குடும்பம் ஒன்றின் உருவாக்கத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் உறவுகளுக்கும் அடிப்படையாக அமைவது நட்பு. குடும்பம் ஒன்றின் ஆரம்ப அங்கத்தவர்களாக அமைகின்ற கணவன் என்ற ஆணும், மனைவி எனும் பெண்ணும் நட்பின் இணைப்பாக குடும்பம் எனும் அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த அமைப்பையும் அதன் ஆரம்ப அங்கத்தவர்களாகிய கணவன் மனைவியையும் நாணயம் ஒன்றின் இயல்பு மூலமாகப் பார்ப்போம்.
நாணயமானது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக இருப்பது போல், குடும்பம் என்பது அது சார்ந்த சமூக அமைப்பின் அடையாளச் சின்னமாக அமைகின்றது. ஒரு நாணயத்தின் உட்பொருள் உலோகம். நாணயத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. குடும்பத்தின் உட்பொருள் நட்பு. கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான நட்பு. இந்த நட்பானது ஒரு குடும்பத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. உறுதியான நட்பை எந்தவிதமான இடர்களோ, அழுத்தங்களோ, எதிர்மறை விளைவுகளோ ஒன்றும் செய்து விட முடியாது. நட்பின் உறுதி குடும்பத்தின் உறுதியாகும்.
நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இந்தப் பக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட, தமக்கெனத் தனித் தனியான தன்மைகளைக் கொண்ட, ஆனால் ஒன்றில் ஒன்று சார்ந்து இருக்கும் இயல்புகளைக் கொண்டவை. உதாரணமாக ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பூவாகவும் மறு பக்கம் தலையாகவும் இருக்கும். இங்கே 'பூ' தனக்கான தனித்தன்மையையும் 'தலை' அதற்கான தனித் தன்மையையும் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. ஆனாலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும். இதே போன்றே கணவனும் மனைவியும் குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் தனித்துவமானவர்கள். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாறுபட்ட தன்மைகளை உடையவர்கள். ஆனாலும் ஒருவரில் ஒருவர் சார்ந்து இருப்பார்.
மிகவும் முக்கியமான இன்னுமொரு இரகசியமும் இங்கே புதைந்து கிடக்கின்றது. அதாவது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இதன் பொருள் எந்தப் பக்கத்தைப் பார்க்கிறோமோ அந்தப் பக்கமாகிவிடு என்பது தான். அதாவது குடும்பம் என்ற நாணயத்தில் ஒருவர் மறு பக்கத்தைப் பார்க்கும் போது தனது பக்கம் முற்றாக மறைந்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தூய்மையான நட்பின் அடிப்படையே தன்னை மறைத்து, மறந்து, மற்றவரை முழுமையாகப் புரிந்துகொள்வது தான்.
நாணயத்தின் பெறுமதியை நிலைநாட்டுவதற்கு இந்த இரண்டு பக்கங்களின் பங்களிப்பைப் பற்றிப் பார்ப்போம். தனித்துவம், முரண்பாடு, வெவ்வேறு பக்கங்கள் எனப் பல்வேறு இயல்புகள் இந்த இரண்டு பக்கங்களில் இருந்தாலும் நாணயத்தின் பிரதிநிதித்துவம், அதன் பெறுமதி என்பவற்றை இரண்டு பக்கங்களுமே ஒன்று சேர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கின்றன. எப்பொழுது நாணயத்தின் ஒரு பக்கம் தனது தனித்தன்மையை இழக்கிறதோ அல்லது மறு பக்கத்தை இழக்க அனுமதிக்கிறதோ அப்போது அதன் பெறுமதி இழக்கப்பட்டு 'செல்லாக் காசாக' புறக்கணிக்கப்படுகிறது.
இவ்வாறே குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களான கணவனும் மனைவியும் அந்தக் குடும்பத்தின் பெறுமதியை நிலையாக உறுதிப்படுத்துவதற்கு தமது தனித்தன்மையையும் இழக்காமல் அதே நேரத்தில் மற்றவரது தனித் தன்மைக்கும் இழப்பு ஏற்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். ஏனெனில் ஒரு நாணயத்தின் எந்தப் பக்ககம் பெறுமதி இழந்தாலும் அது அந்த நாணயத்தின் ஒட்டு மொத்தமான பெறுமதி இழப்பாகி விடுவது போல் குடும்பம் ஒன்றில் கணவன் மனைவி இருவரில் எவர் தனது பெறுமதியை இழந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரது பெறுமதியை இழக்கச் செய்தாலும் அது குடும்பத்தின் ஒட்டுமொத்தமான பெறுமதி இழப்பாகவே அமைந்துவிடுகின்றது.
No comments:
Post a Comment