கடந்த காலம் 1
அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு கைலாசமுடைய நாயனார் என்னும் மகாதேவர் கோயிலின் வாசலானது அந்த அதிகாலை வேளையில் கூட்டமாய் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அந்தணர்கள். அங்கு இருந்த சிறு கல்மேடையில் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். நெற்றியில் திருநீறுபூசி மார்பின் குறுக்கே யங்கோபவீதம் என்னும் பூணூலோடு கழுத்தில் பெரும்பாலானோர் தங்கநகைகள் அணிந்திருக்க ஓரிருவர் உருத்திராட்ச மாலைகளும் அணிந்திருந்தனர். கைலாசமுடைய நாயனாருக்கு உஷத்கால பூஜை துவங்கிவிட்டதை அறிவிக்கும் வகையில் கோயிலின் உவச்ச,வாத்திய மாராயர்கள் சேகண்டி சிறுபறை முதலிய வாத்திய கருவிகளை முழக்கத்துவங்கினர். ஸ்ரீகோயில் கன்மியான ஆதிவிடங்கன் வெண்கலமணியின் நாவினை இழுக்க அது ‘டாங்’ ‘டாங்’ என்று ஒலி எழுப்ப, பிடாரர்கள் திருமுறை விண்ணப்பித்து அந்த பகுதியை தெய்வீக மயமாக்கினர்.
கல்மேடை அந்தணர்கள் அனைவரும் தங்கள் மேல்துண்டுகளை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நாயனாருக்கு பலமாக ஒரு கும்பிடு போட்டுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கோயில் நிருவாகத்தை கட்டிக்காத்து வரும் மூலப்பரூடைய சபையை சேர்ந்தவர்கள். பிரசாதங்களை பெற்று கொண்டு மீண்டும் கல்மேடைக்கு வந்து அமர்ந்தவர்களில் நம்பிதேவ சூரியபட்டர் எனும் அந்தணர் தம்முடைய திருவாயை திறந்து சோழமன்னர்களை சிலாகிக்க துவங்கினார்
ஆஹா! என்னஒரு அற்புதமான தரிசனம், மன்னுபுகழ் சோழவளநாட்டினை தவிர வேறு எங்காவது இந்த காட்சியினை காண முடியுமா? ஆற்றுசமவெளியான சோழதேசத்தில் எங்கிருந்தோ இராட்சத கற்களை கொண்டு வந்து கோயிலை கட்டுவித்து அதற்கு நித்தியபடிபூசை செய்ய நிவந்தங்கள் கொடுத்து அவற்றை கண்காணிக்க சபைகள் அமைத்து எத்தனை திறம்பட நிர்வாகம் செய்திருக்கிறார்கள் சோழ மன்னர்கள்?
ஒய்! சூரியபட்டா!! அதெல்லாம் அந்தகாலமய்யா இது பாண்டியர்களின் காலம். சோழர்கள்தான் ஒழிந்து போய்விட்டார்களே இனியும் அவர்களின் புகழைப்பாடி என்ன செய்யபோகிறீர்? என்று குறுக்கிட்டார் திவாகரபட்டர் எனும் அந்தணர்
ஒய் திவாகரரே!! என்ன உளறுகிறீர் பாண்டியரிடம் இருந்து அரசாங்கம் பிடுங்கப்பட்டு முகலாயர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் பாண்டியர் சோழர் என்கிறீர்களே? எந்த உலகத்திலைய்யா நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்? என்றார் மற்றுமொரு அந்தணர்
சரிதானய்யா நீர் சொல்வது! ஐநூறு வருடங்களுக்கு முன்பு விசயாலையர் ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்ஜியம் தஞ்சையில் இருக்கும் பிரகதீச்வரமுடைய நாயனார் கோயிலை கட்டுவித்த இராசராசர் காலத்திலும் அவரது மகன் இராசேந்திரர் காலத்திலும் புகழின் உச்சியில் இருந்தும் இன்று இருந்த இடம் தெரியாமல் வீழ்ச்சி அடைந்துவிட்டதும் காலத்தின் கோலம்தான் ஒரு ஏக்கபெருமூச்சு வெளிப்பட்டது அவரிடம்.
பிறகு என்னைய்யா? சோழர்களுக்கு முந்தைய பாண்டியர்களை எத்துனை காலம் இவர்கள் அடக்கி ஆண்டிருக்கிறார்கள்? பல்லவர்களிடமிருந்து தஞ்சையை மீட்க சோழர்களுக்கு விசயாலையர் வந்தது போல சோழர்களிடம் இருந்து மதுரையை மீட்க மாறவர்மன் குலசேகர பாண்டியன் தோன்றி சோழர்களின் கடைசி அரசனான இருவர் பாண்டிய முடித்தலை கொண்டருளினதேவர் எனும் இராஜேந்திரரை வீழ்த்தி சோழர் ஆட்சிக்கு மூடுவிழா நடத்தினான். சரி இனி பாண்டிய அரசாட்சிதான் தமிழகம் முழுவதும் போலிருக்கிறது என்று நாம் என்னும் வேளையில் குலசேகரனின் மகன்களான சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் ஆட்சிபீடம் ஏறுவதற்கு ஒருவரையொருவர் அடித்து கொண்டு எங்கோ தெல்லியிலிருந்து மொகலாயர்களை துணைக்கு இழுத்து வந்தனர். அப்பத்துக்கு சண்டையிட்ட குரங்குகளை ஏமாற்றிய நரியைப்போல வந்த முகமதியன் பாண்டியர்களை அடித்து துரத்திவிட்டு மதுரையை கைப்பற்றி கொண்டுவிட்டான். தமிழகத்தின் போறாத காலம் வைதீகத்திற்கு வந்த தலைவலி இந்த மொகலாயர்களிடம் மாட்டிக்கொண்டு நாமெல்லாம் விழிபிதுங்குகிறோம் என்று சோகத்திலாழ்ந்தார் நீலகண்ட பட்டர் எனும் அந்தணர்.
ஆமாமையா! இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த டெல்லி சுல்தான் படைகள் திருவாலவாயுடைய சொக்கநாதீஸ்வரம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விண்ணகரம் என ஒன்றும் விட்டுவைக்கவில்லையாம் ஒரு கோயில் பாக்கி இல்லாமல் அடித்து நொறுக்கி யானை குதிரை ஒட்டகம் என மூட்டை மூட்டையாக பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொண்டு போய்விட்டார்களாமே, மொகலாயர்களின் இறைவனுக்கு உருவமெல்லாம் ஒன்றும் கிடையாதாம் நாம்தான் இறைவனுக்கு உருவம் ஏற்படுத்தி அதற்கு நகைநட்டு பூட்டி வழிபடுகிறோம். அதனை பார்த்து அவர்கள் சிரிக்கிறார்களாம், காலால் எட்டி உதைக்கிறார்களாம், சிலைகளின் மீது இருக்கும் துணிமணிகளை அவிழ்த்து வீசிவிட்டு மூட்டையில் கட்டிகொள்கிறார்களாம். அப்பப்பா!! நினைத்து பார்க்கவே கொடுமையான சித்திரவதையாக இருக்கிறதே!! நல்லவேளை வந்தவர்கள் திருச்சினாப்பள்ளி வழியே மதுரைக்குள் நுழைந்து விட்டார்கள், சோழதேசத்துக்குள் நுழையவில்லை. என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் திவாகரர்.
அய்யா திவாகரரே!! மிகவும் பூஷிக்காதீர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த மாலிக்காபூர் எனும் முகமதிய தளபதி மீண்டும் தெற்கு நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கிறானாம். பாரசீகத்தின் மீது படையெடுக்க அவனுக்கு மிகுந்த செல்வம் தேவை படுகிறதாம் அவற்றை கொள்ளையடிக்க மீண்டும் தெற்கு நோக்கி பயணப்படுவதாக ஒரு செய்தி நேற்றுதான் கேள்வி பட்டேன், நேற்று கௌரிமாயூரம் வரை சென்றிருந்த பொழுது காசியிலிருந்து வநதிருந்த சில காளாமுகர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன் என்று சூரியபட்டர் கூறிய செய்தி அங்கு கூடியிருந்த அனைவரது வயிற்றிலும் புளியைக்கரைத்தது.
சோழபாண்டிய பரம்பரையில் எஞ்சியவர்கள் எல்லாம் ஏதோ படைத்திரட்டி மொகலாயர்களை எதிர்க்க போவதாய் ஒரு செய்தி அடிபடுகிறதே அதுவும் உண்மையா? என்று ஆதித்த பிடாரபட்டர் என்பவர் கேட்ட அதே நொடியில் இரண்டு குதிரை வீரர்கள் வடக்கு திசையிலிருந்து வேகமாக வந்து அந்த கோயில் வாசலில் நின்று ஒரு ஓலைக்கட்டை எடுத்து விரித்து உரக்க படித்தனர்.
சோறுடைக்கும் சோழநாட்டு மக்களுக்கு சம்புவரைய சிற்றரசு கொடுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு, வடக்கே டெல்லியிலிருந்து தெற்குநோக்கி படையெடுத்து வரும் மாலிக்காபூர் சோழநாட்டில் உள்ள ஸ்ரீகோயில் பண்டாரங்களையும் அதிலுள்ள செல்வங்களையும் செப்பு திருமேனிகளையும் சூறையாடும் நோக்கில் வந்துகொண்டிருக்கிறான். அதனால் ஸ்ரீகோயில் பொன்னாபரணங்களையும் உற்சவ திருமேனிகளையும் தகுந்த பாதுகாப்பில் வைக்குமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.
அறிவிப்பினை படித்த வீரர்கள் சிறிதும் தாமதிக்காமல் கௌரிமாயூரம் நோக்கி விரைந்தனர். கூடியிருந்த அந்தணர்கள் விறுவிறுப்பாக ஒருவொருக்கொருவர் என்ன செய்வது என்று திகைத்தபடி அந்த சதுர்வேதி மங்கலத்து மக்கள் அனைவரையும் பறையறைந்து அழைத்தனர். கூடிய கூட்டத்தில் செய்தியின் உண்மைதன்மை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த பரிமளபட்டர் எழுந்து மாலிக்காபூர் வருவது உண்மைதானய்யா!! நான் இன்றுகாலையில் திருஇந்தளூர் விண்ணகரத்துக்கு சென்றிருந்தபொழுது அங்கு திருவரங்கத்திலிருந்து வந்திருந்த அனந்தாழ்வபட்டர் கூறிய செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
- திருவரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலிலேயே கருவறையானது கல்சுவர் எழுப்பி மறைக்கப்பட இருக்கிறதாம், உற்சவ நம்பெருமான் திருமேனியானது திருமலைக்கு கொண்டு சென்று பாதுகாக்கப் படப்போகிறதாம் அதனால் இந்த சம்புவரையர் செய்தி உண்மையானதே. மேற்கொண்டு ஆலோசனை செய்யாமல் ஸ்ரீகோயில் திருமேனிகளை பாதுகாக்கும் வழிகளை பாருங்கள், ஏற்கனவே மாலிக்காபூர் திருவொற்றியூர் வரை வந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைக்கிறது என்றதும்
தெய்வத்திருமேனிகளை மறைத்துவைப்பது எப்படி என்று அங்குபெரிய சர்ச்சையே எழுந்துவிட்டது. சதுர்வேதிமங்கலத்து பட்டர்களின் வீடுகளில் இருக்கும் குதிர்களில் மறைத்து வைக்கலாம் என்று ஒருசாராரும் வெளியூர்களுக்கு கொண்டு சென்றுவிடலாம் என்று ஒருசாராரும் மூட்டையில் கட்டி யார்வீட்டு பரனிலாவது ஏற்றிவிடலாம் என்று ஒரு சாராரும் ஆளாளுக்கு யோசனைகளை வழங்கியபடி இருந்தனர். ஆனால் போர்,கொள்ளை என்று வந்துவிட்டால் அனைத்தும் எதிர்பார்ப்பதை விடக்கடினமாக இருக்கும் என்பதால் எந்த யோசனையும் ஒத்துவரும்படியாக இல்லை. அந்தகனத்தில்தான் நீலகண்டபட்டர் சபைத்தலைவரிடம் அந்த யோசனையை இரகசியமாக தெரிவித்தார்.
சற்றே அதிர்ச்சி காட்டிய சபையதிகாரி, அப்படியானால் அந்த புதையல் இரகசியம் இருக்கும் ஏடுகளையும் அதே நிலைமைக்கு உட்படுத்துவதா? என்று கேட்டார். புதையல் இரகசிய ஏடு என்றதும் அங்கு கூடியிருப்பவர்களின் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் கொப்பளிக்கதுவங்கியது.
இந்த ஊரின் கைலாசமுடையநாயனார் கோயிலின் உற்சவ திருமேனிகளிருக்கும் அறையில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்க பட்டுவரும் ஒரு செப்பேடு இருக்கிறது. அந்த ஏட்டில் மிகப்பெரிய தங்கபொக்கிஷம் ஒன்றை கண்டுபிடிப்பதற்கான சூத்திரங்கள் இருப்பதாகவும் சரியான காலநேரத்தில் இரகசியம் வெளிப்படும் என்றும் வலுகட்டாயமாக ஏட்டை பிரித்து படித்தால் ஏழுகடலும் பொங்கி உலகத்தை அழித்துவிடும் என்று ஒரு நம்பிக்கை அந்த சதுர்வேதிமங்கலத்தில் நிலவி வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய செப்பேடு பற்றிய சபையதிகாரியின் பேச்சுதான் அந்த மக்களின் ஆர்வத்தை கொப்பளிக்க வைத்தது என்று சொல்ல தேவையில்லை.
சிலைகளை மறைக்க நீலகண்டர் கூறிய வழியினை அதிகாரி சபையில் வெளிபடுத்தியதும் வேறுவழியின்றி அனைவரும் அதனை ஒப்புகொள்ள வேண்டியதாயிற்று அதே சமயத்தில் திவாகரர் எப்படியும் நம் காலத்திற்கு பிறகு அந்த செப்பேடு வெளிப்படுமோ என்னவோ? அதனால் அந்த செப்பேட்டை பிரித்து படித்துப்பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது? உலகம் அழியும் என்பது போன்ற கதைகள் எல்லாம் இதுபோன்ற பொக்கிஷங்களை பாதுகாக்க பெரும்பாலும் வழக்கில் உள்ளதுதான் தவிர மாலிக்காபூர் வந்து வைதீகத்தை அழித்து ஒழிக்கும் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடக்கும் உலகம் அழிந்தால்தான் என்ன பாதகம் ஆகிவிடப்போகிறது? என்று ஒரு புதிய கேள்வியை கேட்டார். சிலர் எதிர்ப்பு தெரிவிக்க பலர் ஆமோதிக்க சற்றுநேர சர்ச்சைக்குப்பிறகு பொதுமக்கள் முன்னிலையில் அந்த செப்பேட்டினை பிரித்து படிப்பது என்று முடிவு செய்யப்பட்டது அங்கு.
நிகழ்காலம் 1
அந்த சிவன் கோயிலின் வாசலில் அமைந்திருந்த மரத்தடியில் ஊர் பெரியவர்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானோர் வெள்ளை வேட்டிசட்டை உடுத்தி நெற்றியில் விபூதி சகிதமாய் காட்சியளித்ததிலிருந்து அந்த கோயிலின் உள்ளுறையும் ஈசனாரின் மீது அவர்களுக்கு அளவுகடந்த அபிமானம் இருப்பது தெளிவாகிறது. மரத்தடியிலிருந்து இருபதடி தொலைவில் மேற்குதிசையில் சிதிலமாக இருந்தது அந்த கோயில். நுழைவாயிலின் மீது ஈசனும் உமையும் ரிஷபாருடராய் புன்னகையுடன் சுதைவடிவில் தாங்கள் பேசப்போவதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாய் தோன்றியது மயூரநாதனுக்கு. சிறிதுநேரம் அங்கேயே வெறித்து பார்த்து கொண்டிருந்தவர்,
அட என்னப்பா ஆளாளுக்கு மவுனமா இருக்கீங்க? என்ன பேசுறதுக்கு கூடியிருக்கிங்க அத பத்தி சொல்லுங்களேன்? என்று யாரோ கேட்கும் கேள்வியில் சுயநினைவுக்கு வந்தவர் பேசத்துவங்கினார். மாயவரம் டவுன்லருந்து சேகரமாகுற குப்பையெல்லாம் நம்ம கழுக்காணிமுட்டம் கோயில் இடத்துல கொண்டுவந்து கொட்டுது நகராட்சி நிர்வாகம். மொதல்ல சின்ன குப்பமேடா இருந்த இந்த இடம் இப்ப இமாலயம் மாதிரி வளந்து நம்ம கிராமத்தையே அசுத்தமா மாத்திட்டு.இந்த விஷயத்த நாமள்லாம் இவ்ளோ தூரம் அனுமதிச்சதே பெரிய தப்பு. இனிமேலும் வளரவிட்டா நாளைக்கு அரசாங்கம் நம்மவீட்டு கொல்லையிலக்கூட குப்பைய கொட்டும்
சரிங்க நீங்க சொல்றதுலாம் தெரிஞ்ச விஷயம்தான் இதுக்குதான் நாம நகராட்சி காரங்கள்ட நிறையதடவ மனுகொடுத்துருக்கோம் அவங்களும் வேறமாற்று இடம் தயார் பண்ணுற வரைக்கும் கிராம மக்கள் கொஞ்சம் பொறுத்துக்கணும்ன்னு கேட்டு, பத்தாக்கொறைக்கு மாற்று ஏற்பாடு செய்யிறவரைக்கும் குப்பைமேட்ட சுத்தி நகராட்சி சார்பா காம்பவுண்ட் செவுரு கட்டி தரதா சொல்லிருக்கங்களே!? அப்புறம் என்ன? என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் குறுக்கிட்டார்
நீங்க தற்காலிகமா கிடைக்குற தீர்வ நெனச்சு சந்தோசப்படுறீங்க ஆனா நான் நிரந்தரமா நம்ம கோயில் இடம் போயிடக்கூடாதேன்னு கவலப்படுறேன், நல்லா யோசிச்சு பாருங்க இடத்த சுத்தி காம்பவுண்ட் போட்டா அதுக்கு ஆகுற செலவு எவ்வளவு? அவ்ளோ செலவு செய்யிறவன் உடனே மாற்று ஏற்பாடு செஞ்சிடுவான்னு எந்த நம்பிக்கையில ஒத்துகிட்டு வந்திங்க? அன்னைக்கு மட்டும் நான் இருந்திருந்தன்னா இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துகிட்டு வந்துருக்கமாட்டேன் என் போறாத நேரம் என் பொண்ணு பிரசவத்துக்கு போயிட்டேன். அதுக்குள்ள நீங்களாம் போய் முன்யோசன பின்யோசன இல்லாம இப்படி ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டு வந்துருக்கிங்க.
சரி மயூரநாதா!! இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றே? நாங்க வேற அன்னைக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டப்ப அவங்க சொல்ற யோசனை நல்லாருந்துதுன்னு தலையாட்டிட்டு ஒத்துகிட்டு வந்துட்டோம், இப்ப எலெக்ஷன் முடிஞ்சி புது நகர்மன்ற தலைவர் வேற பதவி ஏத்துகிட்டு இருக்காங்க இப்பபோய் கேட்டோம்னா இதபத்தி எனக்கு ஒன்னும் தெரியாது நான் விசாரிச்சுட்டு சொல்றேன்னு சொல்லுவாங்களே?
அதான் நானும் சொல்லுறேன் பழைய ஆளுங்களுக்காவது இப்படியொரு பிரச்சன இருக்குனு தெரியும் புதுசா வந்த ஆளுங்களுக்கு சுத்தமா இதபத்தி தெரியாது இந்த குப்பைமேடு விவகாரத்த தூக்கி குப்பதொட்டியில போட்டுட்டு பேசாம இருப்பாங்க நாமதான் நேர்ல போய் அவங்கள நாபக படுத்தி காம்பவுண்ட் செவருலாம் எங்களுக்கு வேணாம் நீங்க குப்பைய அள்ளிட்டு எங்க கிராமத்த சுத்தமா இருக்க விடுங்க குப்பையக்கொட்ட வேற இடம் பாருங்கன்னு கேக்கணும் என்றார் மயூரநாதன்.
கூட்டத்தில் சிறுசலசலப்பு எழுந்து அடங்கியது பிறகு அவர்கள் அனைவரும் புதிய நகராட்சி ஆணையரை நாளையே சந்திப்பது என்று முடிவு செய்தவர்களாய் அங்கிருந்து நகர்ந்து தத்தமது வீடுகள்நோக்கி நடைப்போட்டனர். மயூரநாதனும் மரத்தடியில் இருந்து நடந்து நேராக சிவன் கோயிலின் வாசலுக்கு சென்று வெளியிலிருந்து உள்ளே நோக்கினார் நந்தியின் பின்புறம் பெரிதாக தெரிய கொம்பின் வழியே உள்ளுறையும் ஈசனார் மவுனத்துயில் கொண்டிருப்பது தெரிந்தது. அவருடைய அழகை ஒருமுறை கண்ணார கண்டுவிட்டு அவரும் வீடு நோக்கி நடக்கலானார்.
அது ஒரு பாழடைந்த கோயில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டு குறைந்த பட்சமாக பத்து நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும். கடந்த காலங்களில் பல்வேறு பட்ட வழிபாடுகளை கண்ட அந்த சிவன்கோயில் இன்று கேட்பாரின்றி சிதிலம் அடைந்து கிடக்கிறது. யாரோ ஒரு சோழராஜா கட்டியதாய் செவிவழியாக செய்தி நிலவுகிறது அந்த ஊரில் அதற்கு ஆதாரமாக சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நான்கு பேன்ட்சூட் பேர்வழிகள் ஏதோ பூதக்கண்ணாடி மருந்து டப்பாக்கள் போன்ற வஸ்துகளுடன் வந்து கோயிலின் சுவற்றில் இருக்கும் கல்லெழுத்துகளை படித்து அது ஒரு சோழராஜா கட்டியது என்ற கதை உண்மைதான் இந்த ஊரில் இருக்க நீங்களெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக ஒரு தகவலை கொடுத்து சென்றனர். அதிலிருந்து சில நாட்களுக்கு ஊர்மக்கள் கோயிலுக்கு தினம் வருவதும் போவதுமாக விளக்கு போடுவதுமாக இருந்தனர் ஆனால் பாருங்கள், ஒரு சுபயோக சுபதினத்தில் இதே ஊரின் இன்னொரு பகுதியில் உள்ள கருணை புரீஸ்வரர் எனும் சிவன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததும் இந்த கைலாசநாதர் என்னும் சிவனாரை ஏறக்குறைய மறந்தே போயினர். மயூரநாதன் போன்ற பழமை விரும்பிகள் மட்டும் அடிக்கடி வந்து கைலாசநாதரை நலம் விசாரிப்பது உண்டு.
அவர் வீட்டுக்குள் நுழைந்த பொழுது அவரது மனைவி சாப்பாடு தயாராய் இருப்பதாய் சொல்லி சாப்பிட அழைத்தார். வராண்டாவில் மயூரநாதனின் தாயார் காலைநீட்டிக்கொண்டு அமர்ந்திருக்க கைக்கால் கழுவி கூடத்தில் வந்து அமர்ந்த மயூரநாதனின் முகம் மெலிதாக வாடியிருப்பதை கண்டு தாயார் உள்ளே வந்து அருகில் அமர்ந்துகொண்டு முகவாட்டதிற்கான காரணத்தை விசாரிக்கவே
அதான்மா!! நகராட்சி குப்பையெல்லாம் கொட்டுறாங்கள அந்த இடத்த சுத்தம் பண்ணி தரணும்னு நாளைக்கு கேக்கபோறோம் அந்த யோசனைதான் என்றார் மயூரநாதன்
வேணாம் தம்பி அந்த குப்பைமேட்ட கெளராதீங்கடா. அந்த குப்பமேடு இருக்குற இடத்துல பொதையல் இருக்குதுடா அது வெளிப்பட்டா ஏழுகடலும் பொங்கி உலகத்தையே அழிச்சிடும்டா!! என்றார். கிழவிக்கு அவரது மாமியாரின் மூலம் கிடைத்த புதையல் கதை பலநூற்றண்டுகளுக்கு பின்னரும் அந்த பகுதியில் உயிரோடுதானிருந்தது
அம்மா!! சும்மா பெனத்தாதம்மா பொதையலாம் பொதையலு! என்று சலித்து கொண்டார் மயூரநாதன்
இந்த குப்பைமேட்டு பிரச்சனை வரும்போதெல்லாம் அந்த அந்தகிழவி இதையேதான் சொல்வார். அதற்கான மறுமொழியும் மயூரநாதனிடமிருந்து மேற்கண்டவாறே வெளிப்படும்
ஆனால் இந்தமுறை ஏனோ அவர் மனதுக்கு அம்மா சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்கியது.
உண்மையில் குப்பைமேட்டில் புதையல் இருக்குமோ?
கடந்தகாலம் 2
அகரபிரம்மதேய இராசேந்திர மங்கலத்தின் கணிமுற்றூட்டு கைலசமுடைய நாயனார் கோயிலின் உற்சவமூர்த்தி மண்டபத்தின் வாயிலில் ஊர்மக்கள் முழுவதும் குழுமி இருந்தனர். செப்பு திருமேனிகளை மாலிக்காபூர் படைஎடுப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் துரிதமாய் நடந்து கொண்டிருக்க, அந்த திருமேனிகளுக்கு சகல மரியாதையுடன் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. பூஜைகள் முடிந்தவுடன் அந்த புதையல் இரகசியம் இருக்கும் ஏட்டினை படிக்கும் நோக்குடன் சோமாஸ்கந்த மூர்த்தியின் பாதங்களில் இருந்து வெளியே எடுத்து வந்தனர் அந்த செப்பேட்டினை. குறைந்த பட்சம் இரண்டு ஆட்கள் தேவையாயிருந்தது அதனை தூக்கி வருவதற்கு.
அர்த்தமண்டபத்தில் வைத்து படிப்பதற்காக காத்திருந்த சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பண்டிதரான திவாகரபட்டருக்கு முன்பாக செப்பேடு கொண்டுவந்து வைக்கப்பட்டது.
ஒன்றரை முழம் நீளமும் முக்கால் முழம் அகலமும் கொண்டதாயிருந்த அந்த ஏடுகள் தற்கால புகைப்படஆல்பம் போன்று ஒரு பெரிய வளையத்தில் கோர்க்கபட்டு காட்சியளித்தது. அந்த வளையத்தின் மீது ஏறக்குறைய கையகல வட்டத்தகடு ஒன்று புலப்படவே அதில் இரண்டுபக்கம் குத்துவிளக்குகள் நிற்க இடது ஓரத்தில் புலியொன்று குத்துக்காலிட்டு அமர்ந்து அதட்டிக்கொண்டு இருப்பது போலவும் அதற்கு கட்டுப்பட்டு மீன்களிரண்டும் வில்லொன்றும் இருப்பதுபோலவும் அதற்கு மேல் ஒரு வெண்கொற்ற குடையும் அருகில் இரண்டு சாமரங்களும் குழிவடிவில் செதுக்கப்பட்டிருந்தது, அதனைச்சுற்றி கிரந்த எழுத்துகளில்
ஸ்ரீமச் சாசனம் ஊர்விச சிரோபிஹி சேகரிகிருதம் ஏதத்
இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மனஹ
என்று எழுதபட்டிருந்தது. தற்கால சமஸ்கிருத எழுத்துருக்களுக்கும் அதில் உள்ள எழுத்துருக்களுக்கும் வேறுபாடு இருந்ததால் சிறிது சிரமத்துடன் திவாகரர் படித்ததுதான் தாமதம் உடனே கூட்டத்தில் இருந்த சூர்யக்கோடி பட்டர் ஆஹா!! இது சோழ ராஜாங்க முத்திரை அல்லவா? ‘பரகேசரி இராஜேந்திர வர்மனுடைய இந்த தானம் உலகத்தின் உச்சியில் வைக்கபடுகிறது’ என்பது இந்த வாசக்கத்தின் பொருள் என்று உரக்க கத்தியதை கேட்டப்பொழுது அங்குள்ள மக்களுக்கு சோழநாட்டு மண்ணின் மீதான காதல் புல்லரிப்பாக வெளிப்பட்டது. ஏடுகளை இணைத்திருக்கும் பெரிய வளையத்தில் ஏதோ எழுதியிருப்பதை கண்ணுற்ற திவாகரர் தமிழில் இருக்கும் அந்த எழுத்துகளை சற்றே சிரமத்துடன் படிக்கவே.
இவ்வளையத்தில் கோத்த ஏடுகள் எண்பத்தாறு
என்றிருந்தது. முதல் ஏட்டினை பார்த்தவருக்கு வளையத்தின் ஓரத்தில் 2 என்று எண்ணிடப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அது சமஸ்க்ருத கிரந்தத்தில் எழுத பட்டிருந்ததாலும் செம்பின் மீது பச்சை படிந்திருந்ததாலும் தொடர்ந்து படிக்காமல் புரட்டிக்கொண்டே போனவர் ஒன்பதாம் ஏட்டின் பின்பக்கம் மூன்றாம் வரியிலிருந்து தமிழ் எழுத்துகள் தெளிவாக தெரிந்ததை அடுத்து அதனை படிக்கலானார் கூடியிருந்தவர்கள் ஆர்வத்துடன் நோக்க,
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னதுவாக, எதிரமர் பெறாது
எண்டிசை நிகழப் பறையது கறங்கின வார்த்தைகேட்டு
இரட்டைபாடி ஏழரைஇலக்கமும் கொண்டு கொல்லாபுரத்து
ஜெயஸ்தம்பம் நாட்டி பேராற்றங் கொப்பத்து வந்தெதிர் பொருத
ஆகவமல்லன்தன் அடல்சேனை எல்லாம்பாராது நிகழ பசும்பிணம் ஆக்கி
விஜயாபிஷேகம் பண்ணி வீரசிம்மாசனத்து வீற்றிருந்த
உடையார் ஸ்ரீ இராசேந்திர தேவர்க்கு ஆண்டு ஒன்பது
என்ற மெய்கீர்த்தியை திவாகரர் படிக்கும் பொழுது கடல் கொண்டு படைநடத்திய முதலாம் இராசேந்திரசோழரின் மகன் இரண்டாம் இராசேந்திரனது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையின் கங்கைகொண்டான் என்ற மாளிகை அனைவரது கண்முன்னரும் விரிந்தது
கங்கைகொண்ட சோழன் மாளிகையின் நீராட்டு மண்டபத்தில் மாவளிராசன் என்ற இருக்கையில் உடையார் இராஜேந்திர சோழதேவர் இடுப்பில் சிறு ஆடையுடன் குடுமியை அவிழ்த்து விரித்துவிட்ட நிலையில் முறுக்கு மீசையுடன் கம்பீரமாக அமர்ந்திருக்க திருமெய்காப்பாளர்கள் அவரது ஆபரணங்களை கழற்றி அவரை நீராடலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். மாமன்னரின் கொப்பத்து போர்வெற்றியை முன்னிட்டு சோழநாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறுபட்ட சதுர்வேதி மங்கலங்களுக்கு தானங்கள் வழங்கி சிலபல நிலங்களை இறையிலியாக்கி மன்னர் உத்தரவிட்டு கொண்டிருக்க அரசரின் திருவாய்க்கேள்வி எனும் அதிகாரி வாய்மொழி ஆணையை ஓலையில் குறித்து கொண்டிருந்தார்.
அடுத்து திருஇந்தளூர் நாட்டு சோழகுல நாராயண சதுர்வேதி மங்கலமும், அகரபிரம்மதேய ராஜேந்திர சதுர்வேதி மங்கலமும் என்று வரிபொத்தகம் எனும் அதிகாரி கூற, ஏற்கனவே அந்த பிரம்மதேயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் குறித்த வரிபொத்தக கணக்கு வாசிக்கப்பட்டது
அதனை கனிவுடன் கேட்ட மன்னன் அழகிய சோழநல்லூர் எனும் ஊரை சேர்ந்த நிலங்களையும் வைப்பூர் எனும் ஊரை சேர்ந்த நிலங்களையும் இறையிலியாக்கி இவ்விரண்டு பிரம்மதேயங்களுக்கும் தானமாக்கி ஆணையிடுகிறேன். மேலும் நமது மூத்த தமையனார் வழங்கிய தானங்களையும் நாம் இதுவரை வழங்கிய மற்றும் இப்பொழுது வழங்கிய தானங்களையும் சேர்த்து ஒரே ஆணையாக பிறப்பித்து இரண்டு பிரம்மதேயங்களும் இனி அகரபிரம்மதேயம் ராஜேந்திர மங்கலம் என்று ஒரே பெயரால் அழைக்கப்படும் என்று ஆணையிடுகிறேன். இவ்வாணையை கல்லிலும் செம்பிலும் வெட்டுகவும் என்றும் ஆணையிடுகிறேன். இதற்கான ஸ்ரீமுகத்தை தற்பொழுதே தயார் செய்யுங்கள் என்று கம்பீரமாக உத்தரவிட்டார் அரசர்
அதிகாரிகள் பழைய ஓலைக்கட்டுகளைத்தேடி காலம்சென்ற மன்னன் இராசாதிராசனின் ஆணைகளை கண்டுபிடித்து அதனுடன் தற்போதைய மன்னரின் மெயகீர்ர்த்தி எழுதி இரண்டு ஆணைகளையும் ஒன்றாக்கி ஓலை தயார் செய்து அரசருக்கு படித்துக்காட்டியது என்னவென்றால்
சுவர்க்கம் புகுந்த மன்னர் இராசதிராசர் பழையாறை அரண்மனை கீழைசோபானம் பகுதியில் விஜையராஜேந்திர காளிங்கராயன் எனும் அரசஇருக்கையில் அமர்ந்து திருவிந்தளூர் நாட்டை சேர்ந்த தட்டமங்கலம், கூத்தனூர், பெருநாகன்குடி, சிருநாகன்குடி, கொற்றவைநல்லூர், மதுராந்தக நல்லூர், கடுவன்குடி உள்ளிட்ட ஒன்பது ஊர்களை ஒன்றாக்கி பழைய பெயர்களைநீக்கி சோகுலநாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டு அதில் வேதத்தில் வல்ல அந்தணர்களை குடியிலமர்த்தி அவ்வூர் நிலங்களில் வரும் அரசுவரிகள் முழுவதும் அந்த அந்தணர்களுக்கு தானமாக வழங்கி உத்தரவிட்ட ஸ்ரீமுகமும்
மேற்படி நாட்டிலமைந்த அருவாபட்டம், ஏனாதிமங்கலம், திருபாளைகுடி, உழுத்துகுப்பை, பூதிகுடி, சேமங்கலம் ஆகிய ஊர்களை ஒன்றாக்கி தற்போதைய மன்னர் கொல்லாபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டிய இராஜேந்திரரால் அகரபிரம்மதேய ராஜேந்திர மங்கலம் என்று பெயரிடப்பட்ட சதுர்வேதி மங்கலமும் ஒன்றாக்கப்பட்டு இனி அகரபிரும்மதேய இராஜேந்திர சதுர்வேதிமங்கலம் எனும் புதிய பொதுப்பெயரிடப்படுகிறது. இந்த பிரம்மதேயங்களுக்கு வழங்க பட்ட நிலதானங்களும் அதன் அளவைகளும் தானம் பெற்றோர் விவரமும் அரசாணையை திறம்பட செயல்படுத்திய அதிகாரிகளின் பெயர்களும் பின் வருமாறு என்று ஒவ்வொருவராக படிக்க துவங்கினார் திவாகர பட்டர்.
அட என்னய்யா இது? இந்த செப்பேட்டில் ஏதோ புதையல் இரகசியம் இருக்கிறது என்று கூறினீர்கள் பார்த்தால் பிரம்மதேய தானம் பற்றிய அரசாணையாக இருக்கிறதே? என்று சலித்து கொண்டனர் அர்த்தமன்டபத்தில் கூடியிருந்த மக்கள்.
மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புதையல் செய்தி இப்படி நமத்து போனதில் அந்த ஊர்மக்களுக்கு பெரும் வருத்தமாகி விட்டது. திவாகர பட்டர் வாசிப்பதை நிறுத்தி விட்டு, புதையல் கதையெல்லாம் ஒன்றும் இல்லை என்றலும் பிறகு ஏன் இந்த செப்பேட்டினை இவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்? என்று கேட்கவே
திவாகரரே அந்த செப்பேடு சோழராசாவின் ஆணை. அது கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியது இருந்தும் அதன் முதல் ஏடு தொலைந்து போய் இரண்டாம் மூன்றாம் ஏடுகளில் கீழ்பகுதி சிதைந்து போயிருக்கிறதே பார்த்தீர்களா? அதனை மறைக்கத்தான் இத்தகைய புதையல் கதை உண்டாக்க பட்டிருக்கிறது என்று கூட்டத்தில் ஒருவர் சத்தமாகக்கூற அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்து
சரியய்யா ஒன்றுக்கும் உதவாத இந்த செப்பேட்டை வைத்து கொண்டு என்னசெய்வது என்று ஒருவர் கேட்க்க?
வேண்டுமானால் இதனை உருக்கி மடைபள்ளிக்கு தேவையான பாத்திரமாகவோ குடமாகவோ வடித்துவிடலாம் என்றார் ஒருவர். அந்த யோசனையும் பலருக்கு சரியென்று பட்டது
நிகழ்காலம் 2
மயூரநாதனும் அவரது சகாக்களும் நகர்மன்ற தலைவரை சந்திக்க வேண்டிக்காத்திருந்தனர். பத்துமணியளவில் சுமோவில் வந்து இறங்கினார் அவர். மயூரநாதன் குழுவினர் பின்தொடர்ந்து மாடியறைக்கு சென்றபோது அவர்களை காத்திருக்க்கும் படி கேட்டுக்கொண்ட மன்றதலைவரின் உதவியாளர் அரைமணிநேரத்திற்கு பிறகு உள்ளே வரும்படி கூறவே மயூரநாதன் கோஷ்டியினர் ஆர்வத்துடன் அறைக்குள் புகுந்தனர்.
ஏற்கனவே உதவியாளரின் மூலம் என்ன பிரச்சனை என்று ஒருவாறு கேட்டு தெரிந்துகொண்டிருந்த மன்றத்தலைவர் ஏதுமறியாதவர் போல அவரகளை வரவேற்று அமரவைத்து என்ன விஷயம் என்று கேட்கவே
மயூரநாதன் குழுவினரில் ஒருவரான கோவிந்தராஜன் கழுக்கானிமுட்டத்து குப்பை மேட்டை பற்றியும் அதனால் அந்த கிராமம் அடைந்துவரும் சுகாதார இன்னல்களையும் விவரித்தார். மேலும் குப்பைக்கொட்டும் இடம் கோயிலுக்கு சொந்தமான ஒன்று என்பதாலும் அதனை சுத்தமாக்கி மீண்டும் கிராமத்தினரிடம் ஒப்படைக்க வேண்டியும் இதுகுறித்து ஏற்கனவே இருந்த நகர்மன்றதலைவர் கூறிய யோசனைகளையும் கூறி எங்களுக்கு காம்பவுண்ட் சுவர் எல்லாம் ஒன்றும் வேண்டாம் குப்பையை சுத்தமாக்கி இடத்தை கிராமத்தார் வசம் ஒப்படைத்தால் போதும் என்றும் கேட்டு தனது சுருக்கமான உரையை முடித்து கொண்டார்.
உண்மையில் இவர்கள் குறிப்பிடுவது போன்ற காம்பவுண்ட் சுவர் கட்டும்பணிக்கான ஆயத்தங்கள் ஏதும் தற்போது இருப்பதாக அந்த மன்றதலைவருக்கு தெரியவே இல்லை. சிறிது நேரம் யோசித்தவர் அது அப்போதைய நகர்மன்ற தலைவரின் தற்காலிக மடையடைக்கும் வேலை என்று புரிந்துகொண்டவர் இந்த விவாகரம் குறித்து ஏற்கனவே என்ன முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்று கூறி மயூரநாதனின் குழுவினரை கனிவுகூர்ந்து சிறிது நேரம் வெளியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டவர்,
உதவியாளரையும் முக்கிய அதிகாரிகளையும் அழைத்து குப்பைமேடு விவகாரம் குறித்த முந்தைய நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா? என்று கேட்டறிய முன்வரும் பொழுதுதான் அது ஒருபூதாகரமான பிரச்சனை எளிதில் தீர்வு காணமுடியாத விஷயம் என்று அவருக்கு புலப்பட்டது
ஏனெனில் நகரத்தின் நான்கு புறங்களிலும் விவசாயநிலங்கள் சூழ்ந்த கிராமங்களே அதிகம் இருக்கும் பட்சத்தில் குப்பைகளை கொண்டுபோய் கொட்டுவதற்கு தோதான ஒருஇடமே அந்தநகரத்தில் இல்லாமலிருந்தது. சிலஆண்டுகளுக்கு முன்புவரை பட்டமங்கலத்திலிருக்கும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்தான் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது என்றாலும் அந்தஇடம் நகரின் மைய பகுதியில் இருப்பதாலும் பேருந்து நெரிசலை சமாளிக்க தற்காலிக பேருந்து நிலையம் ஒன்று அமைக்க வேண்டி போக்குவரத்து இலாக்கா அந்த இடத்தை நகராட்சியிடம் வாடகைக்கு கேட்டது. வேறு வழியின்றி தனது உன்னதமான குப்பைகொட்டும் இடத்தை ஒப்பந்தத்துக்கு விட்ட நகராட்சி கழுக்காணிமுட்டம் கிராமத்தை தேர்ந்தெடுத்தது.
கழுக்காணி முட்டம் கிராமத்தில் இருக்கும் பெரிய குப்பைமேடு அந்தப்பகுதி மக்கள் காலைநேரங்களில் ஒதுங்குவதற்கும் வீட்டுகுப்பைகளை கொட்டுவதற்கும் சிறுவர்கள் விளையாடுவதற்குமாக பயன்பட்டுவந்தது தெரியவே தனக்கு வசதியாக ஒரு இடம் கிடைத்து விட்டதை தெரிந்து கொண்ட நகராட்சி குப்பைவண்டிகள் நேராக கழுக்காணிமுட்டம் நோக்கி அணிவகுக்க துவங்கின. சாதாரண குபைதானே என்று கண்டு கொள்ளாமல் இருந்த பொதுமக்களுக்கு அது ஒருபெரிய பொருட்டாக தெரியவில்லை ஆனால் பெருகிவரும் பொருளாதார சூழலில் மருத்துவமனை கழிவுகள் மார்கெட்டுகளின் காய்கறிகழிவுகள் பொதுமக்களின் வீடுகளில் இருந்து சேகரமாகும் குப்பைகள் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தனது இருப்பிடத்தை அதிகரித்து கொண்டேபோன குப்பைமேடு, தனது இனிமையான மணத்தை பரப்பதுவங்கிய பிறகுதான் அங்குமிங்குமாக எதிர்ப்பு குரல்கள் கிளம்பி இன்று மயூரநாதன் குழுவினர் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்றனர்.
வேறு இடத்துக்கு ஏதும் மாத்தமுடியாதா அந்த குப்பை கொட்டுற இடத்தை? என்று உண்மையாகவே அப்பாவித்தனமாக கேட்ட மன்றதலைவரிடம் ஏற்கனவே பாதாளசாக்கடை மூலமா சேருற தண்ணிய சரியா ப்ராசஸ் பண்ணாம சத்தியவாணன் வாய்கால்ல திறந்து விடுறதா ஒரு பிரச்சன நகராட்சிக்கு இருக்கு, இதுலஇத எங்கசார் மாத்துறது?. குப்பைங்கள கொட்ட அதுதான் சரியான இடம். வேற எங்கயும் மாத்த முடியாது அதுனால நயமா பதில்சொல்லி அவங்கள அனுப்பிடுங்க சார் என்று ஆலோசனை வழங்கினார் நகராட்சி செயலாளர்.
சற்றுநேரம் சிந்தித்த நகர்மன்றதலைவர் மயூரநாதன் கோஷ்டியினரை அழைத்து இந்த குப்பைமேடு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இருந்தவர்கள் என்னவிதமான கொள்கை முடிவு எடுத்துருக்காங்கனு கொஞ்சம் பாக்க வேண்டியிருக்கு. அதபத்தி விசாரிச்சிட்டு நாளைக்கு நானே உங்க ஏரியாவுக்கு வந்து பாக்குறேன் என்றார் புன்னகையுடன்.
அந்த பதில் திருப்தி கரமானதாயிருந்தது போலும். சரி என்று கூறி ஊருக்கு திரும்பினார்கள் மயூரநாதன் குழுவினர். அதன் பிறகு அந்த நகரமன்ற தலைவர் குறிப்பிட்ட ஊர்ரைப்பற்றிய சமாச்சாரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, ஒருமுறை அந்த குப்பை மேட்டையும் பார்த்து விடுவது என்ற நோக்கத்தில் மறுநாள் தன் உதவியாளர் சகிதமாய் அந்த ஊருக்கு விரைந்தார். இந்த விவகாரம் முறையாக அவ்வூராருக்கு தெரிவிக்கபட்டிருந்ததால் அவர்களும் தயாராய் இருக்க குப்பைமேடும் அதன் சாதகபாதகங்களும் அதில் புதையல் இருப்பதாக ஒரு கதை நிலவுதும் அங்கு அலசப்பட்டது. பிறகு இங்கு எதோ பழைய சிவன் கோயில் இருப்பதாக கேள்வி பட்டேனே அத பாக்கலாமா? என்று கேட்டார் நகர்மன்றத்தலைவர்.
ஆர்வத்துடன் அந்த ஊர் காரர்கள் அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர். பழமையான சோழர்கால கருங்கற்கோயில் மழையிலும் வெயிலிலும் படாதபாடு பட்டு கருநிறத்தில் பாசம் பிடித்து பாழடைந்து கிடந்தது. கருவறையிலிருக்கும் சிவனாரின் மீது ஒரு வேட்டியும் யாரோ சாத்திய காய்ந்துபோன மாலையும் காட்சியளித்தது. சுவாமியை வணங்கிய மன்றத்தலைவர் இந்தகோயில ஏன் இப்படியே போட்டு வச்சிருக்கிங்க இத புனரமச்சு கும்பாபிஷேகம் பண்ணக்கூடாதா என்று கேட்டார்.?
ஊர்காரர்கள், கும்பாபிஷேகம் பண்றதுனா என்ன சாதாரன விஷயமா? நிறைய பணம்தேவ படுதுங்களே ஏற்கனவே கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் கருணைபுரீச்வரர் கோயில் கும்பாபிஷேகம் பண்ணோம் அது புழக்கத்துல உள்ள கோயில் பரவால்ல, ஆனா இது பாழ்பட்டுபோச்சு ரொம்ப செலவாகுங்க என்றனர்.
ஏன் இந்து சமய அறநிலையத்துறைக்கிட்ட கேக்க வேண்டியதான? என்று அவர் கேட்டபொழுது கும்பாபிஷேகம் பற்றிய சிந்தனை அந்த ஊர்காரர்களிடம் வேரூன்ற துவங்கிவிட்டது. அவரவரும் மனக்கோட்டை கட்டியபடி சாதகபாதகங்களை மன்றத்தலைவருடன் அலசிக்கொண்டிருந்த நேரத்தில் மன்றதலைவர் தனது செல்போனை எடுத்து யாரையோ உடனே இங்கு வரும்படி அழைத்து வழியெல்லாம் கூறினார்.
அரைமணி நேரத்திற்குள் ஒரு அம்பாசிடரில் வந்து இறங்கினார் பேன்ட்சர்ட் அணிந்த நாற்பது வயது மதிக்கத்தக்க நபர். இவர்தான் மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி என்னோட நெருங்கிய நண்பர் நேத்துக்கூட பாழடைந்த கோயில்கள புனரமைக்கிறதுக்கு கவர்மென்ட் நிதி ஒதுக்கிருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தார் அதான் இந்த கோயில அந்த நிதில புதுபிக்க வழிஇருக்குமான்னு பாக்க வரசொன்னேன் என்று நகர்மன்றத்தலைவர் கூறியதும் அந்த ஊர் காரர்களின் மனதில் அவர் வானளாவி வளர்ந்து நின்றார்.
சிறிது நேரம் கோயிலை சுற்றிபார்த்த அந்த அதிகாரி வாயிலுக்கு வந்து அரசாங்கம் முப்பது லட்சம் ஒதுக்கி இருக்கு, அதுபோக ஊர்காரர்களும் கொஞ்சம் பணம் சேத்து கொடுத்தா ஒருவருஷத்துகுள்ள கோயில புதுப்பிச்சு கும்பாபிஷேகம் பண்ணிடலாம். கருங்கல் கோயில்ங்கிறதால இடிமானம்லாம் ஒன்னும் இல்ல மேலபடிஞ்சிருக்க பாசத்த மட்டும் சுத்தம் பண்ணிட்டு அங்க இங்க சின்னசின்ன வேலையலாம் பாத்து சுதைவேல செஞ்சி முன்னாடி ஒருமண்டபம் கட்டினா பூர்த்தி ஆயிடும் என்று அவர் கூறிய பொழுது கும்பாபிஷேகமே நடந்துவிட்டார் போல அந்த மக்களுக்கு பூரிப்பு ஏற்பட்டுவிட்டது, குப்பைமேடு பற்றிய சங்கதியை அவர்கள் மொத்தமாக மறந்து போய்விட்டிருந்தனர்.
ஊர் சார்பில் நிதித்திரட்டி தருவதாக ஒப்புக்கொண்டதும் ஒரு நல்ல நாளில் பாலாலயம் எடுத்து கோயில் வேலையை துவங்கி விடுவோம் என்று கூறி அதிகாரியும் நகர்மன்றதலைவரும் புறபட்டனர்.
கடந்த காலம் 3
செப்பேட்டினை உருக்கி பாத்திரமாக வடிக்கும் முடிவை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தவர்களை கணீர் குரலில் அதட்டிய பரிமளபட்டர். என்னய்யா சிரிக்கிறீர்கள் மகத்தான இரண்டு மன்னர்களின் ஆணைகளையும் நம்வாழும் பிரம்மதேயத்தின் பூர்வீக மனிதர்களின் பெயர்களையும் தாங்கி நிற்கும் செப்பேட்டுக்கு தாங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? இன்னும் பலநூறு வருடங்கள் கழிந்தாலும் இந்த செப்பேட்டில் உள்ள ஆணைகளும் பெயர்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அது ஸ்ரீகோயிலில் பதுகாக்கப்பட்டிருக்கிறது, தெய்வத் திருமேனிகளுக்கு கொடுத்த மரியாதையைத்தான் இதுவரை இந்த செப்பேட்டுக்கும் வழங்கினோம், அந்த மரியாதை நம் காலத்தில் துளியும் பிசகக்கூடாது என்று கர்ஜித்தார். அவரது கூற்று அங்கு பலரால் ஆமோதிக்கப்பட்டது.
மாலிக்காபூரின் படையெடுப்பில் தங்கள் ஊர் கோயில்சிலைகள் பறிபோகக்கூடாது என்ற உன்னத நோக்கில் ஆலயவாசலில் இரண்டாள் ஆழத்திற்கு வெட்டப்பட்டிருந்த பெரியக்குழிக்குள் அந்த செப்பேட்டினை மெல்ல தூக்கிவந்து இறக்கினர் பிரம்மதேயத்துக்காரர்கள். தொடர்ந்து உற்சவ திருமேனிகளான தெய்வ திருவுருவங்களும் ஒவ்வொன்றாக கண்ணீர்மல்க குழிக்குள் இறக்கப்பட்டது. பலமாக வேதமந்திரங்கள் முழங்க தூபதீப ஆராதனைகளுடன் குழிக்குள் மண்தள்ளபட்டு மூடப்பட்டது. எங்கிருந்தோ அழகாக பெயர்த்து கொண்டுவரப்பட்ட புல்செடிகளை அதன்மீது நட்டு இயல்பான தரை போன்று அவ்விடத்தை மாற்றினார்கள் ஒப்பற்ற சரித்திரம் பேசும் செப்பேடும் தெய்வதிருமேனிகளும் பத்தாண்டுகளோ நூறாண்டுகளோ விடுதலைநாள் என்றைக்கு என அறியாமல் மண்ணுக்குள் தங்கள் காத்திருப்பை துவங்கின.
நிகழ்காலம் 3
பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காய் முடிந்தது போல குப்பைமேட்டில்
துவங்கிய விவகாரம் கும்பாபிஷேகத்தில் வந்துநிற்க, ஒரு நல்லநாளில்
சிவாச்சாரியர்களை வரவழைத்து பாலாலையம் எடுத்து ஆலயத்தில் உறையும் சிவனாரை
கும்பாபிஷேகம் நடக்கும்வரை இந்த பாலாலயத்தில் இருந்து அருளுமாறு
வேண்டிகொண்ட பின்பு கோயில் திருப்பணிகள் இனிதே துவங்கியது. பழங்கால
சுற்றுசுவர்கள் இடிக்கபெற்று புதியசுவர்கள் எழுப்பும் பணிகளும் விமானத்தின்
மீது படர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து
கொண்டிருக்க இந்து சமய அறநிலையத்துறை மூலம் கட்டித்தரப்படும் முன்மண்டப
கட்டுமான பணியும் ஒரு சுபதினத்தில் துவங்கவே அறநிலையத்துறை அதிகாரி
முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அஸ்திவாரத்திற்கான குழிதோண்டும் பணி
துவங்கியது.
வலதும் இடதுமாக முறையே எட்டுத்தூண்கள் எழுப்புவதற்காக ஏழுகுழிகள் தோண்டிய பிறகு ஈசானிய மூலையில் அந்த இயந்திரம் தோண்டத்துவங்கியது. ஏறக்குறைய பத்தடி ஆழம் தோண்டியபிறகு இயந்திரத்தின் கையிலிருந்து கொட்டிய மண்ணுடன் ‘நங்’ என்ற நாதத்துடன் கணபதி உருவம் ஒன்று வந்து விழுந்தது .
அவ்வளவுதான் அங்கு பரபரப்பு தொற்றிகொண்டது அனைவரும் ஓடிப்போய் குழியினை எட்டிப்பார்க்க மேலும்பல சிலைகள் இருப்பதற்கான அடையாளமாய் கையும்காலுமாக மண்ணுக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்தன. படுவேகமாக செயல்பட்ட ஆட்கள் ஒவ்வொருவராக கீழிறங்கி கவனமாக மண்ணை நீக்கி அனைத்து சிலைகளையும் வெளிகொணர்ந்தனர் இறுதிக்கட்டமாக நான்குபேர் சேர்ந்து பெரும் முயற்சி எடுத்து செம்பினாலான புத்தகம் போன்ற ஒன்றையும் வெளிக்கொணர்ந்தனர்.
அறநிலையத்துறை அதிகாரி தொல்பொருள்துறைக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் விரைந்து வந்தனர். ஒன்றிரண்டு பத்திரிக்கை காரர்கள் கூட ஆஜராகியிருக்க செய்தி காட்டுத்தீ போலபரவிய சிலநொடிகளில் அந்த பகுதியில் கூட்டம் கும்மியடித்தது. சிலைகளை தொல்பொருள் துறையினர் தண்ணீர்விட்டு கழுவி சுத்தப்படுத்தி கோயில் மண்டபத்தில் வைத்து அவையனைத்தும் சோழர்காலத்தை சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று தற்காலிகமாக தெரிவிக்கவே செப்பேட்டிலிருந்த முத்திரை அதனை உறுதிசெய்தது. அன்றையநாள் முழுவதும் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கபட்டிருந்த அந்த செப்பேடும் சிலைகளும் மறுநாள் சென்னை அருங்காட்சியகத்துக்கு கொண்டுசெல்ல பெற்றது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆர்வத்துடன் செப்பேட்டினை படித்து அதற்கு ‘திருஇந்தளூர் செப்பேடு’ என்று நாமகரணம் சூட்டினர். கழுக்காணி முட்டத்து மக்கள் கும்பாபிஷேகத்திலும் செப்பேடு புதைபொருட்களிலும் மனதை பறிகொடுத்து குப்பைமேட்டு விவகாரத்தை அதற்குப்பிறகு நினைக்க கூடஇல்லை.
நிறைந்தது
பின்குறிப்பு: மேற்படி செப்பேடும் சிலைகளும் மயிலடுதுறையை அடுத்த கழுக்காணிமுட்டது கைலாசநாதர் கோயில் திருப்பணிக்காக 20/05/2010 அன்று அஸ்திவாரம் தோண்டும் பொழுது வெளிப்பட்டது. ‘திருவிந்தளூர் செப்பேடு’ என்றறியக்கூடிய இந்த செப்பேடு இதுவரை கிடைத்த செப்பேடுகளிலியே பெரியது மற்றும் ஏடுகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் அதிகமானது என்ற பெருமைகளை உடையது. முதலாம் இராசதிரசன் மற்றும் இரண்டாம் ராசேந்திரன் எனும் இருசோழமன்னர்களின் ஆணைகளை தாங்கி வீரராசேந்திரன் எனும் மன்னனின் காலத்தில் வெளியிடப்பட்ட இந்த செப்பேட்டில் குறிப்பிடப்படும் பல கிராமங்கள் இன்றும் அதே பெயர்களுடன் இருப்பது வரலாற்று பெருமை. செப்பேட்டுடன் கிடைத்த தேவார நால்வர், காரைக்கால் அம்மையார், சோமாஸ்கந்த மூர்த்தம், சந்திரசேகரர் சிலைகளும் குத்துவிளக்கு, கெண்டிகள், எக்காளங்கள் போன்ற பூசை பொருட்களும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளதாக தெரிகிறது.

No comments:
Post a Comment