Wednesday, 7 February 2018

சீனிச்சிரிப்பழகி !


சைட்டடித்தல் என்றழைக்கப்படும் விழிவீச்சு



1966....

மண் சாலை. சாலையோரத்தில் இரு பக்கமும் சுண்ணாம்பு பூசின ஓட்டு வீடுகள். திண்ணையில் ஓர் இளங்காளைக் கூட்டம். காளை வரும் பின்னே கட்டைவண்டி ஓசை வரும் முன்னே என்றபடி ஒரு ரெட்டைமாட்டு வண்டி சகல சத்தங்களோடும் ஓடி வருகிறது. சகல சத்தங்களுக்கும் மேலாக ஒரு சீனிச்சிரிப்புச் சத்தம் ஊடோடி வருகிறது.

கூட்டத்தில் ஒருவன் சிரித்து வைத்த சிறுக்கி யாரென்று சட்டென்று திரும்பிப் பார்க்கிறான். சத்தம் கொஞ்சம் கூடித்தான் போய்விட்டதோ என்றொரு தோரணையில் கண்களை இறுக மூடி தன் நாக்கைக் கடித்துக்கொண்டு அது வலித்தது போலவும் ஒரு பொய்முகம் காட்டி மேலும் கொஞ்சம் சத்தமில்லாமல் சிரித்தாள் அவள். சீனிச்சிரிப்பு தான் ! யாரடா இவள் ?

"யாருல அந்தப் பிள்ள?"

"அதுவா ? நம்ம அகஸ்தியர்பட்டி கானா மூனா மவடே"

"எது நம்ம அகஸ்தியர்பட்டி கானா மூனா மவளா?" ..... 'அடி கிறுக்கச்சி ! பாவாடை கட்டுதப்போ ஓடி ஓடி வருவ. சமைஞ்சு உக்காந்ததும் வீட்டுலயே அடஞ்சு போயிட்டியோ. இப்பிடி இப்பிடி அழகாகப் போறேன்னு ஒரு வார்த்தை சொன்னியாடி?'

அதுதான் சோமு தாவணி போட்ட ஈஸ்வரியை முதன்முதல் பார்த்த ஞாபகம். ஆயுசுக்கும் பார்க்குமாறு ஆனது அவன் தலையெழுத்து.




சும்மா சொல்லக்கூடாது. அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க அவன் பட்ட பாடு! அவளும் சண்டாளி .. பார்க்காத மாதிரியே ஒரு கள்ளப் பார்வை! அவளுக்காக கர்லாக்கட்டைகளோடு சண்டை போட்டு , அவளுக்காக உடம்பில் முறுக்கேற்றி, அவளைப் பார்க்க நேரும் போதெல்லாம் முண்டா பனியனும் முறுக்கு மீசையுமாகச் சுற்றி , அவளுக்காக கண்டவனுக்கெல்லாம் நல்லவனாகி , அப்பட்டமாய் விழி வீசி அட்டகாசமாய் வலை வீசினான்.

அவளுடைய மிடுக்கும் துடுக்கும் மேற்கொண்டு எத்தனையோ 'அவளுக்காக' செயல்களைத் தூண்டின. ஒரு நாள் அவளுக்காக ஒரு ஜோடி வளையல் வாங்கிக் கொண்டு போய் 'கட்டிக்கிடுதியா?' என்று அவன் கேட்டதற்கு தலையைக் குனிந்து கொண்டு ஓடி விட்டாள். ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு கானா மூனாவிடம் 'உங்க மவளைக் கட்டிக்கிடவா?' என்று கேட்டால் - அடிப்பாவி - அப்பொழுதும் தலையியக் குனிந்து கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

பொண்ணைப் பார்த்து பொருத்தம் பார்த்து முகூர்த்தம் பார்த்து ஒரு வழியாக அவளைச் சேலை கட்ட வைத்து அவளுக்குத் தாலி கட்டி முடித்துப் பெருமிதமாய் முறுக்கிவிட்ட மீசை ........ இப்போது ஓரமாய் நரைத்துவிட்டது !

2007.........

சோமுத் தாத்தா கண்ணாடி முன்னாடி நின்று மீசை முறுக்கிக் கொண்டார். தான் காதலித்துக் கைப்பிடித்த சீனிச்சிரிப்பழகி பொய்ப்பல்லில் சிரிப்பதை எண்ணிச் சிரித்தார். அகஸ்தியர்பட்டி நினைவுகள் !

காலம் எவ்வளவு மாறிவிட்டது ! காதலிப்பதும் கூட ! 2007-இல் வீசப்படும் விழிகள் எப்படி இருக்கும்? இன்று வாலிபர்கள் மீசைகளை மழித்துக் கொள்கிறார்களே ... பிறகெங்கே முறுக்குவது? தாவணிகள் .... ஒரு நாள் சடங்காகிவிட்டன. இருந்தும் கோடானுகோடி விழிகள் காற்றில் வீசப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. எப்படி? நவீனத்தைப் பார்க்கும் ஆசை வந்தது சோமுத் தாத்தாவுக்கு. கடந்த ஆறாண்டு காலச் சென்னை வாசம் நவீனத்தின் வாசத்தைப் பல வழிகளில் அவருக்குக் காட்டியிருந்தது.. இதைத் தவிர!

தனியாகக் கிளம்பித் தெருவில் இறங்கி நடந்தார். எங்கெங்கு காணினும் இளைய சமுதாயமே. ஜீன்ஸ் பேண்ட்டுகள், கலர் தலைகள், மண்டை ஓடு டாலர்கள், கைப்பைகள். பால் வேற்றுமையை உருவத்தில் மட்டுமே காண முடிந்தது. அனைவர் கைகளிலும் அவரவர் வசதிக்கேற்ப ஒரு தூதுவன் - 6600 , அல்லது 1100, அல்லது அம்பானி மாடல், அல்லது குறைந்தபட்சம் செல் வைத்திருக்கும் ஒரு நண்பன். முக்கால்வாசி பேர் செல்லில் விரல்களை விளையாடவிட்டுக் கொண்டே நடக்கின்றனர். சாலையைக் கூட அவர்களுக்கு செல் கேமிராவில் பார்த்தே பழகி விட்டது போலும். இத்தனை நாட்கள் இவர்களைக் கவனிக்கவே இல்லையே என்று ஆச்சரியப்பட்டார் ! யோசித்துப் பார்த்தார். கடைசியில் தானும் தெருக்களில் சைட் அடித்துச் சுற்றுகிறோமே என்றெண்ணிச் சிரித்தார். அறுபதில் இளமை எட்டிப் பார்க்குமாமே !

கடற்கரைக்குச் சென்றார். எங்கும் உட்காராமல் திரிந்து கொண்டே இருந்தார். எத்தனையோ நினைவுகள். தன் காதல் அனுபவங்களெல்லாம் அவரைப் பரவசப்படுத்திக் கொண்டே இருந்தன. இருந்தாலும் தான் இளவயதில் ஈஸ்வரியோடு இப்படிக் கடற்கர மணலில் சுண்டல் சாப்பிட முடியவில்லையே என்றொரு சின்ன சோகம். வயது குறைவதைப் போல உணர்ந்தார்!  ஒரு சின்னப் பெண் - 20 வயது இருக்கும் - தெரியாமல் அவர் மேல் இடித்துவிட்டு 'ஸாரி அங்கிள்' என்றுவிட்டுக் காணாமல் போனாள். இறைவன் வயதை நினைவுபடுத்திப் போனதாகத் தோன்றியது அவருக்கு.

இன்று இளைஞர்களுக்குப் பல செலவுகள் இருப்பதாகப் பட்டது அவருக்கு. தான் ஈஸ்வரிக்கு வாங்கிக்கொடுத்த வளையல்களும் , தீனிகளும் , இதர இதரவும் ரொம்பவே கொஞ்சம் தான் என்றெண்ணிக் கொண்டார்.

இருட்டும் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்துவிட்டு - திருப்தியாக சைட் அடித்துவிட்டு -  வீட்டுக்கு வந்தார். பேரன் காதில் செல்லோடு அவனுக்குக் கூடக் கேட்காத சத்தத்தில் முனகிக் கொண்டு வீட்டை அளந்து கொண்டிருந்தான். தன் வீட்டு இளைய சமுதாயம் !

ஈஸ்வரிப் பாட்டி கேட்டாள், "என்ன இன்னிக்கு இவ்வளவு நேரம் தனியாச் சுத்திட்டு வந்திருக்கீங்க."

"கடற்கரைக்குப் போயிருந்தேன் . சைட் அடிக்க"

"இது எப்போ ? எளமை திரும்புதோ? எத்தனை குமரிகளுக்கு வளையல் வாங்கிக்குடுத்தீங்க?"

"அடிப் போடி இவளே ! இந்தக் காலத்து இளசுங்க எல்லாம் அப்படியா இருக்கு. என் கண்ணுக்கு இன்னும் நீதாண்டி அழகா இருக்கே"

"அது சரி .. புடுங்கித் தின்னத் திராணியத்த நரி இந்தப் பழம் புளிக்குமுன்னு புளுகிட்டுப் போயிட்டுதாம்"

சீனிச்சிரிப்பழகி !

No comments:

Post a Comment