்ணா' என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் மேலும் அமைதி காத்தேன். அந்தக் குழுவில் இருந்த வாலிபன் வேறு யாராவது பதில் சொல்வார்களா
என்று சுற்றும் முற்றும் பார்த்தான். எவரும் கவனித்தாற்போல் இல்லை என்றதும் அவனே கிளம்பிப்
போனான். சில நிமிடங்கள் பதில் வராததால் முதியவர் மீண்டும் 'அண்ணா' என்றார். அந்தக்
குழுவில் இருந்த மற்றொரு வாலிபன் 'கொஞ்சம் இருங்க. போயிருக்கான். பாத்துட்டு வருவான்'
என்றான்.
அந்த வாலிபன் அறிவிப்புப் பலகைக்கருகே சென்று அட்டவணை பார்த்து விட்டு வந்து
கூடவே ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக் கொண்டு வந்து, அவருக்குப் பதில் சொல்லி விட்டு
அந்தப் பாக்கெட்டையும் கொடுத்தான். கேட்காமலேயே டீயும் பிஸ்கட்டும் கிடைக்கிறது. கைகூப்பி
நன்றி காட்டினார். அவர் நன்றி சொன்னது அந்த வாலிபனைக் கொஞ்சம் கூச்சப்பட வைத்திருக்க
வேண்டும். அதற்கு மறுமொழி சொல்லாமல் திரும்பித் தன் குழுவோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
மக்கள் கூச்சப்படாமல் உதவுகிறார்கள். ஆனால் உதவிக்கு நன்றி சொல்லும்போதுதான் கூச்சப்படுகிறார்கள்.
சில நொடிகள் கைகூப்பிக் கொண்டே இருந்த முதியவர் பதில் வராததால் மீண்டும் பழைய நிலைக்கு
வந்தார். பிஸ்கட் பாக்கெட்டைப் பத்திரமாகத் தடவிப் பார்த்து - என்ன பிஸ்கட் என்று யூகித்திருக்க
வேண்டும் - தன் பைக்குள் வைத்துக் கொண்டார்.
எனக்கு மீண்டும் அவர் எதற்காகத் திருவனந்தபுரம் வண்டியின் மேல் இவ்வளவு அக்கறையோடு
இருக்கிறார் என்று தோன்றியது. அவரிடம் பயணச்சீட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
பணம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதை விடக் குறைவுதான். ஒரு வேளை அந்த வண்டியில் வரும்
எவரையாவது எதிர்பார்த்திருக்கிறாரா? அல்லது சும்மா தன் மேல் கவனத்தை ஈர்த்து உதவிகள்
பெற்றுக் கொள்வதற்குத் தான் கம்பைத் தவற விடுவதும், திருவனந்தபுரம் வண்டியை விசாரிப்பதும்
என்று இருக்கிறாரா? எவரும் கண்டுபிடிக்காமல் இவர் தினசரி இரவில் இதே போல ஒவ்வொரு நடைமேடையிலும்
ஏதாவது ஒரு வண்டியைப் பற்றி விசாரித்து நாலு பேரின் கவனத்தை ஈர்த்துக் கேட்காமல் கேட்டுப்
பசியைப் போக்கிக் கொள்ள முடியும். கம்பைத் தொலைத்து விட்டுக் கூச்சல் போடுவது கூட மார்க்கெட்டிங்
உத்தியாக இருக்கக் கூடும். சே! ஈவு இரக்கமே இல்லாமல் இவ்வளவு சந்தேகத்துடன் யோசிக்கிறேனே.
என்ன மனிதன் நான்?
பல்லாவரம் மேம்பாலத்தில் அடிக்கடி பார்த்த கைச்சக்கர வண்டிக்காரரின் நினைப்பு
வந்து விட்டது. என் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குத் தினமும் அந்த மேம்பாலத்தின்
வழியாகத் தான் செல்ல வேண்டும். ஒரு நாள் முதன்முறையாக அந்த மேம்பாலத்தின் மேல் ஒரு
கைச்சக்கர வண்டிக்காரரைப் பார்த்தேன். அவரின் வண்டிச் சக்கரம் பஞ்ச்சராகி இருந்தது.
நடுப்பாலத்தில் என்ன செய்வதென்றறியாமல் தவித்துக் கொண்டிருந்தவர் போகும் வரும் வண்டிகளை
நிறுத்தி உதவி கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் நிறுத்தவில்லை. நான் நிறுத்தி விசாரித்தேன்.
சக்கரம் பஞ்ச்சராகி விட்டதென்றும் தன்னால் நடக்க முடியாதென்றும் கூட எவரும் வர வில்லை
என்றும் சொல்லி, சக்கரத்தைப் பஞ்ச்சர் ஒட்ட காசு கேட்டார். பாவமாக இருந்தது. இருபது
ரூபாய் கொடுத்தேன். அதன் பின் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அதே வண்டியை அடிக்கடி
மேம்பாலத்தில் பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அதே நாடகம். ஒவ்வொரு நாளும் வேறு
வேறு சிலர் காசு கொடுத்தார்கள். உதவி செய்த எண்ணம் போய் ஏமாற்றப்பட்டோம் என்ற உறுத்தல்
தான் மேலோங்கியது எனக்கு. வெளிப்படையாகக் காசு வேண்டும் என்று இரந்து கேட்பவர்கள் கூடப்
பரவாயில்லை. இப்படிச் சிலர் சமயத்தில் இரக்கப்படுவது ஏமாற்றப் படுவதே என்று எண்ண வைத்து
விடுகிறார்கள். இது போன்ற நாடகங்கள் அவர்களுக்குத் தங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்கும்
விளம்பரங்கள். பிழைப்பென்ற பெயரில் மனிதன் என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது?
இது போன்ற அனுபவங்களால் இந்த மாதிரி சூழ்நிலைகளில் எப்போதும் ஒரே மாதிரி நடந்து
கொள்ள முடியவில்லை. கண்ணுக்கெதிரே ஒருவருக்கு ஒரு சிறு உதவி செய்ய முடியும் என்ற நிலை
வரும்போது, சில நேரம் இரக்கம் மிஞ்சுகிறது; சில நேரம் எச்சரிக்கை மிஞ்சுகிறது. ஏதோ
ஓர் உள்ளுணர்வால் செலுத்தப்பட்டே சிலருக்கு உதவுகிறோம். சிலரை வேடிக்கை பார்க்கிறோம்.
No comments:
Post a Comment