Sunday, 4 February 2018

சித்ரா பௌர்ணமி

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. “சித்திரை மாதம்... பௌர்ணமி நேரம்... முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்...” என கவிஞர்களை பாட்டெழுத வைக்கும் மாதமிது. இத்தனைக்கும் சித்திரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் பொழுது முழுவதும் சூரியன் சுட்டெரிக்கும், வியர்வை மழையில் நனைந்து, உடம்பெல்லாம் கசகசவென்று... அப்பப்பா...! (ஸ்ஸ்... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே..!) ஆயினும் இந்த மாதத்தினை வசந்த காலம் என்கிறோம். பஞ்சாங்கத்திலும் வஸந்த ருது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
ஏன் இந்த முரண்பாடு? நவக்ரகங்களின் தலைவனான சூரியன் தனது முழு வலிமையுடன், அதாவது, உச்ச பலத்துடன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை மாதம். சூரிய பகவானின் தாக்கம் முழுமையாக நிறைந்திருக்கும் காலம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்குரிய நட்சத்திரங்கள். அதிலும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை அக்னி. (‘அக்னிர்ந பாது க்ருத்திகா:’ என்று வேதம் சொல்லும்) மிகவும் உஷ்ணமான நட்சத்திரம். அந்த கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது வெயில் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதற்கு முந்தைய நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள், பிந்தைய நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் என்ற கணக்கில், அதாவது, பரணி நட்சத்திரத்தின் 3வது பாதம் முதல் தொடர்ந்து கார்த்திகை 4 பாதங்கள், ரோகிணி நட்சத்திரம் 2வது பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் நேரமே ‘அக்னி நட்சத்திரம்’ என்றழைக்கப்படும் கத்திரி வெயில் காலம். வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் சுபவிசேஷங்களை மேற்கொள்வதைத் தவிர்த்தனர் நம் முன்னோர்கள்.
தற்கால த்தில் திருமண மண்டபங்கள் குளிர்சாதன வசதியுடன் கூடியது என்பதால் கவலை இல்லை! சரி, வசந்த காலம் என்ற பெயர் ஏன் வந்தது? மாசி, பங்குனி மாதங்கள் இலையுதிர் காலம். முக்கால் வாசி மரங்கள், இலைகள் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளிக்கும். சித்திரை மாதத்தில்தான் அந்த மரங்களில் இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக மரங்கள் முழு வதிலும் பசுமை ஆக்கிரமிக்கும். தாவரவியல் ரீதியாகச் சொல்வதென்றல், சூரியனின் துணையோடு மரங்கள் குளோரோஃபில் எனப்படும் பச்சையம் என்ற ஆகாரத் தினை அடைந்து தங்களை முழு வலிமையாக ஆக்கிக் கொள்ளும்.
அந்த மகிழ்ச்சி யின் வெளிப்பாடாக மாலை நேரத்தில் மெதுவாக அசைந்து தென்றலை வீசும். அம்மியும் பறக்கும் ஆடி மாத அதிரடி காற்றினையும், கார்த்திகை மாதத்து புயலையும் நம்மால் ரசிக்க இயலுமா? அதே நேரத்தில் சித்திரைத் தென்றல் நம்மை சுகமாக வருடிக் கொடுக்கும். மரங்கள் நிறைந்த நிழற்சாலைகளில் (அவென்யூ) வசிப்போர் இதனை அனுபவித்து உணர்ந்திருப்பர். சித்திரை மாதம் என்றவுடன் தற்காலத்தில் தாய்மார்களின் நினைவிற்கு வருவது அக்ஷய திருதியை. அதுவும் கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு இணையாகப் பெண்களால் பேசப்படும் பொன்னாள்.
நகைக்கடை அதிபர்களின் திருவிழா நாள் இது! ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, ஒரு குந்துமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற கருத்து தற்போது வெகுவாகப் பரவியுள்ளது. காரணத்தை ஆராய்வோமா? மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அதுவும் பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்றால் சும்மாவா? மனம் வருந்திய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள்.
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்ற பெயர் வந்தது.
ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள்.
அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும். தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல. திரௌபதிக்கு சூரிய பகவான் அக்ஷய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் மட்டும் சாப்பிடுவதற்காக அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்ய வேண்டும் என்பதற்காக.
அவர்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்பதற்காக. அக்ஷய திருதியை நாளினுடைய உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நாமும் நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
சரி, பௌர்ணமி என்றவுடன் சித்ரா பௌர்ணமி என்ற வார்த்தை கூடவே நினைவிற்கு வருகிறதே, வேறெந்த மாதத்தின் பெயரோடும் பௌர்ணமியை இப்படி இணைத்துச் சொல்வதில்லையே, சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ற சிறப்பு? புராணத்தின் வழியில் பார்த்தால் நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி. இந்த நாளில் ஆலயங்களில் சித்ரகுப்த பூஜை செய்வார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு சித்திரத்தை வரைந்து, சக்தி தேவியின் துணையுடன் அதற்கு உயிரைக் கொடுத்து சித்திரகுப்தன் தோன்றச் செய்ததாகச் சொல்வார்கள்.
ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்றழைப்பார்கள். அதாவது, நமது மனநிலை யைக் குறிக்கும் கோள் சந்திரன். அதனால்தான் பௌர்ணமி நிலவைக் காணும் போது நம்மையும் அறியாமல் நம் மனதில் உற்சாகம் பெருக்கிடுகிறது. உச்ச வலிமையுடன் படு உஷ்ணமாக அமர்ந்திருக்கும் சூரியனுக்கு நேர் எதிரே, சரியாக 180வது பாகையில் துலாம் ராசியில் அமர்ந்து பௌர்ணமி நிலவாக ஒளி வீசும் நாள். துலாம் ராசி சூரியனின் நீச ராசி என்பதும் கவனிக்கத் தக்கது. தந்தையாகிய சூரியன் உஷ்ணமாக தகிக்கும்போது, தாய் ஆகிய சந்திரன் ‘நான் இருக்கிறேன் மகனே, கவலைப்படாதே,’ என்று ஆறுதல் சொல்வதாகப் பொருள் கூறுவர் ஞானியர்.
இந்த சித்ரா பௌர்ணமி நாளில், முழுநிலவின் ஒளியில் வெட்ட வெளியில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பாருங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும். இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைமுறையில் அந்த ஒரு நாளில் மட்டுமாவது நிலவொளி படுகின்ற இடத்தில், கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை முடியா விட்டால் குறைந்தது மொட்டை மாடியில் அமர்ந்தாவது சாதாரண சாப்பாடு ஆக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுப் பாருங்கள், மனதளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். இது உறுதி. “சித்திரையில் ஒரு நிலாச்சோறு” என்று ஒரு இயக்குநர் படமெடுத் தாரே!
மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளை சுறுசுறுப்பானால் நமது இயக்கமும் வேகம் பெறும். இயக்கம் வேகம் பெற்றால் லட்சியத்தை எளிதாக அடைய முடியும். அக்ஷய திருதியையில் அன்னதானமும், சித்ரா பௌர்ணமியில் நிலவொளியில் சமபந்தி போஜனமும் செய்வோம்... வாழ்வினில் வளம் பெறுவோம்... சித்திரையில் முத்திரை பதிப்போம்...!

No comments:

Post a Comment