நான் இன்று ஒரு கழுதையைப் பார்த்தேன். ‘அடச்சீ… கழுதை! இதெல்லாம் ஒரு
விஷயமா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஏதோ ஒரு கிராமத்தில், அன்றாடம் கழுதை
அல்லது கழுதைகளைப் பார்ப்பவராகக்கூட நீங்கள் இருக்கலாம். ஆனால்,
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், ஒரு மாலை வேளையில், பரபரப்பான
போக்குவரத்துக்கு இடையில் ஒரு கழுதையை எதிர்கொண்டால், உங்களுக்கு எப்படி
இருக்கும்? அந்த லேசான துணுக்குறச்செய்யும் உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது.
‘அட… கழுதை!’ எனப் புறந்தள்ளிவிட்டு, உங்களைப்போல என் ஓட்டை மொபெட்டை,
அதைத் தாண்டி ஓட்டிக்கொண்டு போகிறவன்தான் நானும். ஆனாலும், ஏதோ
ஒருவிதத்தில் அந்தக் கழுதை என்னை வசீகரித்துவிட்டது. சில பழைய
நினைவுகளையும் கிளறிவிட்டுவிட்டது.
மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரி அருகே அதைப் பார்த்ததும் தானாக என் இடது கை டி.வி.எஸ்.50-யின் பிரேக்கை அழுத்திப் பிடித்தது. சந்தடிமிகுந்த நகர நெரிசலில் நிச்சயம் நான் ஒரு கழுதையை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் வைத்திருக்கும் படுமட்டமான செல்போனில், அதனுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என்றுகூட ஒருகணம் தோன்றியது. பின்னால் இருந்து ஹாரனை அலறவிட்ட ஷேர் ஆட்டோக்காரர், அதிக டெசிபலில் ”ஓரமா நில்லுய்யா..!” எனக் கத்தினார். நான் அவசரமாக என் வண்டியை முன்னுக்கு விரட்டினேன். அந்த ‘…’யில் என்னை மகா மட்டரகமாக அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் விளித்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், எதிர்வினை ஆற்ற முடியவில்லை. விருட்டென ஷேர் ஆட்டோ கடந்துபோய்விட்டது. நின்றிருந்தால் மட்டும் என்னால் என்ன செய்திருக்க முடியும்?
சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி பகுதி நெடுஞ்சாலைகளில் அநாயாசமாக யானைகளும் சிறுத்தைகளும் கடந்துபோய்க்கொண்டிருக்க, நான் இங்கே ஒரு கழுதையைப் பார்த்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கழுதையும் பொருட்படுத்தக் கூடிய ஒன்றே. நான் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு, பிழைப்புக்காக இடம்பெயர்ந்து நாடோடி வாழ்க்கை வாழ்கிறவன். எனக்குக் கழுதை ஒன்றும் அவ்வளவு அறிமுகம் இல்லாத ஜீவனும் அல்ல. தேனியில் இருக்கும்போது கூட்டாறு, சடையால் ஆறு, அரண்மனைப்புதூர் ஆறு (இவை எல்லாம் ஆற்றின் வழித்தடத்தில் மக்கள் குளிக்க, துவைக்கப் புழங்கும் இடங்கள்) என முல்லை ஆறு துள்ளி, குதித்து ஓடும் அத்தனை பகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு இந்த இடம் என கணக்குவைத்துக் குளித்தவன். அப்போதெல்லாம் தவறாமல் கழுதைகளைப் பார்த்து அவற்றோடு பரிச்சயம்கொண்டவன்.
தங்கமுத்து அண்ணன் ஏழு கழுதைகள் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் இருந்து நான்காவதாக இருந்தது அவருடைய வீடு. கழுதை என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது பொதி. ‘ஏ யப்பா… அதுக்காக இம்புட்டா?’ என எனக்குத் தோன்றும். ஒவ்வொரு கழுதை மேலும் அம்பாரமாக முடிச்சிடப்பட்ட மூட்டைகள் இருக்கும். மூட்டைக்குள் சட்டை, லுங்கி, வேட்டி, பேன்ட், புடைவை என எல்லாம் கலந்துகிடக்கும். ஐந்தாறு மூட்டைகளை ஒவ்வொரு கழுதையும் சுமந்துகொண்டு செல்லும். அவர், அவருடைய இரு தம்பிகள், கழுதைகள் என குட்டி ஊர்வலமாக அந்தக் குழு பயணம் போவார்கள். தங்கமுத்து அண்ணன் தன் மூடுக்கு ஏற்ப அன்றைக்குச் செல்ல வேண்டிய ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுப்பார். பங்களா மேட்டில் இருந்து மதுரை ரோட்டில் கழுதைகளை ஓட்டிப்போனால், அரண்மனைப்புதூர். ரோட்டைத் தாண்டி, குறுக்குத் தெருவில் இறங்கி, களத்துமேட்டைக் கடந்துபோனால், கூட்டாறு. மதுரை ரோட்டுக்கு நேர் எதிர்ப்புறமாக மூன்றாந்தல் நோக்கிப் போகும் சாலையில் போய், ஆர்.சி ஸ்கூலுக்கு எதிர்ப்புறமாக இடதுபுறம் திரும்பினால், சடையால் ஆறு. அங்கே சடையால் முனீஸ்வரர் கோயில் இருந்தது. ஓர் அமானுஷ்யம் கலந்த பய உணர்வைத் தரும் பகுதி அது. அதனாலேயே அகால வேளைகளில் யாரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள். பேய் பிடித்த பெண்களை அங்கே அழைத்துப்போனால் சரியாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. வயதானவர்கள், கோயிலுக்கு வருகிறவர்கள் என வெகுசிலர்தான் அந்தப் பக்கம் நடமாடுவார்கள். தங்கமுத்து அண்ணனைப் பெரும்பாலும் சடையால் ஆற்றில் பார்க்க முடியாது. ஆற்றில் நீர்வரத்துக் குறையும் சமயங்களில், மேட்டுப்பாங்கான சடையாலைத் தாண்டிய முல்லை ஆறு பாயும் பகுதியில் மட்டும் நீர் தேங்கி நிற்கும் என்பதாலேயே, அந்தப் பக்கம் போவார்.
தன்னுடைய ஏழு கழுதைகளுக்கும் பெயர் வைத்திருந்தார் தங்கமுத்து அண்ணன். அவற்றை யாராவது, ‘கழுதையை ஓரமா நிக்கவெக்கக் கூடாதா?’ என்பதுபோல ஏதாவது சொல்லி, ‘கழுதை’ எனக் குறிப்பிட்டுச் சொன்னால், அவ்வளவுதான்… அவருக்குக் கோபம் வந்துவிடும். கேட்ட ஆளின் தகுதிக்கு ஏற்ப சட்டெனப் பதில் வரும்.
‘மொதலாளி… என்ன இப்பிடி சொல்லிப்புட்டீக… இது தூக்குற மூட்டையில ஒண்ணைத் தூக்கிட்டு இந்த ஆறு வரைக்கும் உங்களால வர முடியுமா?’ என்பார். அல்லது, ‘எலேய்… பெரிய இவன்… இதைப் போயி கழுதைங்கிறே! உன்னிய எவனாவது ‘லேய் மனுஷா… கொஞ்சம் தள்ளி நில்லுறா’ன்னா சொல்றாய்ங்க… ‘பாண்டி, நவுந்து நில்லுடா’ன்னுதானே சொல்றாய்ங்கே… இது மீனாட்சிடா. கழுதைன்னு சொல்லாத’ என்பார்.
நாடார் சரஸ்வதி ஸ்கூலில் சுப்ரமணியம் வாத்தியாரும் ஈ.பி சாரும் கழுதை தொடர்பாகச் சொல்கிற ‘உப்பு-துணி’, முல்லா கழுதையை
நாடுவிட்டு நாடு கடத்தியது’ கதைகளைக் கேட்கிறபோதெல்லாம், தங்கமுத்து அண்ணனின் கழுதைகள்தான் என் நினைவுக்கு வரும். கூடவே அவற்றின் மேல் ஒரு வாஞ்சை பிறக்கும். மனிதர்கள் ஏன் இதை ஓர் அவலட்சணமாக, ‘மந்தம்’ என்ற புத்திக்கு ஈடாகச் சொல்கிறார்கள் என்ற யோசனை வரும். ஒளவைக் கிழவி யாரையோ திட்டுவதற்குப் பயன்படுத்தி இருந்தாலுமேகூட, ‘கழுதையை ஏன் ‘பெரியம்மை வாகனம்… (மூதேவியின் வாகனம்)’ எனக் குறிப்பிட்டாள்?’ என்கிற கேள்வி எழும்.
‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ என்ற பழமொழி கழுதையைக் குறித்துச் சொல்லப்பட்டது அல்ல என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கழுதை உண்மையில் அழகு! குண்டுக் கண்களோடு சிறு குதிரை கணக்காக ஒய்யாரமாகத் தலையை அசைத்து, அசைத்து நடந்துபோவதில் ஆகட்டும், சாய்வாகப் படுத்தபடி வாயை அசைபோடுவதில் ஆகட்டும், வாலைச் சுழற்றி, பல்லைக் காட்டி கத்துவதில் ஆகட்டும், திடீரென வானம் கருக்க, மழைத்துளி விழும்போது லேசாக உடலைச் சிலிர்ப்பதில் ஆகட்டும்… எதில் அதன் அழகு குறைந்துபோனது? அக்ரஹாரத்தில் வைத்து பாரதி செல்லம்
கொஞ்சிய அற்புத ஜீவன் அது. ஒருவேளை அதன் குரல் கர்ணகடூரமாக இருக்கிறது என்பதால் குறைத்து மதிப்பிடுகிறார்களோ! பிறகு ஏன், அது கத்தினால் நல்ல சகுனம் எனச் சொல்கிறார்கள்? இது முரணான விஷயம் அல்லவா?!
‘கழுதைப் பாலில் குளித்தால் மேனி எழில்பெறும்’ என்கிற நம்பிக்கைக்கு நம் ஊர் ஆரவல்லி தொடங்கி, கிளியோபாட்ரா வரை எத்தனையோ அழகிகள் உதாரணமாகத் திகழ்கிறார்கள். கழுதைகள் நல்லவை. எத்தனை பாரம் ஏற்றினாலும் சுணங்காதவை. மனிதர்களுக்கு உதவுவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவை.
தங்கமுத்து அண்ணன் ஒரு கோட்டிக்காரர். புதிதாக யாராவது ஆற்றுக்குக் குளிக்க வந்திருப்பது தெரிந்தால், அவர் வேலை ஆரம்பமாகிவிடும். ‘தம்பி… இங்ஙன வா! இந்தா… நடுவுல இருக்கான்ல. இந்தப் பய… ஆங் அவன்தேன். சின்ராசு… அவன் வாலைத் தொடு பாப்போம்’ என்பார். விவரமானவராக இருந்தால் வாலைத் தொட்டுவிட்டு, சட்டென விலகிவிடுவார். அபாயத்தை உணர்ந்தவராக, தன் பிருஷ்டத்தைப் பின்னால் சட்டென நகர்த்தி, அல்லது எம்பிக் குதித்து தொடையில் அடி வாங்குவதோடு தவிர்த்திருப்பார். வால் தொடப்பட்ட கழுதை பின்னங்கால்களால் உதைக்கும்; உதை சிலபேருக்கு மர்மஸ்தானத்துக்கு வெகு அருகே விழுவதும் உண்டு. மிகுந்த விவரமான ஆளாக இருந்தால், கழுதையைத் தொடாமல், சிரித்து மழுப்பிவிட்டு நகர்ந்துவிடுவார். உதைவாங்கிய நபருக்கு எப்படி இருக்குமோ… எங்களுக்கு எல்லாம் சிரிப்பு ஊற்று எடுக்கும்.
இவ்வளவு யோசனைகளுக்குப் பிறகும் நான் லஸ் சிக்னலைத் தாண்டி இருக்கவில்லை. நகரவாசிகளுக்கு ஞாயிறு என்பது சாபக்கேடு. உறவினர்களும் நண்பர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே ஞாயிற்றுக்கிழமையாகப் பார்த்து திருமணம், வரவேற்பு வைபவம், நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களை நடத்தக் கற்றுக்கொண்டு விட்டார்கள் மனிதர்கள். ‘ஆபீஸ்ல லீவு கிடைக்கலை… மேனேஜர் பெர்மிஷன் தரலை’ போன்ற சாக்குபோக்குகளைச் சொல்ல முடியாது அல்லவா!
என்ன… கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையில், ஃபார்மல் டிரெஸ் இல்லாமல் அக்கடாவென லுங்கியைக் கட்டிக்கொண்டு, பல் தேய்க்காமல்கூட பகலெல்லாம் உறங்க முடியாது. அல்லது கண் வலிக்க வலிக்க ஹெச்.பி.ஓ., ஸ்டார் மூவீஸ் என சேனல்களை கழுதைபோல் மேய முடியாது. வாரம் முழுக்க குழந்தைகள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் எடுத்தெறிந்து, ஏனோதானோவெனச் சொன்னதுபோல பதில் சொல்லாமல், அவர்களின் அறிவு குறித்து, ‘எம் புள்ளையா இது?!’ என வியக்கிற சந்தோஷம் கிடைக்காது. குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம், பல்லில் சிக்கிய வெங்காயத் துணுக்குப்போல உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கும். அதற்குத் தயாராகும் பொருட்டே அத்தனை குட்டி சந்தோஷங்களையும் இழக்கச்செய்யும். இன்று என் மனைவி, குழந்தைகளோடு அவள் உறவினர் வீட்டு ரிசப்ஷனுக்குப் போயிருக்கிறாள்… ஆவடிக்கு. நான், அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அக்கவுன்டன்டின் மகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்துக்காகக் கிளம்பி வந்திருக்கிறேன்… மயிலாப்பூருக்கு!
சூளைமேட்டுக்கும் மயிலாப்பூருக்கும் இடைப்பட்ட தூரம் அப்படி ஒன்றும் அதிகம் அல்ல. இப்படி நினைத்துத்தான் நான் என் வண்டியில் வந்திருந்தேன். வண்டியா அது? அந்தக் கதைக்குப் பிறகு வருவோம். லஸ் சிக்னலில் என் மனைவி திரும்பத் திரும்பச் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ‘ஃபங்ஷன் முடியறதுக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி… முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நீங்க கௌம்பணும். எங்க அக்கவுன்டன்ட் விசாலாட்சி இருக்காளே… அவ கையில இந்த கிஃப்ட்டைக் குடுத்துட்டு, என் வொய்ஃபால வர முடியலை. தப்பா நினைச்சுக்காதீங்க… முக்கியமான ஃபங்ஷன்னு சொல்லிட்டுத்தான் நீங்க வரணும். இல்லைன்னா, நாளைக்கு ஆபீஸ்ல அவ முகத்துல முழிக்க முடியாது. புரியுதா… சும்மா புரிஞ்ச மாதிரி மண்டையை மண்டையை ஆட்டாதீங்க. நீங்க போறது பக்கத்துல; நான் எவ்வளவு தூரம் போறேன்னு ஞாபகத்துல வெச்சுக்கங்க…’ வெகு அழுத்தம்திருத்தமாக பத்து முறைகளாவது இந்த டயலாக்கை அவள் சொல்லியிருப்பாள். அவள் கால் டாக்ஸியில் போகிறாள்… நான் என் ஓட்டை வண்டியில்!
சிக்னலில் பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோவை யதேச்சையாகப் பார்த்தேன். டிரைவர் இருக்கைக்கு முன்னால் இருந்த கண்ணாடிக்கு மேற்புறத்தில் ஒரு சின்னப் படம். அதில் ஒரு கழுதை. மேலே ஒரு வாசகம்… ‘என்னைப் பார் யோகம் வரும்.’ சிக்னல் போட்டுவிட்டதால், ஆட்டோ விருட்டெனப் போய்விட்டது. அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு குமாரமூர்த்தியின் நினைவு வந்துவிட்டது. மூர்த்தி என் நண்பன்… என் ஊர்க்காரன்… ரியல் எஸ்டேட் பிசினஸ். தி.நகரில் மேட்லி ரோட்டில், முன் பக்கம் நூறு கழுதைகளை… மன்னிக்கவும்… ஆறு கார்களை நிறுத்தும் அளவுக்குப் பெரிய அலுவலகம் ஒன்று அவனுக்குச் சொந்தமாக இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் வரவேற்பு மேஜைக்குப் பின்புறம் பெரியதாக 6X8 சைஸில் கழுதை படம் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். அதிலும், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற வாசகம்.
ஒருநாள் பொறுக்க மாட்டாமல் அவனிடம் கேட்டேன்… ‘மூர்த்தி, கழுதைப் படத்தைப் போய் இப்படி பெருசா மாட்டிவெச்சிருக்கியே… வர்றவய்ங்க உன்னைய எப்படி நம்புவாய்ங்க? நீ இன்ஜினீயரிங் படிச்சவன். நீ போயி கழுதைப் படத்தை மாட்டிவைக்கலாமா?’
‘உனக்குத் தெரிஞ்சது அம்புட்டுத்தேன். வெவரமாவும் இருக்கணும்; கொஞ்சம் வெளக்கெண்ணெயாவும் இருக்கணும். அதான்டா பிசினஸு… வர்றவய்ங்களுக்கு ‘ஏ யப்பா… கழுதையவே இம்புட்டு நம்புறானே, நம்பளை நிச்சயம் ஏமாத்த மாட்டான்’னு எண்ணம் வரும். அதனாலதான்டா என் பிசினஸு ஓடுது. ‘சென்னைக்கு அருகே திண்டிவனத்தில் வீடு’ன்னு சொன்னாலும் பிளாட் வாங்குறதுக்கு அட்வான்ஸா புக் பண்ண ஓடி வர்றாய்ங்கே! இவ்வளவு ஏன்… வெள்ளிக்கிழமையானா இந்தக் கழுதை படத்துக்கு ரோசாப்பூ மாலை தொங்குதே… அது நான் போடுறதுன்னு நினைச்சியா? ம்ஹூம். ஒரு கஸ்டமரு குடுத்து அனுப்புறாரு. ஒரு வாரம் போட்டாராம். அவருக்கு என்னமோ நல்லது நடந்துடுச்சாம். அதுக்குப் பிறகு விடாம மாலை போட ஆரம்பிச்சிட்டார். குடுத்துவெச்சதுடா என் கழுதை’ என்றான்.
மயிலாப்பூர் கோயிலுக்கு அருகே இருக்கும் அந்த ஆடிட்டோரியத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. அத்தனை ஜனசந்தடிமிக்க இடம். என் வண்டியை உள்ளே அனுமதிக்க மறுத்தார் செக்யூரிட்டி. ‘உள்ளே இடம் இல்லை சார்… வெளியில நிப்பாட்டுங்க’ என்றார். ரோட்டுக்கு எதிர்ப்புறம் வண்டியை நிறுத்த இடம் காலியாக இருந்தாலும், ’100 மீட்டர் நோ பார்க்கிங்’ என்ற காவல் துறை அறிவிப்புப் பலகை பயமுறுத்தியது. அதற்கான தகுதியே இல்லை என்றாலும், வண்டியை ‘டோ’ பண்ணிக்கொண்டு போய்விட்டால் யார் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைவது? வாசலில் புதிதாக வாங்கிய பாட்டா செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு சாமி கும்பிடப் போன கதையாகிவிடும் என்பதாலேயே அலைந்து திரிந்து, வடக்கு வீதியில் பூட்டியிருந்த ஒரு கடைக் காவலாளியிடம் கெஞ்சி, கூத்தாடி (கையில் 20 ரூபாயை அழுத்தி) வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தேன்.
ஆடிட்டோரியத்தில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. என் மனைவி வேலைபார்க்கும் அலுவலக அக்கவுன்டன்டுக்கு இவ்வளவு வாய்ஸா என்பதுபோல அள்ளியது கூட்டம். உட்கார இடம் இல்லை. பாதிக்குமேல் நரைத்த தலைகள். ‘ஆல் ஆர் வெல்கம்’ போர்டு போட்டால் போதும். மயிலாப்பூர்வாசிகள் இருக்கைகளை ஆக்கிரமிக்க படையெடுத்துவிடுவார்களோ என்றே தோன்றியது. நான் போன நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கவில்லை. அந்த அக்கவுன்டன்ட் லேடி எங்கேயாவது கண்ணில் தென்படுகிறாரா எனப் பார்த்தேன். பார்த்தால், கையோடு கிஃப்ட்டைக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்பது என் எண்ணம்.
மேடையில் திரை விழுந்திருக்க, பக்கவாட்டு லவுட்ஸ்பீக்கரில் லால்குடி ஜெயராமனின் வயலின் இசை ‘பலுகே பங்கார மாயேனா…’ என ததும்பி வழிந்துகொண்டிருந்தது. உட்கார்ந்திருந்த ஒருவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து போக, அந்த இருக்கையைக் கைப்பற்றிவிடும் ஆவேசத்துடன் அந்த வரிசைக்குள் நுழைந்தேன். அமரப் போகும்போது, ‘ஸாரி சார். ஹி ஜஸ்ட் கான் டு தி ரெஸ்ட் ரூம். ஹி வில் பி பேக் சூன்’ என ஆங்கிலம் பொழிந்தார், பக்கத்து இருக்கை நரைத்த தலை மூதாட்டி. ஓட்டும் போட்டுவிட்டு, வேட்பாளரிடம் அடியும் வாங்கிய வாக்காளர்போல் நான் திரும்பினேன். ஏற்கெனவே நான் நின்றிருந்த இடத்தை இப்போது இன்னொருவர் ஆக்கிரமித்திருந்தார். ‘இதுவும் போச்சா..?’ என வடிவேலு பாணியில் எனக்குள்ளேயே முணுமுணுத்துவிட்டு நிற்க இடம் தேடி நகர்ந்தேன்.
ஒருவழியாக இரண்டு நாற்காலி வரிசைகளுக்கு மத்தியில், தரையில் உட்கார இடம் கிடைத்தது. ‘ஹலோ சார்… உக்காருங்க. பிரச்னை இல்லை. இடையில டக்குன்னு எந்திரிச்சிடக் கூடாது. பின்னாடி நாங்க வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கோம்… நினைப்பு இருக்கட்டும்’ என்றார், பல வொயர் பின்னல்களோடு வீடியோ கேமராவை ஏந்தியிருந்த வீடியோகிராபர். நான் மழுப்பலாகச் சிரித்துவிட்டு அமர்ந்தேன்.
ஆட்டம் தொடங்கியது. ‘வாதாபி கணபதிம் பஜே-வில்’ ஆரம்பித்து, ஹைலைட்டான தில்லானா வரை அற்புதமாக ஆடினாள் குழந்தை. மிஞ்சிப்போனால் 11 வயதுதான் இருக்கும். ‘ரெகுலர் கிளாஸ், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம்வொர்க், டியூஷன், எக்ஸாம், மார்க்ஸ்… இவற்றை எல்லாம் தாண்டி இவ்வளவு துல்லியமாக பரதம் ஆட, இந்தக் குழந்தையை எப்படி எல்லாம் பாடாய்ப்படுத்தியிருப்பீர்களோ பாவிகளா!’ எனத் தோன்றியது. ஆட்டம் முடிந்தது.
கூட்டம் அவ்வளவு எளிதாக அரங்கத்தில் இருந்து விடைபெறுவதாக இல்லை. மேடையின் இருபுறமும் தாங்களாக ஒரு க்யூவை வகுத்துக்கொண்டு குழந்தையை வாழ்த்தவும் பரிசளிக்கவும் காத்திருந்தது கூட்டம். நானும் ஒரு வரிசையில் இணைந்துகொண்டேன். மெள்ள ஊர்ந்த வரிசையில் முன்னேறி முகத்தில் திட்டுத்திட்டாகக் கலைந்துபோயிருந்த மேக்கப் பூச்சுகளுக்கு இடையிலும் இன்னமும் ‘பளிச்’ எனச் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தையின் எனர்ஜியை வியந்தேன். மறக்காமல் அக்கவுன்டன்டிடம் என் மனைவியின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘அவங்க ஏன் வரலை?’ என அந்த அம்மாள் கோபப்பட்டாலும், நினைவில் இது இருக்குமே என எனக்கு ஆசுவாசமாக இருந்தது. கிஃப்ட்டைக் கொடுத்துவிட்டு விடைபெற்றபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.
ஒன்வேயாக இருந்தாலுமேகூட திரும்பி வரும் வழியில், மாலையில் பார்த்த அந்தக் கழுதை திரும்பத் தென்படுகிறதா எனப் பார்த்தபடியே மயிலாப்பூர் சிவசாமி சாலையில் வண்டியை மெள்ள ஓட்டினேன். தென்படவில்லை. கழுதையை நினைத்த ராசியோ, பார்த்த ராசியோ… ராதாகிருஷ்ணன் சாலையில், சவேராவுக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடு வழியில் செல்லும்போது, வண்டியின் முன் வீல் பைத்தியம் பிடித்ததுபோல ‘கெக்கேபிக்கே’ என உளற ஆரம்பித்தது… பஞ்சர். இறங்கி, ஒரு கழுதையைத் தள்ளுவதுபோல வண்டியைத் தள்ளி, ஸ்டெல்லா மாரீஸ் காலேஜுக்குப் பக்கத்து சந்தில் பஞ்சர் ஒட்டும் ஒரு கடையைத் தேடிப்பிடித்து பஞ்சர் போட்டு, வீடு வந்து சேரும்போது மணி 12:30.
கதவைத் திறந்த சகதர்மிணி, ‘நாங்கல்லாம் சாப்ட்டோம்… நீங்க சாப்ட்டீங்கல்ல?’ எனக் கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் படுக்கைக்குப் போய்விட்டாள். நான் வெறும் வயிற்றோடு பால்கனியில் பாயை விரித்துப் படுத்தேன்.
திங்கள்கிழமை. எல்லா அலுவலகங்களுக்குமே முக்கிய தினம். அந்த வாரத்தின் வேலை நாட்கள் முழுமைக்குமான திட்டமிடல் தொடங்கும் நாள். நான் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் உதவி கணக்கர். அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். என் ஹெச்.ஓ.டி மெயில் அனுப்பியிருந்தார். அன்றைக்குச் செல்ல வேண்டிய பார்சல்கள், ஊர்கள், பெயர்கள், முகவரிகள், பெண்டிங்கில் டெலிவரி எடுக்காமல் இருக்கும் பார்சல்கள், அவற்றுக்கான நினைவூட்டல்கள், அன்று மதியம் பொது மேலாளருடன் நடக்க இருக்கும் முக்கிய மீட்டிங், அடுத்த மாதம் தொடங்க இருக்கிற ஆடிட்டிங்…
தலை சுற்றுவதுபோல் இருந்தது. நான் தலையைத் தொட்டுப்பார்த்தேன். கலைந்திருப்பதுபோல ஓர் எண்ணம். மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்து, ரெஸ்ட் ரூமுக்குப் போனேன். அங்கே இருந்த பிரமாண்டமான கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். கண்ணாடியில் நான் முதல் நாள், விவேகானந்தா கல்லூரி அருகே பார்த்த கழுதை தெரிந்தது. அச்சு அசலாக அதே கழுதை!

No comments:
Post a Comment