Sunday 4 February 2018

ஒப்பீடு

மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் இயற்கையில் உள்ளதை உருமாற்றம் செய்வது மட்டுமே. இயற்கையால் படைக்கப்பட்டவற்றை தனது தேவைக்கேற்ப மாற்றி அமைப்பது தான் மனிதனின் செயற்பாடு. இந்த மாற்றி அமைத்தலுக்குப் பெயர் 'கண்டுபிடிப்பு' என்கிறோம். இங்கே தான் மனிதனின் திறமையின் எல்லை எது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பு மகத்துவமானது. மனிதப் படைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடிய படைப்பு என்று ஒன்று இல்லை.

மிகவும் தனித்துவமான படைப்பாகிய மனிதப்படைப்பு தனக்கென்றே சில தன்மைகளைப் பெற்றுள்ளது வெளிப்படையானதுதான். இருப்பினும் இந்தத் தன்மைகள் வெளிப்படுத்தப்படாமல், அல்லது வெளிப்படுத்த விரும்பினாலும் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதற்கும் மனிதனே காரணமாகின்றான். இவற்றிற்கு அடிப்படையாக அமைவது அவனது தவறான கண்டுபிடிப்புக்களே. அதிசயிக்கத்தக்க பல கண்டுபிடிப்புக்களைத் தந்துதவிய மனிதன் ஒரு சில தவறான, அசிங்கமான அறிவியலுக்கு ஒவ்வாதவற்றையும் கண்டுபிடித்துவிட்டான்.

ஆனால் உணர்வும், மூளையும், விழிப்புணர்வும் கொண்ட ஒரேயொரு இனமான மனித இனம் இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டு பிடித்ததாலோ என்னவோ அது தன்னைத் தானே கொல்லும் ஒன்றாக அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல ஒவ்வொருவரும் தாமாகவே அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதைப் பயன் படுத்துபவர் தன்னைத் தானே கொன்று கொண்டிருப்பதை அறியமுடியாத அளவுக்கு தனது கண்டுபிடிப்புக்குள் அகப்பட்டு அல்லற்படுபடுகின்றனர். அந்தக் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒப்பீடு செய்தல் (Comparison) .

உண்மையில் மனித அறிவீனத்தின் உச்ச நிலைக் கண்டுபிடிப்புத்தான் தான் ஒப்பீடு செய்தல். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒன்றைப்போல் இன்னொன்று படைக்கப்படுவதில்லை. கல்லாகட்டும், மண்ணாகட்டும், மரமாகட்டும், பூவாகட்டும், காயாகட்டும், விலங்குகளாகட்டும், அல்லது மனிதர்களாகட்டும். ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது. அப்படியிருக்கும்போது எதற்காக மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதைக் கண்டுபிடித்தான். நமது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளித்தாலும் அவை எந்த விதத்திலும் எமது தனித்துவத்தைப் பாதிப்பதாக இருப்பதில்லையே. ஏனெனில் தனித்துவம் என்பது எல்லாவற்றையும் விட உயர்ந்ததல்லவா.

ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்பது எம்மால் அறியப்பட்ட ஒன்றாக இருந்தும் கூட ஏனிந்த ஒப்பீடு?. யாருடன் யாரை ஒப்பிடுகிறோம்? எப்படி இது புத்திசாலித்னமானதாக அமையும்? என்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது கோழைத்தனம் அல்லவா. அப்படியிருக்கும் போது கணவனையோ, மனைவியையோ, குழந்தைகளையோ மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யலாமா? உங்களையோ, உங்கள் கணவன் அல்லது மனைவியையோ, குழந்தைகளையோ அல்லது இன்னொரு மனித உயிரையோ உயர்வாக அல்லது தாழ்வாக ஒப்பீடு செய்து பொருத்தமாக்குவதற்கு இதுவரையில் எவரும் பிறந்ததில்லை. வாழ்ந்து கொண்டிருப் பவர்களில் எவருமில்லை. இனிமேல் பிறக்கப்போவதுமில்லை. ஒப்பீடு என்பது நாமாகக் கண்டுபிடித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். நாமாகக் கைவிட்டால் அது தானாகப் போய்விடும்.

No comments:

Post a Comment