Sunday 4 February 2018

ஓன்று படு(த்)தல்

நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம். ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் ஒன்றை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல் ஒற்றுமை அல்ல. நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு எனப பல்வேறு படிகளில் அமைந்துள்ளது.

இவ்வாறு சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாகவும் அமைந்துள்ளது. தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிடுவதற்கான காரணம் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்து வாழும் சமூகத்தில் தனது அடையாளங்களாக, கலை, கலாச்சாரம், பண்பாடு, மதம், மொழி என எவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டானோ அவற்றைத் தொடர்ச்சியாக நிலைப்படுத்துவதற்கு சேர்ந்து வாழுதல் தவிர்க்க முடியாததாக அமைகின்றது. ஆனால் எமது அடையாளங்களை நிலைப்படுத்துவதற்கு நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஒரே அடையாளங்களை நாம் கொண்டிருந்தாலும் அந்த அடையாளங்களுக்குள்ளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முரண்பாடுகளை உருவாக்கியுள்ளோம்.

சில சந்தர்ப்பங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுதல் ஒற்றுமை எனக் கருதப்படுகின்றது. ஒன்று சேர்ந்து வாழ்தலைப் போல் ஒன்று சேர்ந்து செயற்படுதலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. குடும்பம், சமூகம் என்பவற்றின் இயக்கத்திற்கு அவற்றின் அங்கத்தவர்களது முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள் அவசியமாகின்றன.

ஒரு குடும்பத்தின் அல்லது சமூகத்தின் சிறப்பு என அளவிடப்படுவது அதன் ஒட்டுமொத்த அங்கத்தவர்களது செயற்பாட்டின் பெறுபேறுகள் மட்டுமே. ஆனால், குறிக்கோளை அடைவதற்குத் தேவைப்படும் செயற்பாட்டைப் பெறுவதற்கு வெவ்வேறு அளவிலான அதிகாரம் பயன்படுத்தப் படுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் அதிகாரம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சூழலும் தனித்துவம் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.. ஒற்றுமையின் அடித்தளமே தனித்துவங்களின் சேர்க்கை தான். ஏனெனில் தனித்துவம் ஒப்பீட்டுக்கு இடமளிக்காதது.

ஒற்றுமையின் அடித்தளமாக அமைவது ஒப்பீட்டுக்கு வாய்ப்பு இல்லாதவற்றின் இணைப்புத்தான். இந்த இணைப்பில் ஒப்பீடு இன்மையால் போட்டி இல்லை, பொறாமை இல்லை, முரண்பாடுகளும் இல்லை, இந்த இணைப்பின் செயற்பாட்டுக்கு தமது பங்களிப்பு பெரியதோ அல்லது சிறியதோ என்ற அளவீடுகளும் இல்லை. இணைப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனியாக இயங்கினாலும் சரி அல்லது கூட்டாக இயங்கினாலும் சரி ஒவ்வொரு இயக்கமும் அந்த இணைப்பின் அடிப்படை நோக்கத்திற்கான இயக்கமாகவே அமையும். இத்தனை சிறப்புக்களையும் உள்ளடக்கிய உதாரணம் ஒன்று ஒற்றுமை என்பதற்கு இருக்கின்றதா என்று ஆச்சரியப் படாதீர்கள்.

எமது உடம்பு தான் ஒற்றுமைக்கு அதி சிறந்த உதாரணம். ஒரு உடம்பு, பல்வேறு உறுப்புக்கள், உறுப்புக்களுக்கு இடையில் ஒப்பீடு இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை, சண்டை இல்லை. ஒவ்வொரு உறுப்பும் தனித்துவம் ஆனவை. அதே நேரத்தில் உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினது பங்களிப்பும் அளவீட்டிற்கு அப்பாற்பட்டவை. ஒற்றுமையின் அத்தனை அர்த்தங்களையும், சிறப்புக்களையும் கொண்டிருப்பது எமது உடம்பு தான். உடம்பே ஒற்றுமைக்கு அதி சிறந்த உதாரணம்!

No comments:

Post a Comment